3-வீலர் ஆட்டோவை தயாரிக்க இவ்வளவு பெரிய தொழிற்சாலை வேண்டுமா? இந்த மாநிலத்துக்கு தான் கொடுத்து வெச்சிருக்கு!!
இந்தியாவிலும் மற்ற நாடுகளை போன்று எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் நம் நாட்டில் பெருகிவிட்டன. இந்த வரிசையில், மற்றுமொரு இவி நிறுவனம் நாட்டில் அதன் புதிய தொழிற்சாலையை திறக்க உள்ளது. இந்த நிலையில், அந்த தொழிற்சாலையில் எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எந்த இவி நிறுவனம் புதியதாக தொழிற்சாலையை திறக்கிறது? இந்த தொழிற்சாலையின் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக ஆய்லர் மோட்டார்ஸ் (Euler Motors) விளங்குகிறது. 2018ஆம் ஆண்டில் டெல்லியில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் லாஸ்ட்-மைல் கார்கோ டெலிவிரிக்கான எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.

இதன் வெளிப்பாடே, புதிய தொழிற்சாலை ஆகும். ஹரியானா மாநிலம் பல்வால் என்கிற பகுதியில் தொழிற்சாலை மட்டுமல்லாமல் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையத்தையும் ஆய்லர் மோட்டார்ஸ் நிறுவி உள்ளது. மொத்தம் சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில் வருடத்திற்கு அதிகப்பட்சமாக 36 ஆயிரம் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியுமாம்.
மொத்தம் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை தான் ஆய்லர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரதானமான உற்பத்தி தொழிற்சாலையாக விளங்கவுள்ளது. ஆய்லர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் 3-வீலரான ஹைலோடு (HiLoad)-க்கு டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காகவே முக்கியமாக இந்த தொழிற்சாலையை ஆய்லர் நிறுவனம் நிறுவி உள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் தற்போதைக்கு இந்தியாவில் 26 நகரங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த எண்ணிக்கையை வருகிற 2025 ஏப்ரல் மாதத்திற்குள் குறைந்தப்பட்சம் 40ஆக அதிகரிக்கும் முனைப்பில் ஆய்லர் மோட்டார்ஸ் உள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையில் ஆட்டோமேட்டட் அசெம்பிளி லைன் உள்ளது. அதாவது, வாகனத்தின் சில பகுதிகள் தன்னிச்சையாக இயந்திரங்களால் ஒன்று சேர்க்கப்படும். இதன் விளைவாக, வாகன உற்பத்தியில் குறைகள் தவிர்க்கப்படுவது மட்டுமின்றி, தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறையும்.
மேலும், இந்த தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட உள்ள ஒரு சாஃப்ட்வேர் சிஸ்டம் ஆனது உற்பத்தி செய்யப்படுவதில் இருந்து டெலிவிரி செய்யப்படும் வரையில் எலக்ட்ரிக் வாகனங்களை தொடர்ந்து கண்காணிக்கும். மேலும், டைனோ-டெஸ்ட்டிங், மழை சோதனை உள்பட ஏகப்பட்ட வாகன சோதனை அளவீடுகள் இந்த தொழிற்சாலையில் பின்பற்றப்பட உள்ளதாக ஆய்லர் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதற்காகவே நீளமான டெஸ்ட்டிங் டிராக் அமைக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் உண்டாகும் குப்பைகள் மற்றும் கழிவுகளை தகுந்த முறையில் அகற்றுவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய தொழிற்சாலையில் ஆண்களுக்கு இணையாக பெண் தொழிலாளர்களையும் பணியில் அமர்த்த ஆய்லர் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்திய தொழிற்சாலை சட்டம் 1948இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டதாக ஆய்லரின் புதிய பல்வால் தொழிற்சாலை விளங்குகிறது.
ஐ.எஸ்.ஓ 9001 மற்றும் ஐ.எஸ்.ஓ 14001 என இரு சான்றிதழ்களையும் பெற்ற ஒரே கார்கோ இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆய்லர் மோட்டார்ஸ் ஆகும். இவை மட்டுமின்றி, ஐ.எஸ்.ஓ 45001 மற்றும் ஐ.ஏ.டி.எஃப் 16949 சான்றிதழ்களையும் ஆய்லர் மோட்டார்ஸ் பெற்றுள்ளது. மேலும், 2022ஆம் ஆண்டிற்கான அப்போல்லோ விருது மற்றும் ஆட்டோ வேர்ல்டு 40 விருதுகளையும் ஆய்லர் மோட்டார்ஸ் பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டு இருப்பதில் இருந்து ஆய்லர் மோட்டார்ஸின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தொடர்ந்து டிமாண்ட் அதிகரித்து வருவதை அறிய முடிகிறது. புதிய தொழிற்சாலையில் உற்பத்தி பணிகள் எப்போது துவங்கப்படும் என்பது குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை.


Click it and Unblock the Notifications









