உங்க கார்ல இந்த லைட் திடீர்னு எரிஞ்சா என்ன அர்த்தம் தெரியுமா? மேற்கொண்டு ஒரு அடி கூட காரை ஓட்டீராதீங்க!
உங்கள் காரின் டேஷ்போர்டில் ஏராளமான எச்சரிக்கை விளக்குகள் (Dashboard Warning Lights) ஒளிரும். காரில் ஏதேனும் பிரச்னை இருந்தால், அதை டிரைவருக்கு தெரிவிப்பதற்காகவே இந்த வார்னிங் லைட்கள் எரிகின்றன. ஆனால் இந்த வார்னிங் லைட்களை நிறைய பேர் சட்டை செய்வதே கிடையாது.
எனவே பிரச்னையை ஆரம்பத்திலேயே சரி செய்யாமல், நிறைய செலவு செய்ய வேண்டிய நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். இப்படி கார் உரிமையாளர்கள் பலரால் கண்டு கொள்ளாமல் விடப்படும் ஒரு எச்சரிக்கை விளக்குதான், இன்ஜின் டெம்ப்ரேச்சர் வார்னிங் லைட் (Engine Temperature Warning Light).

உங்கள் காரில் இன்ஜின் டெம்ப்ரேச்சர் வார்னிங் லைட் எரிந்தால் அதற்கு என்ன அர்த்தம்? இந்த லைட் எரிகிறது என்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்ற தகவல்களை எல்லாம் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த லைட் எரிவதை கண்டு கொள்ளாமல் நீங்கள் அலட்சியமாக இருந்தால் என்ன நடக்கும்? என்ற கேள்விக்கும் இந்த செய்தியில் விடை உள்ளது.
உங்கள் காரின் இன்ஜின் ஓவர்ஹீட் ஆவதை, அதாவது அதிக சூடு ஆவதை, இன்ஜின் டெம்ப்ரேச்சர் வார்னிங் லைட் குறிக்கிறது. ஒரு காரை குறிப்பிட்ட நேரம்தான் பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை இருக்கும். அதை கடந்தும் நீங்கள் காரை ஓட்டி கொண்டிருந்தால், இந்த லைட் எரிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதுதவிர கூலிங் வாட்டர் குறைவாக இருந்தாலும் அல்லது கூலிங் சிஸ்டத்தில் பிரச்னைகள் இருந்தாலும் கூட, இன்ஜின் டெம்ப்ரேச்சர் வார்னிங் லைட் எரியலாம். மேலும் தெர்மோஸ்டாட் சேதம் அடைந்தாலும் கூட இன்ஜின் டெம்ப்ரேச்சர் வார்னிங் லைட் எரிவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற காரணங்களால் இன்ஜின் டெம்ப்ரேச்சர் வார்னிங் லைட் எரிகிறது என்றால், நீங்கள் உடனடியாக காரை சாலையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி விட வேண்டும். அதன்பின் இன்ஜினை அணைத்து விட்டு, பானெட்டை திறந்து வைத்து விடுங்கள். இன்ஜின் குளிர்ச்சியடைவதற்கு இது கொஞ்சம் உதவி செய்யும்.
ஆனால் இன்ஜின் சூடாக இருக்கும்போது எக்காரணத்தை கொண்டும், ரேடியேட்டரை திறந்து விட வேண்டாம். சுமார் 30 நிமிடங்கள் வரை நீங்கள் பொறுமை காப்பது நன்மை பயக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இன்ஜின் குளிர்ச்சியடைந்ததும், நீங்கள் ரேடியேட்டரை திறந்து கூலண்ட் அளவை பார்க்கலாம்.
ஆனால் இந்த வேலையை க்ளவுஸ், துணி போன்றவற்றின் உதவியுடன் பொறுமையாக செய்யுங்கள். ரேடியேட்டரில் தண்ணீர் அல்லது கூலண்ட் குறைவாக இருப்பது தெரியவந்தால், அவற்றை ஊற்றுங்கள். அத்துடன் அவை கசிவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? என்பதையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து பார்த்து கொள்ளுங்கள்.
இந்த வழிமுறைகள் எதுவும் உதவி செய்யவில்லை என்றால், அதாவது இன்ஜின் டெம்ப்ரேச்சர் வார்னிங் லைட் தொடர்ச்சியாக எரிந்து கொண்டே இருந்தால், உடனடியாக சர்வீஸ் சென்டரை தொடர்பு கொள்வது நல்லது. ஒருவேளை இந்த வார்னிங் லைட்டை நீங்கள் அலட்சியப்படுத்தினால், இன்ஜின் சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
பொதுவாக கார்களின் இன்ஜின் சேதம் அடைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில், ஓவர் ஹீட்டிங் மிகவும் முக்கியமானது. எனவேதான் இன்ஜின் டெம்ப்ரேச்சர் வார்னிங் லைட் எரியும்போது, அதை அலட்சியம் செய்ய கூடாது என நாங்கள் கூறுகிறோம். இன்ஜின் சேதம் அடைந்து விட்டால், நீங்கள் பெரும் தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
இன்ஜின் டெம்ப்ரேச்சர் வார்னிங் லைட் மட்டுமல்லாது, கார்களின் டேஷ்போர்டில் எரியக்கூடிய எந்தவொரு எச்சரிக்கை விளக்கையும் நாம் அலட்சியப்படுத்த கூடாது. காரில் என்ன பிரச்னை? என்பதை அவை நம்மிடம் பேச முயற்சி செய்கின்றன. இது முழுக்க முழுக்க நமது நன்மைக்கான ஒரு ஏற்பாடுதான் என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








