அரபு நாடுகளுக்கு செக்! பெட்ரோல், டீசல் கார்களுக்கு திடீர் தடை! திடுதிப்புனு வெளியான அரசின் உத்தரவால் பரபரப்பு
உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) மாறி வருகின்றன. இதற்கு 2 முக்கியமான காரணங்கள் உள்ளன. சுற்றுச்சூழல் மாசுபாடு (Environmental Pollution) பிரச்னையை குறைக்க வேண்டும் என்பதுதான் முதல் காரணம்.
பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகையை குறைக்க வேண்டும் என்பது 2வது காரணம். இந்த 2 காரணங்களுக்காக, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை உலகின் பல்வேறு நாடுகளும் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில் எத்தியோப்பியா (Ethiopia) அதிரடியான உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது.

இதன்படி வெளிநாடுகளில் இருந்து இனி எத்தியோப்பியாவிற்கு பெட்ரோல், டீசல் கார்களை இறக்குமதி செய்ய முடியாது. அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். இதன் மூலம் இது போன்ற ஒரு உத்தரவை பிறப்பித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை எத்தியோப்பியா பெற்றுள்ளது.
ஆனால் இந்த உத்தரவு எப்போதில் இருந்து அமலுக்கு வரும்? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. எனினும் இந்த உத்தரவின் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகையை குறைக்க முடியும் என எத்தியோப்பியா நம்புகிறது. அத்துடன் அந்த நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இது உதவி செய்யும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உலகிற்கே முன்னுதாரணமான ஒரு நடவடிக்கையை எத்தியோப்பியா எடுத்துள்ளது என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. எத்தியோப்பியா சந்தையில் எலெக்ட்ரிக் கார் நிறுவனங்கள் பலவும் காலடி எடுத்து வைக்க இந்த நடவடிக்கை உதவி செய்யும் எனவும் நாங்கள் நம்புகிறோம்.
எத்தியோப்பியாவை தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளும் இது போன்ற உத்தரவை பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது இந்தியாவை பொறுத்தவரையில், இங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கிய மாற்றம் மிக வேகமாக நடைபெற்று கொண்டுதான் உள்ளது. ஆனால் எத்தியோப்பியாவை போன்ற உத்தரவுகள் எதுவும் இன்னும் பிறப்பிக்கப்படவில்லை.
அப்படி பிறப்பிக்கப்பட்டால், அது டாடா மோட்டார்ஸ் (Tata Motors) போன்ற நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முதல் இடத்தில் இருந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் மொத்தம் 4 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV), டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் டாடா பன்ச் இவி (Tata Punch EV) ஆகியவை ஆகும்.


Click it and Unblock the Notifications








