அதிர வைக்கும் மோசடி! பணத்த பிடுங்குவதற்காக இப்படிலாம் பண்றாங்களா! கார் கேமராவில் பதிவான காட்சிகளால் அதிர்ச்சி!
இந்திய சாலைகள் நாளுக்கு நாள் மிகவும் ஆபத்தானவையாக மாறி கொண்டுள்ளன. நாங்கள் தற்போது சாலை விபத்துக்களை (Road Accidents) பற்றி பேசவில்லை. வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் பறிக்க ஒரு சிலர் நூதனமான வழிகளை கண்டறிந்து வருவது பற்றியும், தேவையில்லாமல் வாகன ஓட்டிகளிடம் மோதல்களில் ஈடுபடுவது குறித்தும் பேசி கொண்டுள்ளோம்.
கடந்த காலங்களில் குடிபோதை ஆசாமிகள் சிலர் வாகன ஓட்டிகளிடம் வேண்டுமென்றே பிரச்னைகளில் ஈடுபட்ட சம்பவங்கள் பலவற்றை நாம் பார்த்துள்ளோம். இந்த வரிசையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பதற்காக நூதனமான விஷயம் ஒன்றை செய்துள்ளார். இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், கார் ஒன்று இரவு நேரத்தில் சிங்கிள்-லேன் சாலையில் (Single-lane Road) பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சாலையில் படுத்து கிடக்கிறார்.
அந்த நேரத்தில் எதிர் திசையில் மற்றொரு கார் வருகிறது. இந்த 2 காரின் டிரைவர்களுமே சாலையில் ஒருவர் படுத்து கிடப்பதை பார்த்து விடுகின்றனர். எனவே அவருக்கு என்ன ஆனது? என்பதை பார்ப்பதற்காக இருவரும் தங்கள் கார்களை 'ஸ்லோ' செய்தனர். ஆரம்பத்தில் கீழே விழுந்து கிடந்த நபர், சுய நினைவு இல்லாமல் இருப்பதை போலதான் தெரிந்தது.

ஆனால் சற்று நேரத்தில் அவர் அசைவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதன் காரணமாக 2 கார்களின் டிரைவர்களுக்கும் இந்த விஷயத்தில் ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்ற உணர்வு உள் மனதில் ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே உடனடியாக 2 கார்களும் அங்கிருந்து சென்று விட்டன. அந்த நேரத்தில் கீழே படுத்து கிடந்த மர்ம நபர் எழுந்து, காரை நிறுத்த முயற்சி செய்கிறார்.
ஆனால் 2 கார்களுமே நிற்கவில்லை. அங்கிருந்து சென்று விட்டன. இந்த சம்பவம் கர்நாடகா (Karnataka) மாநிலத்தில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காரின் டேஷ்போர்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இந்த காட்சிகள் எல்லாம் பதிவாகியிருந்தன. இதன் மூலம்தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உண்மையில் இந்த சம்பவம் பணம் பறிக்கும் நோக்கத்தில் நடைபெற்றதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை கார் டிரைவர்கள் என்ன ஆனது? என கீழே வந்து பார்த்திருந்தால், சம்பந்தப்பட்ட நபர் அவர்களிடம் பணம் பறிக்க முயற்சி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது கார் மோதி விட்டதாக அவர் நாடகமாடியிருக்கலாம்.
வழக்கு போன்ற பிரச்னைகளை தவிர்க்க வேண்டுமென்றால், பணம் வேண்டும் என அவர் கேட்டிருக்கலாம். ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவின் ஆரம்பத்தில், வாகன ஓட்டிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரு சில மோதல் சம்பவங்களின் காட்சிகள் காட்டப்படுகின்றன. அதற்கு பின்னர் இறுதியாகதான் இந்த சம்பவம் வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது போன்ற மோசடி ஆசாமிகளை கண்டறிந்து, மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. ஏனெனில் இவர்களை போன்ற ஒரு சில நபர்களால், உண்மையாகவே உதவி தேவைப்படும் சூழலில் உள்ளவர்களுக்கு உதவி கிடைக்காமல் போய் விடலாம்.
அதாவது சாலையில் யாராவது உண்மையிலேயே விபத்தில் சிக்கியோ அல்லது மயக்கமடைந்து கீழே கிடந்தாலோ, உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் போய் விடும். நாங்கள் உங்களுக்கு சொல்வதெல்லாம் சூழலில் உண்மைதன்மையை அறிந்து உதவி செய்யுங்கள் என்பதுதான். இல்லாவிட்டால் நீங்கள் பிரச்னைகளில் சிக்கி கொள்ள நேரிடலாம்.
இந்த சம்பவம் நமக்கு கற்று கொடுக்கும் மற்றொரு பாடம் என்னவென்றால், காரில் டேஷ்போர்டு கேமராக்களை பொருத்தி கொள்ள வேண்டும் என்பதுதான். ஏனெனில் கார் மோதி விட்டதாக ஒரு சிலர் நாடகமாடினாலும் கூட, டேஷ்போர்டு கேமரா காட்சிகளை நீங்கள் ஆதாரமாக சமர்ப்பிக்க முடியும். எனவே உங்கள் கார்களில் உடனடியாக டேஷ்போர்டு கேமராக்களை பொருத்தி கொள்ளுங்கள்.
வாகனம் மோதி விட்டது என நாடகமாடி பணம் பறிக்கும் காட்சிகளை திரைப்படங்களில் நாம் பார்த்துள்ளோம். அத்தகைய சம்பவங்களை தற்போது உண்மையில் காண்பது மனதிற்கு வேதனை அளிப்பதாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், இது போன்ற சம்பவங்களின் எண்ணிக்கை பெருகி விடாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








