முன்னணி கார் நிறுவனங்களின் பெயர்களும், சுவாரஸ்யங்களும்!!

பெயர் என்பது அடையாளப்படுத்துவதாக இருந்தாலும், கபாலி போன்று சில பெயர்கள் அதிக ஈர்ப்பை கொண்டிருக்கின்றன. குழந்தைக்கு பெயரிடும்போது பல நேரங்களில் தலையை பிய்த்துக் கொள்ளவும் காரணமாகிவிடுகிறது. இந்தநிலையில், கோடியாய் கோடியாய் கொட்டி செய்யப்படும் வியாபாரத்திற்கு பிராண்டு பெயர் மிக முக்கியமானதாக அமைந்துவிடுகிறது.

அதனால் என்னவோ, பல வாகன நிறுவனங்கள் தற்போது பல கோடிகளை வாரி இறைத்து பெயரிடுகின்றன. சமீபத்தில் ஹீரோ ஹோண்டா கூட்டணியிலிருந்து ஹோண்டா பிரிந்ததையடுத்து, ஹீரோ நிறுவனம் புதிய பெயரில் இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக, ஒரு நிறுவனத்தை பணியமர்த்தி, அந்த நிறுவனத்திற்கு பல கோடிகளை கொட்டிக் கொடுத்தது. இவ்வாறு, பிராண்டு பெயருக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்திருக்கும் நிலையில், உலகம் முழுவதும் வியாபித்து நிற்கும் பல முன்னணி கார் நிறுவனங்களின் பெயர் பிறந்த சுவாரஸ்யக் கதையை சுருக்கமாக இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. நிசான்

01. நிசான்

ஜப்பானிய கார் நிறுவனமான நிசான் DAT Motorcar என்ற பெயரில்தான் முதலில் துவங்கப்பட்டது. அந்த நிறுவனத்தை நிறுவிய மூன்று ஸ்தாபகர்களின் முதல் எழுத்துக்களை சேர்த்து DAT என்று பெயரிடப்பட்டது. மேலும், அந்த நிறுவனத்தின் முதல் கார் DATSON என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அதன் பின்னர், நிப்பான் சாங்யோ நிறுவனத்தின் அதிபரான யசோஷுக் அக்காவா DAT மோட்டார்கார் நிறுவனத்தை வாங்கியதுடன், தனது நிப்பான் சாங்யோ நிறுவனத்தின் பிராண்டு பெயரை பிரதிபலிக்கும் விதத்தில், நிசான் என்று பெயரிட்டார்.

02. டொயோட்டா

02. டொயோட்டா

1926ம் ஆண்டு நூற்பாலையாக தொடங்கப்பட்ட டொயோட்டா ஆட்டோமேட்டிக் லூம் ஒர்க்ஸ் நிறுவனம்தான் பின்னாளில் உலகின் மாபெரும் கார் தயாரிப்பு நிறுவனமாக மாறியது. இந்த நிறுவனத்தை ஸ்தாபகம் செய்த Toyodaவின் மகன் கிச்சிரோ என்பவர் கார்களை டொயோட்டாவின் ஒரு பிரிவாக நிறுவி தயாரிக்கத் துவங்கினார். சந்தைப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு தனி அடையாளம் தேவைப்பட்ட நிலையில், நிறுவனர் Toyodaவின் பெயரில் சிறிய மாற்றங்களை செய்து Toyota என்ற பெயரை அறிவித்தனர்.

 03. கிறிஸ்லர்

03. கிறிஸ்லர்

தற்போது இத்தாலியை சேர்ந்த ஃபியட் கிறிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிறிஸ்லர் நிறுவனத்தின் ஸ்பாகரின் பெயரிலேயே இந்த நிறுவனம் இன்று வரை அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் ரயில்வே மெக்கானிக்காக பணியாற்றி கிறிஸ்லர் திடீரென வேலையை உதறிவிட்டு, புயிக் கார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அசாத்திய திறமையை வெளிப்படுத்தியதால், சில ஆண்டுகளிலேயே புயிக் நிறுவனத்தின் தலைவர் பொறுப்புக்கு உயர்ந்தார். சில ஆண்டுகளில் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறிய அவர் வில்லிஸ் ஓவர்லேண்ட் மோட்டார் கம்பெனியை கையகப்படுத்த முயன்றார். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர், மேக்ஸ்வெல் மோட்டார் கம்பெனியில் முதலீடு செய்த அவர், 1924ம் ஆண்டு அந்த பிராண்டில் கிறிஸ்லர் என்ற தனது பெயரில் புதிய காரை அறிமுகம் செய்தார். அந்த காருக்கு அதிக வரவேற்பு கிடைத்ததையடுத்து, மேக்ஸ்வெல் பெயர் மறைந்து கிறிஸ்லர் பெயர் பயன்பாட்டிற்கு வந்தது.

