ஆடம்பரம் இல்லாத மனுஷன்.. இப்பவும் இந்த பழைய காரை ரத்தன் டாடா பயன்படுத்துகிறாரா!..
இந்தியாவின் பெரும் பணக்காரர், அதேவேளையில், மிகவும் எளிமையான ஓர் நபராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார் ரத்தன் டாடா. வாகனங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராகவும் இவர் காட்சியளிக்கின்றார். இதற்கு சான்றாக அவரிடத்தில் அரிய வகை கார்கள் பல பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், அவரிடத்தில் இருக்கும் ஓர் அரிய வகை கார் மாடல் பற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். ரத்தன் டாடாவிடம் விலை உயர்ந்த கார்களைப் போலவே எளிமையான கார்களுக்கும் இடம் உண்டு. அந்தவகையில், ஏழைகளுக்கான வாகனம் என கூறப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட டாடா நானோகூட அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றது.
இதேபோல், அவரிடத்தில் இருக்கும் மிக முக்கியமான கார் மாடல்களில் ஒன்றாக லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 (Land Rover Freelander 2) இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இது ஓர் ஸ்பெஷலான கார் மாடலும்கூட. 2009 ஆம் ஆண்டு மாடலே இந்த லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 ஆகும்.

Image Courtesy பெரும் பணக்காரராக இருந்தும், குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் எனும் பெரும் சாம்ராஜ்யத்தை கட்டியாண்ட நபராக இருந்தும், அவர் இப்போதும் ஓர் பழைய கார் மாடலில் வலம் வந்துக் கொண்டிருப்பதுதான் ஆச்சரியமே. இதுவே அவரின் எளிமைக்கு சான்றாக இருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு மாடலாக இருந்தாலும், லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 இப்போதும் ஷோரூமில் இருந்து இறக்கியதைப் போல புத்தம் புதியது போல காட்சியளிக்கின்றது.
இந்த காரின் புகைப்படங்களே தற்போது வெளியாகி உள்ளன. இந்த படங்கள், 2009 ஆம் ஆண்டு லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 எந்த அளவிற்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றது என்பதை வெளிக்காட்டுகின்றது. இந்த படங்களை நமஸ்தே கார் எனும் முகநூல் பக்கமே பகிர்ந்துள்ளது.

ரத்தன் டாடா வைத்திருக்கும் லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2, சாம்பல் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. அதில் ஒரு சிறு ஸ்கிராட்கூட இல்லாமல் இருப்பதை நம்மால் இந்த படங்கள் வாயிலாகக் காண முடிகின்றது. இதன் வாயிலாக ரத்தன் டாடா கார்களுக்கு எந்த அளவிற்கு அதிக முக்கியத்துவத்தை வழங்குகிறார் என்பது தெரிய வருகின்றது.
லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 ஓர் ஆடம்பர வகை எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், பன்முக ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் இருக்கைகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகிய அம்சங்களையே இந்த கார் தன்னுள் தாங்கியிருக்கின்றது.

இதுதவிர, கூடுதலாக பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை, ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா மற்றும் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான சென்சார்கள் ஆகியவற்றையும் இந்த கார் கொண்டிருக்கின்றது. இந்த அம்சம் இன்றைய காலகட்டத்தில் ஆரம்ப நிலை கார் மாடல்களில்கூட கிடைக்கலாம். ஆனால், 2009 போன்ற காலகட்டத்தில் விலை உயர்ந்த பிரீமியம் கார்களில் மட்டுமே இந்த அம்சங்கள் அனைத்தையும் காண முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
மேலும், அன்றைய காலகட்டத்தில் இந்த கார் மாடல் ரூ. 37.01 லட்சம் என்கிற விலையிலேயே விற்கப்பட்டது. அது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் மாடலுக்கு ரீ-பிளேஸாகவே லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.
அதேவேளையில் ரத்தன் டாடா இந்த கார் மாடலை மட்டுமே தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. அதை தயாரிக்கும் கார் கம்பெனியையே தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் ஆகிய இரண்டையும் ஃபோர்டு நிறுவனத்திடம் இருந்து ரத்தன் டாடாவே கையகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரத்தன் டாடாவிடம் லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவி கார் மட்டுமில்லைங்க ஃபெர்ராரி கலிஃபோர்னியா (Ferrari California), கடில்லாக் எக்ஸ்எல்ஆர் கன்வர்டபிள் (Cadillac XLR convertible), மெர்சிடிஸ் பென்ஸ் 500 எஸ்எல் (Mercedes-Benz 500 SL), மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ 124 (Mercedes-Benz W124), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் (Mercedes-Benz S-Class) மற்றும் க்ரைஸ்லர் செப்ரிங் (Chrysler Sebring) போன்ற அரிய வகை கார் மாடல்களும் பயன்பாட்டில் உள்ளன.
இதுதவிர, மின்சார வாகனமாக மாற்றப்பட்ட நானோ (Tata Nano EV), டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா இன்டிகோ மரினா (Tata Indigo Marina), ஹோண்டா சிவிக் (Honda Civic) ஆகிய கார் மாடல்களும் ரத்தன் டாடாவிடம் உள்ளன. கூடுதலாக, சில விண்டேஜ் (vintage) வகை கார்களும் அவரிடத்தில் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரத்தன் டாடா கார்கள் மீது மிகவும் பிரியம் கொண்டவர் ஆவார். இதன் வெளிப்பாடாகவே இந்த லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 இருக்கின்றது. அதை அவர் பராமரித்து வரும் விதம் மற்றும் இப்போது அந்த காரை அவர் பயன்படுத்தி வருவது என அனைத்தும் ஆச்சரியத்தின் உச்சமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









