கம்மி மைலேஜ் தரும் காரை தயாரித்த 8 நிறுவனங்களுக்கு ரூ7300 கோடி அபராதம்! மத்திய அரசுக்கு செம வசூல்!
ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு மத்திய அரசு விதிமுறைகளை மீறியதன் காரணமாக ரூபாய் 7300 கோடியை அபராதமாக விதித்துள்ளது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்த விதிமுறை மீறல் நடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்படியாக என்ன விதிமுறைகள் நடந்துள்ளதுஉ என்னென்ன நிறுவனங்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் வாகனங்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்து வரும் நிலையில், இப்படியாக விற்பனை செய்யப்படும் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. மேலும் இந்த வாகனங்களை பயன்படுத்த அதிக அளவிலான எரிபொருள் தேவையும் இருக்கிறது. இந்த எரிபொருளை எல்லாம் மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்கிறது என்பதால் இதை கட்டுப்படுத்துவதற்காக வாகனங்களின் மைலேஜ் மற்றும் மாசு வெளியீடு குறித்து பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய எரிசக்தி அமைச்சகம் தரப்பில் உள்ள எரிபொருள் பயன்பாட்டு கமிட்டி இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்கள் சராசரியாக குறிப்பிட்ட அளவு மைலேஜ் வழங்க வேண்டும் என சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகள் கார்ப்பரேட் ஆவெரேஜ் ப்யூயல் எபிசியன்சி (CAFE) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்த விதிமுறை என்பது ஒரு வாகனம் தயாரிக்கப்பட்டு 100 கிலோ மீட்டர் வரை இயக்கப்பட்டால், அந்த வாகனம் 4.78 லிட்டருக்கு அதிகமான எரிபொருளை செலவு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது. இதுபோல மாசு கட்டுப்பாட்டிற்கும் ஒரு கிலோமீட்டருக்கு 113 கிராமுக்கு மேல் கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டுக்கு முன்னர் இருந்த விதிகளின்படி 100 கிலோ மீட்டருக்கு 5.5 லிட்டர் எரிபொருளை செலவு செய்யலாம் எனவும் ஒரு கிலோமீட்டருக்கு 130 கிராம் வரை கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடலாம் எனவும் விதிகள் இருந்தது. இந்த விதிகள் 2017-18 நிதியாண்டில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2022-23 நிதியாண்டில் இது கட்டுப்படுத்தப்பட்டு மேலே சொன்ன அளவுகளின் படி குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயார் செய்யும் வாகனங்களை எல்லாம் சோதனை செய்து ஒவ்வொரு மாடல் வாகனமும் எவ்வளவு எரிபொருளை எடுத்துக் கொள்கிறது எவ்வளவு மாசு வெளியிடுகிறது என சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி 2022-23 நிதியாண்டில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் எவ்வளவு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது என்ற விபரங்களை வைத்து சராசரியாக கணக்கிடப்படும்.

இப்படியாக கணக்கிடும்போது குறிப்பிட்ட நிதியாண்டில் இந்தியாவில் செயல்பட்டு வரும் எட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி அதிக எரிபொருளை செலவு செய்யும் வாகனங்களையும் அதிகம் மாசுவை வெளியேற்றும் வாகனங்களையும் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போது சுமார் எட்டு நிறுவனங்களிடம் மொத்தம் ரூ 7290.8 கோடியை அபராதமாக வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி இருப்பதிலேயே அதிகபட்சமாக ஹூண்டாய் நிறுவனத்திடம் ரூபாய் 2837.8 கோடியும், மஹிந்திரா நிறுவனத்திடம் ரூ1788 கோடியும், கியா நிறுவனத்திடம் ரூ1346.2 கோடியும், ஹோண்டா நிறுவனத்திலும் 457.7 கோடியும், ரெனால்ட் நிறுவனத்தின் ரூ 438.3 கோடியும், ஸ்கோடா நிறுவனத்திடம் ரூ 248.3 கோடியும், நிஸான் நிறுவனத்திடம் ரூ 122.3 கோடியும், போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் ரூ1.8 கோடியும் அபராதமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பதிலேயே அதிகமாக ஆபராதம் விதிக்கப்பட்டுள்ள ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2022-23 நிதியாண்டில் லாபமாக மட்டும் ரூ4709 கோடியை ஈட்டி உள்ளது. அதில் 60% தற்போது மத்திய அரசுக்கு அபராதமாக செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 2021-22ம் நிதியாண்டிற்க்கான சராசரி மைலேஜ் குறித்த விபரங்கள் தற்போது பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் 2022-23 நிதியாண்டிற்க்கான சராசரி மைலேஜ் விபரங்கள் குறித்த எந்த தகவலும் தற்போது பொதுவெளியில் கிடைக்கவில்லை. இதனால் ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனமும் எவ்வளவு மைலேஜ் மற்றும் மாசு வெளியீடு குறித்து வாகனங்களை வெளியிட்டுள்ளன என்ற விபரங்கள் வெளியாகவில்லை.
2023-24ம் நிதி ஆண்டிற்கான மைலேஜ் மற்றும் மாசு வெளியீடு குறித்த விவரங்கள் தற்போது தயாராகி விட்டாலும், அதற்கு முந்தைய ஆண்டுக்கான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பதால் இந்த விபரமும் தற்போது வெளியிடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த எட்டு நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு முன்னதாக இந்த எட்டு நிறுவனங்களிடமிருந்து இதற்கான விளக்கங்கள் கூறப்பட்டது. அதற்கான சரியான பதில் இல்லை என்பதால் தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எரிபொருள் இறக்குமதி மற்றும் மாசு வெளியீடு குறித்து பல்வேறு சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த விதிமுறைகளை மீறியதற்காக வாங்க தயாரிப்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது தாங்கள் விற்பனை செய்த ஒரு காருக்கு ரூபாய் 25000 விதம் அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தற்போது விவாதங்கள் நடந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications









