பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவை உயர்த்த தீவிரம்... இதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவை உயர்த்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முந்தைய ஆண்டு 5 சதவீதம் என்ற நிலையை எட்டிய சூழலில், கொரோனா வைரஸ் பிரச்னைக்கு மத்தியிலும், பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவு 8 சதவீதம் என்ற அளவை 2020-21ம் ஆண்டில் கடக்கும் என பெட்ரோலிய துறை செயலாளர் தருண் கபூர் கூறியுள்ளார். இது தொடர்பாக ஈடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது.

2019ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2020ம் ஆண்டு நவம்பர் காலகட்டத்தில், பெட்ரோலில் கலப்பதற்காக 173 கோடி லிட்டர் எத்தனாலை எண்ணெய் நிறுவனங்கள் பெற்றுள்ளன. ஆனால் கடந்த 2018-19ம் ஆண்டில் எண்ணெய் நிறுவனங்கள் பெற்றிருந்த 189 கோடி லிட்டர்கள் என்ற அளவுடன் ஒப்பிடும்போது இது ஓரளவிற்கு குறைவாகும்.

இருந்தாலும் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவு தொடர்ந்து 5 சதவீதமாகவே உள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக எரிபொருள் விற்பனை மிகவும் குறைவாக இருந்ததே இதற்கு காரணம். ஆனால் வருங்காலங்களில் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவை படிப்படியாக உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி வரும் 2022ம் ஆண்டிற்குள் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே இலக்கு வைத்துள்ளது. அதே சமயம் வரும் 2030ம் ஆண்டிற்குள் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவை 20 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த 20 சதவீத எத்தனால் கலப்பு என்ற இலக்கை அடைவதற்கான ஆண்டை 2030க்கு பதிலாக 2023 அல்லது 2025க்கு மாற்றுவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவை அதிகரிப்பதில் மத்திய அரசு ஆர்வமாக இருப்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு மற்றும் காற்று மாசுபாடு பிரச்னைகளை குறைப்பதற்காகதான் பெட்ரோலில் எத்தனால் கலப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இந்த இரண்டு பிரச்னைகளும் இந்தியாவிற்கு தலைவலியாக இருந்து வருகின்றன. ஆனால் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இந்த பிரச்னைகளுக்கு முடிவு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவையும், காற்று மாசுபாட்டையும் குறைக்கலாம் என்பதுடன் இது விவசாயிகளுக்கும் நன்மை பயப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனால் தவிர சிஎன்ஜி, எல்என்ஜி ஆகிய சுற்றுசூழலுக்கு நட்பான எரிபொருட்களையும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

அத்துடன் இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் காற்று மாசுபாட்டை குறைப்பது என்ற திட்டங்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களும் அதிகம் உதவி செய்யும். மத்திய அரசு மட்டுமல்லாது, மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தொடங்கியுள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








