இவரிடம் இருந்து இப்படியொரு வார்த்தை வருவது எல்லாம் பெரிய விஷயமாச்சே! சந்திரயான் 3 பட்ஜெட் குறித்து எலான் மஸ்க்
இந்தியாவின் சந்திரயான் 3 விண்கல திட்டத்திற்கு மொத்தமாக ஆன செலவு, பிரபல ஹாலிவுட் விண்வெளி திரைப்படமான இண்டர்ஸ்டெல்லர் திரைப்படத்திற்கு ஆன செலவை காட்டிலும் மிகவும் குறைவு என்கிற செய்தி காட்டுத்தீ போல் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், இதற்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஜூலையில் சந்திரயான் 3 விண்கலத்தை நிலவை நோக்கி அனுப்பியதுதான் கடந்த ஒரு மாத காலமாக நாடு முழுவதும் பேச்சாக உள்ளது. ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லூனார் லேண்டர் நிலவின் மேற்பரப்பை சென்றடையும் என அறிவிக்கப்பட்டது. இஸ்ரோ அறிவித்தப்படி, ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிக்கரமாக தரையிறங்கியது.

அதன்பின், ஆகஸ்ட் 23 இரவு 10 மணியளவில் விக்ரம் லேண்டரினுள் பத்திரமாக இருந்த பிராக்யன் ரோவர் வாகனம் வெளியே வந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய துவங்கியது. நிலவில் இவ்வாறு நமது சந்திரயான் 3 திட்ட பணிகள் கணித்தப்படி ஒவ்வொன்றாக சரியாக நடந்துக் கொண்டிருக்க, உலகில் இந்திய மக்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டினரும் இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கல திட்டத்தின் வெற்றியை ஆச்சிரியத்துடன் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக, இந்தியாவின் சந்திரயான் 3 விண்கல பயணத்திற்கு மொத்தமாக செலவிடப்பட்ட தொகை பல ஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டை விட குறைவு என்கிற விஷயம் காட்டுத் தீ போல் இணையத்தில் பரவி வருகிறது. அதிலிலும் குறிப்பாக, விண்வெளி சம்மந்தமான பிரபல ஹாலிவுட் திரைப்படமான இண்டர்ஸ்டெல்லரின் பட்ஜெட்டில் பாதி கூட சந்திரயான் 3 திட்டத்திற்கு செலவாகவில்லை என்கிற தகவல் பலரது கவனத்தை பெற்றுள்ளது.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இண்டர்ஸ்டெல்லர் திரைப்படம் திரைக்கு வந்தது. அழியும் தருவாயில் இருக்கும் உலகில் இருந்து மக்களை காப்பாற்றி வேறோரு கிரகத்திற்கு கொண்டு செல்ல, உயிர் வாழ்வதற்கு ஏற்ற கிரகங்களை தேடி செல்வதுதான் இந்த திரைப்படத்தின் மையக்கரு. அதாவது, சூரியக் குடும்பத்தை தாண்டியுள்ள கிரகங்களையும், கருந்துளையையும் (Black Hole) ஒரே விண்வெளி பயணத்தின் மூலம் ஆய்வு செய்வதுபோல் இந்த திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.

இன்னும் சொல்லப்போனால், உலகின் கடைசி விண்வெளி ஆராய்ச்சி பயணம் இதுதான் என கூறி இண்டர்ஸ்டெல்லர் திரைப்படத்தின் கதையை நகர்த்தி சென்றிருப்பர். எம்மா தாமஸ், லிண்டா ஒப்ஸ்ட் ஆகியோருடன் இணைந்து இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனும் முதலீடு செய்து தயாரித்த இண்டர்ஸ்டெல்லர் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 2014ஆம் காலக்கட்டத்திலேயே சுமார் 16.5 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.1,361.64 கோடி.
இவ்வளவு ஆயிரம் கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர்கள் பூமியை தாண்டி விண்வெளிக்கு கூட செல்லவில்லை. ஆனால், சுமார் 3,84,400 கிமீ தொலைவில் இருக்கும் நிலவை நிஜத்தில் அடைந்துள்ள நம் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கல பயணத்திற்கு மொத்தம் ஆன செலவு வெறும் 7.5 கோடி அமெரிக்க டாலர்கள் மட்டுமே. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.619 கோடி.
அதாவது இன்ஸ்டெல்லர் திரைப்படத்திற்கு ஆன செலவில் பாதி கூட சந்திரயான் 3 திட்டத்திற்கு ஆகவில்லை. இதன் காரணமாகவே, இந்த விஷயம் தற்சமயம் உலகம் முழுவதும் பலரால் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. இது தொடர்பான டுவிட்டர் பதிவு ஒன்றிற்கு கமெண்ட் செய்துள்ள டெஸ்லா சிஇஓ-வும், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் ஒரே வரியில், "இந்தியாவுக்கு நல்லது!" என பதிவிட்டுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தென்னாப்பிரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் தொழில் செய்து வாழ்ந்து வந்தாலும், எலான் மஸ்க்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் இடையே கருத்து வேறுப்பாடு உள்ளதை மறுக்க முடியாது. இதனால், எலானின் இந்த டுவிட்டர் பதிவை வேறு விதமாகவும் நாம் பார்க்கலாம். அதாவது, அமெரிக்காவின் நாசா இதே நிலவு பயணத்திற்கு நிச்சயமாக இந்தியாவை விட அதிகம் செலவு செய்திருக்கும் என்பதை மறைமுகமாக எலான் சுட்டிக்காட்டுகிறாரோ என்னமோ...!!


Click it and Unblock the Notifications