தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்... இந்த ஊர்காரங்களை எல்லாம் இனி கைலயே பிடிக்க முடியாது...
இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (Vande Bharat Express) தற்போது அதிகளவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மற்ற ரயில்களுடன் ஒப்பிடும்போது டிக்கெட் கட்டணம் (Ticket Price) அதிகம் என்றாலும் கூட, பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதுதான் இதற்கு காரணம்.
இந்த சூழலில், கேரளா (Kerala), தமிழ்நாடு (Tamil Nadu) மற்றும் கர்நாடகா (Karnataka) ஆகிய 3 மாநில மக்கள் பயன்பெறும் வகையில், புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வெகு விரைவில் இயக்கப்படவுள்ளது. அது எர்ணாகுளம்-பெங்களூர் (Ernakulam-Bangalore) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய ரயில் நிலையங்களில், இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், எர்ணாகுளத்தில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் வகையில் அட்டவணை திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதியம் 1.35 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.

பயண நேரம் 8 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்கள் ஆகும். மறுமார்க்கமாக பெங்களூரில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் என கூறப்படுகிறது. பயண நேரம் 8.40 நிமிடங்கள் ஆகும்.
இது உத்தேசமான பயண நேரம்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் பயண நேரம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை நாம் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் தற்போது பல்வேறு கட்டங்களாக லோக்சபா தேர்தல் (Lok Sabha Election) நடைபெற்று வருகிறது. இறுதிகட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது.

அதை தொடர்ந்து வரும் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தல் முடிவடைந்தவுடன், எர்ணாகுளம்-பெங்களூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ஜூன் மாத மைய பகுதியில் இருந்து இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய நிலையில் எர்ணாகுளம்-பெங்களூர் இடையே கேஎஸ்ஆர் பெங்களூர் இன்டர்சிட்டி எஸ்எஃப் எக்ஸ்பிரஸ் ரயில் (KSR Bengaluru InterCity SF Express) இயக்கப்பட்டு வருகிறது. எண்:12678. இந்த ரயிலின் பயண நேரம் 10 மணி நேரம் மற்றும் 40 நிமிடங்கள் ஆகும்.
அதாவது காலை 9.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 7.50 மணிக்குதான் பெங்களூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் காலை 6.10 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் இந்த ரயில், மாலை 4.55 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரயிலின் பயண நேரம் 10 மணி நேரம் மற்றும் 45 நிமிடங்கள் ஆகும். இந்த ரயிலின் எண்: 12677.
இதற்கு மிகச்சிறந்த மாற்றாக புதிய எர்ணாகுளம்-பெங்களூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கும். தற்போது இயங்கி கொண்டுள்ள ரயிலுடன் ஒப்பிடும்போது பயண நேரம் சில மணி நேரம் குறையும் என்பது இதன் சிறப்பம்சமாக இருக்கிறது. அத்துடன் பயணிகள் சொகுசாகவும் பயணம் செய்ய முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போது இயங்கி கொண்டுள்ள எர்ணாகுளம்-பெங்களூர் ரயில், பெரும்பாலான நாட்களில் சுமார் 1 மணி நேரம் தாமதமாகதான் பெங்களூர் சென்றடையும். இந்த ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு இந்த விஷயம் நன்றாகவே தெரியும். எனவே விரைவாக பயணம் செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு, புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வரப்பிரசாதமாக இருக்கும் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








