பெத்த புள்ளைய மாதிரி பாத்துக்க வேண்டிய கார இப்படி கைவிட்டுட்டாங்களே! எது இந்த காரு திரைப்பட தயாரிப்பாளருடையதா!
பழைய தகர-டப்பா கார்களை தூக்கிப் போடவே யோசிக்கும் நபர்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில், ஒரு சிலர் மிக மிக விலை உயர்ந்த கார்களை அசால்டாக சாலையோரத்தில் கைவிட்டு சென்ற வண்ணம் இருக்கின்றனர். பெரும்பாலும் பண மோசடியில் ஈடுபட்டவர்களே இத்தகைய காரியத்தைச் செய்வார்கள். நாடு விட்டு நாடு தப்பிக்கும்போது தங்களுடைய பெரும்பாலான உடைமைகளை அவர்கள் விட்டுச் செல்வது வழக்கம். அந்தவகையில், தங்களுக்கு சொந்தமான விலை உயர்ந்த ஆடம்பர கார்களையும் அவர்கள் சாலையோரத்தில் விட்டுச் செல்வார்கள். கேட்பாரற்று கிடக்கும் அந்த கார்கள் நாளடைவில் மழை, வெயில் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு துருவிற்கு இரையாகத் தொடங்கிவிடும்.
இந்த மாதிரியான நிலையிலேயே தற்போது மிக மிக விலை உயர்ந்த காராகவும் மற்றும் அரிய வகை காராகவும் கருதப்படும் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்போர்ட் (Bentley Continental GT sport) கார் ஒன்று தள்ளப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கார் பற்றிய விபரங்களையும், படங்களையும் ஆட்டோ லக்சூரி இன் இந்தியா எனும் இன்ஸ்டா பக்கம் வெளியிட்டுள்ளது.

அது வெளியிட்டு இருக்கும் தகவலின்படி, கேரளா பதிவு எண் பலகையைக் கொண்டிருக்கும் அந்த கார் மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ்-க்கு சொந்தமானது என்பது தெரிய வந்திருக்கின்றது. பலர் இந்த கார் அவருடையதுதான் என உறுதியாக நம்புகின்றனர். ஜோபி ஜார்ஜ் மிகப் பெரிய சொகுசு கார் காதலர் ஆவார்.
இதனால்தான் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்போர்ட் அவருடையது என்ற பலர் ஆணித் தரமாக நம்புகின்றனர். இதற்கேற்ப அவருடைய சமூக வலைதள பக்கங்களும் உள்ளன. அவரிடம் ஏகப்பட்ட விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் இருப்பதை அவரின் சமூக வலைதள பதிவுகள் உறுதி செய்கின்றன.
அந்தவகையில், ஜோபி ஜார்ஜ் இடம் ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி உருஸ் எஸ்யூவி மற்றும் தற்போதைய புதிய தலைமுறை லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி போன்ற பல விலையுயர்ந்த மற்றும் கவர்ச்சியான கார்கள் அவரிடம் இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இதுதவிர, அவருடைய இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தை ஓர் அலசல் செய்ததில் அவரிடத்தில் லெக்சஸ் சொகுசு எஸ்யூவி கார் இருப்பதையும் அறிய முடிந்தது.
ஆகையால், மிக மிகப் பெரிய கார் காதலர் அவர் என்பது தெளிவாக தெரிகின்றது. அதேவேளையில், மற்றொரு பக்கம் ஜோபி ஜார்ஜ் தனக்குச் சொந்தமான இந்த பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்போர்ட் காரை வேறொரு நபருக்கு விற்றுவிட்டதாகக் கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆன்லைனில் விவரங்களைச் சரிபார்த்தபோது, அந்த காரை ஜோபி ஜார்ஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே வேறொரு நபருக்கு விற்றிருப்பது தெரிய வந்தது.
எனவே பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்போர்ட் காரின் இந்த நிலைமைக்கு அதன் புதிய உரிமையாளரே காரணம் என்பது தெரிய வந்திருக்கின்றது. அது தற்போது தூசிக்கும், துருவிற்கும் ஆளாகத் தொடங்கிவிட்டது. நீங்கள் கவனமாகப் பார்த்தால், காரின் முன்பக்க பம்பர் சேதமடைந்திருப்பதைக் காணலாம். மேலும் பம்பரில் ஹெட்லைட் வாஷரும் இல்லாததை உங்களால் பார்க்க முடியும்.
இந்த கார் தற்போது மும்பை சாலையிலேயே உள்ளது. இது ஜோபி ஜார்ஜ் மும்பை வாசி ஒருவருக்கு விற்றிருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது. அங்குள்ள ஓர் மேம்பாலத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருக்கின்றது. கோடிக்கணக்கான மதிப்புள்ள இந்த பென்ட்லீ ஏன் இவ்வாறு கைவிடப்பட்டது என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
கைவிடப்பட்டு இருக்கும் அந்த கார் 2004 மாடல் ஆகும். இது ஓர் 2 டோர்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் கூபே வகை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் 552 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்ட 6.0 லிட்டர் டபிள்யூ12 எஞ்சினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாருடன் ஒரு தானியங்கி டிரான்ஸ்மிஷனே இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் மாடலின் அன்றைய மதிப்பு சுமார் ரூ. 3.3 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று இன்னும் பல அரிய வகை கார்கள் சாலையில் கை விடப்பட்டு இருக்கின்றன. மெர்சிடிஸ் பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ என பல்வேறு சொகுசு கார்கள் சாலையில் கைவிடப்பட்டு இருப்பது பற்றியும் நாம் பார்த்திருப்போம். இந்த நிலையிலேயே மேலும் அதிர்ச்சியாக பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்போர்ட் கைவிடப்பட்டு இருக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications








