இந்தியால பணக்காரர்கள் அதிகமாயிட்டாங்களோ! சுவீட் பாக்ஸை வாங்கி குவிப்பதுபோல கார்களை வாங்கி குவிச்சுருக்காங்க!
கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது வாகனங்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. பொது முடக்கத்தின் காரணமாக வாகன உற்பத்தி மட்டுமல்ல வாகன உற்பத்திக்கு தேவையான உதிரி பாகங்களின் உற்பத்தியும் மிகக் கடுமையாக பாதிப்படைந்தன. இதுபோன்ற பல்வேறு காரணங்களினால் புதிய வாகனங்களின் விலை உயர தொடங்கியது.
தற்போதும் இந்த நிலை இந்தியாவில் நீடித்த வண்ணமே இருக்கின்றது. தொடர் விலை உயர்வின் காரணமாக சில பட்ஜெட் விலை கார் மாடல்கள்கூட காஸ்ட்லியானவையாக மாறி உள்ளன. இந்த நிலையில், வரும் ஜனவரியில் வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.

டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, மஹிந்திரா மற்றும் ஆடி உள்ளிட்ட நிறுவனங்களே அறிவித்து இருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே முன்பு எப்போதும் இல்லா அளவிற்கு இந்தியாவில் சென்ற பண்டிகைக் காலத்தில் வாகனங்கள் மிக அதிக அளவில் விற்பனையாகி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொதுவாகவே, இந்தியர்கள் பலர் பண்டிகை நாட்களில் புதிய பொருட்களை வாங்கும் வழக்கத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அந்தவகையிலேயே இந்த பண்டிகைக் காலத்தில் இந்தியா ஆட்டோமொபைல்ஸ் துறை புதிய விற்பனை வளர்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வெறும் 42 நாட்களிலேயே 37,93,584 யூனிட்டு புதிய வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.

சென்ற ஆண்டின் இதே பண்டிகைக் காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது கிடைத்திருப்பது 19 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கை இதுவாகும். 31,95,213 யூனிட்டுகள் புதிய வாகனங்களே சென்ற ஆண்டின் இதே பண்டிகைக் காலத்தில் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக முக்கியமாக நடப்பாண்டு பண்டிகைக் காலத்தில் பயணிகள் வாகனங்களின் விற்பனை மிக சிறப்பான வளர்ச்சியை சந்தித்து இருக்கின்றன.
நவராத்திரி மற்றும் தந்தேராஸ் (தீபாவளி) போன்ற பண்டிகையின் காரணமாக அவை சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் 10 சதவீத விற்பனை வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. போன ஆண்டில் 4,96,047 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகிய நிலையில் நடப்பாண்டில் 5,47,246 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன.
மிக முக்கியமாக தீபாவளியின்போதே இந்தியர்கள் பலர் அதிகளவில் புதிய வாகனங்களை வாங்கி இருப்பதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Automobile Dealers Associations) தெரிவித்து இருக்கின்றது. மேலும், நவராத்திரியின்போது வாகன விற்பனை சற்று ஆமை வேகத்தில் நடைபெற்றதாகவும், அதன் பின்னரே, அதாவது தீபாவளியின்போது இந்த விற்பனை வேகமாக வளர்ச்சி அடைந்ததாகவும் அது தெரிவித்து இருக்கின்றது.
அதிலும், எஸ்யூவி ரக வாகனங்களுக்கே நல்ல வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்களுக்கே நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது இந்த டிரெண்ட் மாறி இருக்கின்றது. இந்தியர்களின் கவனம் தற்போது எஸ்யூவி வாகனங்களின் பக்கம் திரும்பி இருக்கின்றது.
இதேபோல், இருசக்கர வாகனங்களின் விற்பனையும் இந்தியாவில் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. 2022 ஆம் ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டின் பண்டிகைக் காலத்தில் 21 சதவீதம் அதிகம் டூ-வீலர்கள் விற்பனையாகி உள்ளன. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் 23,96,665 யூனிட்டுகள் மட்டுமே 2022 பண்டிகைக் காலத்தில் விற்பனையாகிய நிலையில், 28,93,107 யூனிட்டுகள் வரை இந்த ஆண்டின் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையின்போது விற்பனையாகி இருக்கின்றன.
வர்த்தக ரீதியான பயன்பாட்டு வாகனங்களின் விற்பனையும் சற்றோ வளர்ச்சியை இந்த ஆண்டில் கண்டிருக்கின்றன. சுமார் 8 சதவீத விற்பனை வளர்ச்சியை அது சந்தித்து உள்ளது. ஒட்டுமொத்தமாக 1,23,784 யூனிட்டுகள் வரை வர்த்தக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. அதேநேரத்தில் நடப்பாண்டில் 3 சக்கர வாகனங்களின் விற்பனை மிக சூப்பரான வளர்ச்சியைக் கண்டிருப்பதாக ஃபடா தெரிவித்து உள்ளது.
41 சதவீத விற்பனை வளர்ச்சியையே அது சந்தித்து இருக்கின்றது. சென்ற ஆண்டில் வெறும் 1,01,052 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி நிலையில், நடப்பாண்டில் 1,42,875 யூனிட்டுகள் வரை மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதில் சோகம் என்னவென்றால் விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்டர்கள் மட்டும் இந்த ஆண்டில் மிகப் பெரிய விற்பனை சரிவைச் சந்தித்து இருக்கின்றன.
8.3 சதவீதம் வரை டிராக்டர் விற்பனை இந்த ஆண்டில் சரிவைச் சந்தித்து உள்ளது. நவராத்திரி வரை இந்த அளவிலான மிக மோசமான சரிவு பாதையிலேயே டிராக்டர் விற்பனை பயணித்துக் கொண்டிருந்தது. ஆனால், அதற்கு பிந்தைய நாட்களில் லேசாக விற்பனை சூடுபிடித்து இருக்கின்றது. இருப்பினும், சென்ற ஆண்டைக் காட்டிலும் 0.5 சதவீதம் விற்பனை சரிவு என்கிற நிலையிலேயே இந்த ஆண்டின் பண்டிகைக் காலத்தை டிராக்டர்கள் முடித்திருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பண்டிகைக் காலமாக அக்டோபர் 15 தொடங்கி நவம்பர் 25 வரையிலான நாட்களே கணக்கிடப்பட்டு இந்த விற்பனை புள்ளி விபரங்களை ஃபடா வெளியிட்டு இருக்கின்றது. எவ்வாறாயினும், இந்த ஆண்டில் இந்தியா ஆட்டோமொபைல்ஸ்துறை மிக சிறப்பான வளர்ச்சியைக் கண்டிருப்பது மிகப் பெரிய ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. கடந்த காலத்தைக் காட்டிலும் இப்போது வாகனங்களின் விலை பலமடங்கு உயர்ந்திருப்பதனாலேயே பலருக்கு இந்த விற்பனை விபரம் ஆச்சரியமடையும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









