1000 கோடி மதிப்பிலான ஹெர்குலிஸ் சி- 130ஜே விமானத்தின் சிறப்பம்சங்கள்!
இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெர்குலிஸ் சி-130ஜே விமானம் அண்மையில் குவாலியர் அருகே விழுந்து நொறுங்கியது. அதில், பயணித்த 5 பேரும் மரணமடைந்தனர். உலக அளவில் ராணுவ பயன்பாட்டிற்கான சிறந்த சரக்கு விமானமாக கருதப்படும் ஹெர்குலிஸ் சி-130ஜே விபத்துக்குள்ளான விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு விமானத்தை 1000 கோடி ரூபாய் வீதம் 6,000 கோடியில் 6 ஹெர்குலிஸ் விமானங்களை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வாங்கியது. ராணுவ பயன்பாட்டிற்கான பல்வேறு விசேஷ வசதிகள் கொண்ட இந்த விமானத்தை அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் இந்த விமானத்தை தயாரித்து விற்பனை செய்கிறது. அதிநவீன வசதிகள் கொண்ட இந்த விமானத்தின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

வாரிசு
உலக அளவில் பிரபல மாடலான ஹெர்குலிஸ் சி-130 விமானத்தின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இது வெளியிடப்பட்டது. 1996ம் ஆண்டு 4 எஞ்சின்கள் கொண்ட இந்த விமானத்தின் தயாரிப்பு துவங்கியது. இதுவரை 250 ஹெர்குலிஸ் சி-130ஜே விமானம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதில், 6 விமானங்களை இந்தியா வாங்கியது. அதில், ஒரு விமானம்தான் சமீபத்தில் விபத்தில் சிக்கிவிட்டது.

சிறப்பம்சம்
இந்த விமானத்தை தற்காலிகமாக அமைக்கப்படும் ஓடுதளங்களிலும், குறைந்த தூரம் கொண்ட ஓடுதளங்களிலும் இறக்கி, ஏற்ற முடியும். ரோல்ஸ்ராய்ஸ் எஞ்சின்கள் பொருத்தப்பட்ட இந்த விமானம் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் சிறப்பு கொண்டது.

விசேஷ வசதி
பறந்தபடியே வானிலிருந்து பொருட்களையும், வீரர்களையும் இருளிலும் கூட சரியான இடத்தில் இறக்குவதற்கான நைட் விஷன் வசதி கொண்டது.

சிறப்பான செயல்பாடு
மோசமான வானிலையிலும் இந்த விமானத்தை எளிதாக தரையிறக்க முடியும். குறிப்பாக, போர் காலங்களில் வீரர்களையும், பொருட்களையும் குறிப்பிட்ட இடத்திற்கு விரைவாக கொண்டு சேர்ப்பதற்கான பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது. அறைகுறையாக தயார்செய்யப்பட்ட ஓடுதளங்களில் கூட எளிதாக தரையிறக்க முடியும்.

மீட்புப் பணிகள்
கடந்த மாதம் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்த ஹெர்குலிஸ் விமானத்தை இந்தியா பயன்படுத்தியது. இதுதவிர, உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட வெள்ள பேரழிவின் போது மீட்புப் பணிகளிலும் இந்த விமானம் பயன்படுத்தப்பட்டது.

வசதி
வானில் பறக்கும்போதே எரிபொருள் நிரப்பும் வசதி கொண்டது இந்த ஹெர்குலிஸ் சி-130ஜே. அவசர காலங்களில் இந்த விமானங்களின் பயன்பாடு மிகச்சிறப்பானதாக இருக்கும். பராமரிப்பு செலவு மிக குறைவானதாக குறிப்பிடப்படுகிறது.

இதர பயன்பாடுகள்
ராணுவத்தில் மட்டுமின்றி, அமெரிக்க தீயணைப்பு துறையில் காட்டுத் தீயை அணைக்கும் பணிகளிலும் இந்த விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை டேங்கர்களாக மாற்றப்பட்டு அமெரிக்க தீயணைப்புத் துறையில் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர, மீட்புப் பணிகளிலும் இந்த விமானத்தின் பங்கு சிறப்பானதாக இருக்கும். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் உலகின் சிறந்த சரக்கு விமானங்களை பற்றி பார்க்கலாம்.

இல்யூஷின் ஐஎல்-76
இதனை 'கேண்டிட்' என்றும் அழைக்கின்றனர். இந்த விமானமும் ராணுவ பயன்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட சரக்கு விமானம். அதிக எடை மற்றும் கனரக பொருட்களை வான்வழியாக கொண்டு செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டது. இது மணிக்கு 900 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. 42 டன் எடை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்திய விமானப்படையில் 24 விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அன்டோநோவ் ஏஎன்-12
இந்த விமானத்தை கப் என்றும் அழைக்கின்றனர். அமெரிக்காவின் ஹெர்குலிஸ் விமானத்திற்கு போட்டியாக சோவியத் யூனியன் தயாரித்த மாடல் 4 எஞ்சின்கள் கொண்ட சரக்கு விமானம். தற்போது 40 நாடுகள் இந்த விமானத்தை பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்துகின்றன. இது பல்வேறு மாடல்களில் வெளியிடப்பட்டன.

சி17 குளோப்மாஸ்டர்- 3
அமெரிக்காவின் பிரபல போயிங் நிறுவனதத்தின் தயாரிப்பு. இந்த விமானமும் ராணுவம் உள்பட பல்வேறு பணிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது 128 டன் எடை சுமந்து செல்லும் வல்லமை கொண்டது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 10,390 கிமீ வரை பறக்கும். இது 53 மீட்டர் நீளம் கொண்டது. இந்திய விமானப் படையிலும் பயன்படுத்தப்படுகிறது.
காணத்தவறாதீர்: இன்றைய ஃபேஸ்புக் வீடியோ இதோ உங்களுக்காக!


Click it and Unblock the Notifications