வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ்... மத்திய அரசுக்கு ஒரே கல்லுல எத்தனை மாங்காயோ!!
மத்திய அரசு ஃபாஸ்டேக் (Fastag) முறையை மேலும் எளிமை படுத்தும் விதமாக சமீபத்தில் வருடாந்திர பாஸ் (Annual Pass) முறையை கொண்டுவந்ததை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். வருடத்திற்கு ரூ.3,000 செலுத்தினால் போதும், ஒரு வருடத்தில் 200 முறை சுங்கச்சாவடிகளை வாகனங்களில் கடந்து செல்லலாம். இரு சக்கர வாகனங்கள் எப்போதும் போல் இலவசமாக சுங்கச்சாவடியை கடந்து செல்லலாம். கார்கள் மற்றும் பயணிகளை அழைத்து செல்லும் சிறிய ரக வேன்களுக்கு மட்டுமே வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கமர்ஷியல் வாகனங்களுக்கு கூட இன்னும் அமல்படுத்தப்படவில்லை. சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரத்திற்கு வரிசையில் நிற்பதை குறைக்கும் விதமாகவும், குறைந்த கட்டணத்தில் மக்கள் ஃபாஸ்டேக் முறையை பயன்படுத்தும் விதமாகவும் மத்திய அரசு வருடாந்திர பாஸ் முறையை கொண்டுவந்தது. இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதற்கு இதுதான் முக்கியமான காரணங்கள் என்றாலும், வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் கொண்டுவரப்பட்டதன் விளைவாக நம் மக்கள் இடையே கார்களை பயன்படுத்துவதிலும், மற்ற விஷயங்களிலும் சில மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

அவை என்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் முறையினால் சில எதிர்மறையான விஷயங்களும் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது. அவை என்ன என்பதை பற்றி பின்னர் பார்ப்போம். முதலில் நன்மைகளை பார்த்தோமேயானால், காற்று மாசு கணிசமாக குறைவதற்கு வாய்ப்புள்ளது.
ஏற்கனவே கூறியதுபோல், வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் முறையால் வாகனங்கள் நீண்ட நேரத்துக்கு வரிசையில் காத்திருக்க வேண்டியது குறையும். இதன் மூலமாக வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சுத்தன்மை வாய்ந்த கார்பன் மோனாக்சைடு (CO), நைட்ரஜன் ஆக்சைடு (NOx) போன்ற வாயுக்களின் அளவும் குறையும்.

இது எப்படி சாத்தியம் என்றால், நெடுஞ்சாலைகளில் கார், வேன் போன்ற வாகனங்கள் வேகமாக நீண்ட நேரத்திற்கு சென்றால் கூட மேற்கூறப்பட்ட நச்சு வாயுக்கள் அதிகமாக வராது. அதுவே, நீண்ட நேர பயணத்திற்கு பின் வாகனம் நிற்கும்போதுதான் இந்த வாயுக்கள் அதிகமாக வெளிவருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அப்படியென்றால் யோசித்து பாருங்கள், சுங்கச்சாவடியில் ஒரே இடத்தில் பல வாகனங்கள் வரிசையில் நிற்கும்போது எந்த அளவிற்கு அந்த பகுதி சுவாசிக்க ஏற்ற இடம் இல்லை என்பதை.
இதனால், முடிந்தவரையில் அந்த இடத்தில் இருந்து விலகி சென்றுவிடுவது நல்லது. வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸை எல்லாரும் பயன்படுத்தும்போது, ஒவ்வொருவரும் தங்களது ஃபாஸ்டேக் கட்டணத்தை செலுத்திக் கொண்டு இல்லாமல் பாஸை காண்பித்து விரைவாக அடுத்தவர்களுக்கு வழிவிடுவார்கள். இதன் மூலமாக வரிசையும் வேகமாக முன்னோக்கி செல்லும்.
மேலும் இதன் மூலமாக, நீண்ட நேரத்திற்கு வாகனத்தை நிறுத்தி நிறுத்தி செல்ல வேண்டியதும் குறையும் என்பதால், வாகனங்களின் மைலேஜ் மேம்படும். மேலும், சுங்கச்சாவடிகளிலும், அவை தொடர்பான அலுவலகங்களிலும் காகிதங்களின் தேவை குறைவதுடன், டிஜிட்டல் மயத்தை நோக்கி செல்ல முடியும். இதன் விளைவாக எதிர்காலத்தில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்க வேண்டிய தேவையே இல்லாமலும் போகலாம்.
ஏற்கனவே கூறியதுபோல், வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் முறையால் சில எதிர்மறையான விஷயங்களும் உள்ளன. அதாவது, சுங்கச்சாவடி கட்டணங்களை செலுத்த வேண்டுமே என்பதற்காகவே நம்மில் சிலர் அதிகமாக கார் பயன்படுத்த விரும்புவதில்லை. அதுவே, வருடாந்திர பாஸ் முறை வந்துள்ளதால் அதை பயன்படுத்துவோம் என்பதற்காக பலர் கார்களில் நெடுஞ்சாலை பயணங்களை அதிகமாக மேற்கொள்ள கூடும். இதனால், போக்குவரத்து நெரிசல்களும் உருவாகக்கூடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களை அதிகமாக பயன்படுத்துவதால் அவற்றில் உருவாகும் பழுதுகளுக்கு செலவிட வேண்டியிருக்கும் மற்றும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உருவாகக்கூடும் என்பனவற்றை தவிர்த்து, வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் முறையில் வேறெந்த குறைகளும் இல்லை. ஆதலால், மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தால் நன்மைகள் தான் அதிகமாக உள்ளன.


Click it and Unblock the Notifications








