இதற்கெல்லாம் கூடவா மானியம் தராங்க? வண்டி வாங்கிய ஐந்தே நாட்களில் பேங்க் அக்கவுண்ட்டுக்கு காசு வந்துடும்!
எலக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு விதமான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதிதான் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மத்திய அரசாங்கம் சார்பில் மானியம் வழங்கப்படுவது ஆகும்.
பெட்ரோல்/ டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதை ஊக்கப்படுத்தும் விதமாகவும், மற்றவர்களை வாங்க வைக்கும் முயற்சியாகவும் அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தை பெற நீங்கள் எலக்ட்ரிக் வாகனத்தை வாங்கியதற்கான ஆதாரங்களை காண்பித்து 40 நாட்கள் வரையில் காத்திருக்க வேண்டி இருந்தது. 40 நாட்கள் என்பது கொஞ்சம் அதிகமாக இருந்ததால், சில இவி ஓனர்கள் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது எலக்ட்ரிக் வாகனத்திற்கான மானியத்தை வெறும் 5 நாட்களில் பெறலாம் என மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எம்டி குமாரசாமியின் தலைமையின் கீழ் தற்சமயம் செயல்படும் மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கீழ்தான் ஆட்டோமொபைல் (Automobile) துறை வருகிறது.
இதனால், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை எல்லாம் மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் தான் கவனித்துக் கொள்கிறது. எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு மானியம் வழங்குவதை 'பிஎம் இ-டிரைவ்' (PM E Drive) என்கிற திட்டத்தின் வாயிலாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் கவனித்து வருகிறது.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை சமீப ஆண்டுகளில் அதிகரித்து இருப்பதில் பிஎம் இ-டிரைவ் திட்டத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது ஆகும். இந்த திட்டத்தின் கீழ் மானியம் வழங்கும்போது, எலக்ட்ரிக் வாகனங்கள் உண்மையில் வாங்கப்பட்டுள்ளதா, அதற்கு இவர்தான் உரிமையாளரா என ஒவ்வொருவரையும் ஆவணங்கள் மூலமாக அதிகமாக சோதனை செய்ய வேண்டி இருந்தது.
இதற்கு தற்போது மென்தொழிற்நுட்பம் மூலம் மத்திய அரசு விடை கண்டறிந்துள்ளது. அதாவது, பிஎம் இ-டிரைவ் மொபைல் செயலி அல்லது இணையத்தள பக்கத்தை அணுகும் பயனர்களை ஏற்கனவே அடையாளம் கண்டு வைத்திருப்பதன் மூலம், அவர்கள் எலக்ட்ரிக் வாகனத்தை வாங்கும்போது சரிப்பார்ப்பு பணிகள் குறைவதால் விரைவாக மானியத்தை வழங்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
பயனர்களை விரைவாக அடையாளம் காண ஆதார் (Aadhaar) அட்டையை பயன்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, பிஎம் இ-டிரைவ் மொபைல் செயலி மற்றும் இணையத்தள பக்கத்தில் பயனர்கள் தங்களது அடையாளத்தை உறுதி செய்ய இ-கே.ஒய்.சி (e-KYC) அப்டேட் செய்திருக்க வேண்டும். ஆதார் அட்டையில் இருப்பவர் தான் மொபைலி செயலி அல்லது இணையத்தள பக்கத்தை பயன்படுத்துகிறாரா என்பதை தெரிந்துக் கொள்ள கேமராவில் முகத்தை காண்பிக்க வேண்டும்.
முன்னரும் இதே செயல்பாடுகள் தான் நடைமுறையில் இருந்தன என்றாலும், தற்போது இந்த செயல்பாடுகளை மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் விரைவுப்படுத்தி உள்ளது. மேலும் ஏற்கனவே நிலுவையில் இருக்கும் சுமார் 1.26 லட்ச எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு விரைவாக மானியம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 1.26 லட்சம் இவி ஓனர்களில் கிட்டத்தட்ட 1.09 லட்சம் பேர் எலக்ட்ரிக் 2-வீலர் ஓனர்களாவர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதில் நிலுவையில் உள்ள எலக்ட்ரிக் 2-வீலர் ஓனர்களின் எண்ணிக்கையை வைத்து இந்தியாவில் தற்சமயம் எலக்ட்ரிக் 2-வீலர்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது என்பதை அறியலாம். பிஎம் இ-டிரைவ் திட்டம் ஆனது 2026 மார்ச் 31ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது. ஆனால், இதற்கு முன்னதாகவே இந்த திட்டம் நிறுத்தப்படலாம் என்கிற பேச்சும் பரவி வருகிறது. இந்த நிலையில், மானியம் வழங்கப்படுவது வேகப்படுத்தப்பட்டு உள்ளதால், நிலுவையில் உள்ள இவி ஓனர்களை முடித்துக் கொண்டு திட்டம் நிறுத்தப்படலாம்.


Click it and Unblock the Notifications