 04. ஹோண்டா

04. ஹோண்டா

ஜப்பானிய நிறுவனமான ஹோண்டாவின் பெயர், அதன் நிறுவனரான சோய்ஷிரோ ஹோண்டா பெயரிலிருந்து பிறந்தது. மெக்கானிக்கான ஹோண்டா 1960ம் ஆண்டுகளில் சிறிய ரக மோட்டார்சைக்கிள்களை தயாரித்து விற்பனை செய்தார். அதற்கு கிடைத்த அமோக வரவேற்பையடுத்து, ஹோண்டா மோட்டார் கம்பெனி நான்கு சக்கர வாகன தயாரிப்பிலும் இறங்கியது. 1963ம் ஆண்டு ஹோண்டா டி360 என்ற பிக்கப் டிரக் மாடல் அறிமுகம் செய்தனர். இன்று உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன நிறுவனமாக இருப்பதோடு, கார் தயாரிப்பு, விமான தயாரிப்பு, எந்திர மனிதன், விவசாய கருவிகள் தயாரிப்பு என பல் துறையிலும் வெற்றிகரமான நிறுவனமாக விளங்குகிறது.

05. புயிக்

05. புயிக்

ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த டேவிட் டன்பர் புயிக் வார்ப்பிரும்பில் செய்யப்படும் குளியல் தொட்டிகளை தயாரிப்பதில் கெட்டிக்காரராக இருந்தார். 1902ம் ஆண்டில் தனது புயிக் நிறுவனத்தில் வார்ப்பிரும்பில் எஞ்சின்களை தயார் செய்யும் நுணுக்கத்தையும் துவங்கினார். முதலில் தோல்விகள் ஏற்பட்டாலும், தொடர் முயற்சிகளால் வெற்றி கண்டார். அவர் தயாரித்த கொடுத்த கார்களின் எஞ்சின்களின் தரமும், தொழில்நுட்பமும் அப்போது இருந்த பிற கார்களைவிட மிகச் சிறந்ததாக இருந்தது. இதனால், வரவேற்பும் அதிகரித்தது. ஆனால், போதிய முதலீடு இல்லாததால், குறித்த நேரத்தில் கார்களை டெலிவிரி கொடுக்க முடியாமல் தவித்தார். தொடர்ந்து முதலீடு தேவைப்பட்டதால், 1908ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் தனது நிறுவனத்தை விற்பனை செய்தார். புயிக் நிறுவனத்திற்காக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் அப்போதே, ஒரு லட்சம் டாலர்களுக்கான காசோலையை ஒரே பேமண்ட்டாக கொடுத்தார். அதை வாங்கி ஒரு எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அதுவும் திவாலானது. பின்னர், டெட்ராய்ட் ஸ்கூல் ஆஃப் டிரேட்ஸ் என்ற கல்வி நிறுவனத்தில் பயிற்றுனராக சேர்ந்தார். அவரது துரதிருஷ்டம் அவரை விடவில்லை. பயிற்றுனராக இருந்த அவரை அந்த கல்வி நிறுவனம் வரவேற்பாளர் பணிக்கு பதவி இறக்கம் செய்தது. கடைசியில் கையில் நயா பைசா இல்லாமல் 1929ம் ஆண்டு மரணமடைந்தார்.

06. ஷெவ்ரோலே

06. ஷெவ்ரோலே

புயிக் எப்படி துரதிருஷ்டம் பிடித்தவரோ, அதே போன்று அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் ஸ்தாபகர் துரந்திற்கும் ஏற்பட்டது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற வேண்டிய துர்பாக்கியம் துரந்திற்கு ஏற்பட்டது. ஆனால், புயிக் போல இல்லாமல் சுதாரித்துக் கொண்ட துரந்த், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் லூயிஸ் ஷெவ்ரோலேயுடன் கைகோர்த்து, 1911ம் ஆண்டு கார் தயாரிப்பில் இறங்கினார். மேலும், அவரது கூட்டாளியான லூயிஸ் செவ்ரோலே பெயரிலேயே அந்த கார் நிறுவனமும் ஆரம்பிக்கப்பட்டு, இன்று உலக அளவில் பிரபலமான நிறுவனமாக விளங்குகிறது.

07. டாட்ஜ்

07. டாட்ஜ்

அமெரிக்காவை சேர்ந்த ஜான் மற்றும் ஹோரேஸ் டாட்ஜ் ஆகிய சகோதரர்களின் பெயரில் உருவானதுதான் டாட்ஜ். இருவரும் திறமையான எந்திரவியல் நிபுணர்கள். 1890களில் மிதிவண்டி தயாரிப்பில் துவங்கிய இவர்களது வாகன துறை பயணம் பின்னர், கார்களுக்கான கியர்பாக்ஸ்களை தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்தது. மேலும் ,1913ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனத்துக்கு சப்ளையர் ஒப்பந்தத்தை முறித்துவிட்டு, சொந்தமாக கார் தயாரிப்பில் ஈடுபட்டனர். வெகு பிரபலமாக மாறிய டாட்ஜ் நிறுவனம், பின்னர் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக உயர்ந்தது.

08. மெர்சிடிஸ் பென்ஸ்

08. மெர்சிடிஸ் பென்ஸ்

இன்று உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் பெயர் காரணமும் சுவாரஸ்யம் மிகுந்ததே. ஆஸ்திரியாவை சேர்ந்த வர்த்தகரான எமில் ஜெலினெக் என்பவர் ஐரோப்பாவில் நடைபெறும் கார் பந்தயங்களில் டெய்ம்லர் கார்களை பயன்படுத்தினார். மேலும், டெய்ம்லர் கார்களை ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்டிருந்ததுடன், தனது 12வயது மகளான மெர்சிடிஸ் பெயரில் டெய்ம்லர் கார்களை பெயரிட்டு பந்தயங்களில் பயன்படுத்தினார். மேலும், 36 கார்களுக்கு கொடுத்த எமில் ஜெலினெக் டெய்ம்லரிடம் ஒரு கண்டிஷன் போட்டார். அந்த கார்களை தனது மகள் மெர்சிடிஸ் பென்ஸ் பெயரில் இருக்க வேண்டும் என்பதுதான் அந்த கண்டிஷன். அதற்கு டெய்ம்லர் ஒப்புக்கொண்டது. அதன்பிறகு தனது வாடிக்கையாளர்களின் நினைவாக சொகுசு கார் தயாரிப்பு பிராண்டிற்கு தனது வாடிக்கையாளர் மற்றும் ஸ்தாபகர் நினைவாக மெர்சிடிஸ் பென்ஸ் என்று பெயரிட்டது.

09. வால்வோ

09. வால்வோ

லத்தீன் மொழியில் நான் உருள்கிறேன் என்று பொருள்படும் வார்த்தையான வால்வோ முதலில் எஸ்கேஎஃப் என்ற பெயரில் பால் பேரிங் தயாரிக்கும் நிறுவனமாக செயல்பட்டது. 1915ம் ஆண்டில் வால்வோ என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு, மிதிவண்டி உள்பட பல வாகனங்களை தயாரிக்கத் துவங்கியது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த இந்த நிறுவனம் 1926ம் ஆண்டு கார் தயாரிப்பை துவங்கியது.

10. கேடில்லாக்

10. கேடில்லாக்

உலகின் மிக பழமையான கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று கேடில்லாக். இந்த நிறுவனத்தை துவங்கிய அன்டோனி டி லா மோதி கேடில்லாக் என்பவரின் கடைசி பெயரிலேயே நிறுவப்பட்டது. சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற இந்த நிறுவனத்தை 1909ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் வாங்கியது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Ever Wondered How These car Companies Got Their Names? This Is How.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X