வட இந்தியாவுக்கு போனால் இதுக்கு எல்லாம்கூட தயாராக இருக்கனும்! போலி சுங்கச்சாவடினு எப்படி எல்லாம் யோசிக்குறாங்க
சுங்கச்சாவடி கட்டணங்கள் (Toll Booth Fees) நாட்டின் சாலைகளை மேம்படுத்துவதற்கும், அவற்றை தொடர்ந்து பராமரிப்பதற்கும் மிக முக்கியமான தேவை ஆகும். பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் கூட சுங்கச்சாவடி கட்டணங்களை வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கின்றன. அதிலிலும், நம் இந்தியா போன்ற நாட்டில் சுங்கச்சாவடி கட்டணங்களை வசூலிக்காமல், புது புது நெடுஞ்சாலைகளை அமைக்கவே முடியாது என்கிற நிலைமை உள்ளது. ஆனால், மக்களிடம் இருந்து அதிக சுங்கச்சாவடி கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக அரசாங்கம் மீது ஒரு தவறான பார்வை நம் மக்களிடையே உள்ளது.
இதுதொடர்பாக, வாகன ஓட்டிகள் பலர் நேரடியாக மத்திய அரசாங்கத்தை நோக்கி கண்டனங்களை தெரிவித்து இருப்பதுடன், சிலர் சுங்கச்சாவடி பகுதியில் போராட்டங்களை கூட நடத்தி உள்ளனர். அதேநேரம், ஏன் எதற்கு என்றே கேட்காமல், அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பயந்து வாயை மூடிக்கொண்டு டோல் கட்டணத்தை செலுத்திவிட்டு செல்லும் வாகன ஓட்டிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இன்னும் சொல்லப்போனால், அவ்வாறான வாகன ஓட்டிகள் தான் நம் நாட்டில் அதிகமாக உள்ளனர். ஏன், எதற்கு என்று கேட்டால் பிரச்சனை ஏற்படும் என பயந்து, முன்பை விட அதிக கட்டணத்தை செலுத்த சொன்னாலும் எந்தவொரு கேள்வியையும் கேட்காமல் செலுத்திவிட்டு செல்வது இன்றைய கால இளம் வாகன ஓட்டிகளிடம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அதிலிலும் குறிப்பாக, காகிதம்-இல்லா பணபரிவர்த்தனை அதிகமான பின், எவ்வளவு பணம் தன்னிடம் இருந்து போகிறது என்பதே பல இளைஞர்களுக்கு தெரிவதில்லை. பல நேரங்களில், அதனை தெரிந்துக் கொள்ளவும் அவர்கள் விரும்புவதில்லை. இந்த மனபோக்கு சமீப காலமாக அனைத்து வாகன ஓட்டிகள் இடையேயும் பரவி வருகிறது. அவ்வப்போது சுங்கச்சாவடி கட்டணங்களை செலுத்தி செலுத்தி ஒரு கட்டத்திற்குமேல், நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகள் இல்லை எனும்போது ஆச்சிரியமாக இருக்கிறது.

வாகன ஓட்டிகள் இடையேயான இந்த மனபோக்கு எந்த அளவிற்கு ஆழமாக ஊறியுள்ளது என்பதை வெளிககாட்டும் விதமாக, இங்கு சிலர் முற்றிலும் வித்தியாசமான முறையில் ஒரு செயலை செய்துள்ளனர். அதாவது, சுங்கச்சாவடிகள் எங்கு அமைக்கப்பட்டாலும், ஏன் எதற்கு என கேள்வி கேட்காமல் நம்ம ஆட்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு செல்வார்கள் என்பதை வெளிக்காட்டும் முயற்சியாக போலியான சுங்கச்சாவடியை அமைத்துள்ளனர்.
இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் எதிர்பார்த்ததை போலவே அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பலரும் கட்டணத்தை செலுத்தி உள்ளனர். இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளவர்கள் ஒரு குழுவாக செயல்படக்கூடியவர்கள் ஆவர். இவ்வாறு புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு, அதன் மூலமாக மக்களின் கவனத்தை பெறுவதுடன், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இவர்களின் எண்ணமாக உள்ளது.

இவர்களது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தை 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இவர்களது சமீபத்திய சம்பவம்தான், இந்த போலி சுங்கச்சாவடி செட்-அப் ஆகும். ஒரு சுங்கச்சாவடி மையத்தில் என்னென்ன இருக்குமோ அவை அனைத்தையும் கொண்டு இந்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். உண்மையான சுங்கச்சாவடியை அமைக்க பல இலட்ச ரூபாய்கள் செலவாகும் என்பதால், முடிந்தவரையில் எல்லாவற்றையும் மலிவானதாக செட்-அப் செய்து வாகன ஓட்டிகளை ஏமாற்ற முயற்சித்துள்ளனர்.
இன்னும் சொல்லப்போனால், சாலையை இடைமறித்து தடுப்பை மட்டும் இவர்கள் அமைக்கவில்லை என்றால், இவர்கள் செட்-அப் செய்தது சுங்கச்சாவடி மையம் என்பதை பலர் நம்பியிருக்க மாட்டார்கள். இருப்பினும், முடிந்தவரையில் மற்றவர்களை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக கார் ஒன்றை போலியான சைரன் உடன் அதிகாரி வாகனம் போன்று நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனுடன், மேலும் சில வாகனங்களையும் தங்களது போலி சுங்கச்சாவடியில் நிறுத்தி வைத்துள்ளனர். உண்மையில், வாகன ஓட்டிகளை ஏமாற்றியது போலி சைரன் உடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வாகனங்களே ஆகும். இதுகுறித்த வீடியோவில், இவர்களது போலி சுங்கச்சாவடிக்கு முதலாவதாக மாருதி சுஸுகி ஈக்கோ வேன் ஒன்று வருவதை பார்க்க முடிகிறது.
இந்த போலி சுங்கச்சாவடியை அமைத்ததன் நோக்கம், வாகன ஓட்டிகள் எந்த அளவிற்கு கேள்விகளை கேட்காமல் உள்ளனர் என்பதை அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதாகும். மற்றப்படி, அவர்களிடம் இருந்து பணத்தை ஏமாற்ற வேண்டும் என்பது இவர்களது எண்ணம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு இவர்கள் தங்களது பணத்தை கொடுத்துள்ளனர்.

இவ்வாறு, பணம் கொடுக்கப்படுகிறது என்பதை பார்த்த பின்பே வாகன ஓட்டிகளுக்கு இது எல்லாம் நாடகம் என்பது தெரிந்தது. முதலாவதாக வந்த ஈக்கோ வேன் டிரைவரிடம் சுங்கச்சாவடி கட்டணமாக ரூ.50ஐ பெற்றுக் கொண்டு அவரிடம் திருப்பி 100 ரூபாய் நோட்டை நீட்டியுள்ளனர். இதில் குழப்பமடைந்த அந்த ஈக்கோ வேன் டிரைவரிடம் இது எல்லாம் நாடகம் என்பதை இவர்கள் தெரிவித்த சமயத்தில், அந்த டிரைவரிடம் இருந்து வந்த மகிழ்ச்சி தான் இவர்களது வீடியோவை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது.
இந்த ஈக்கோ வேன் டிரைவரை தொடர்ந்து மேலும் சில வாகன ஓட்டிகள் அந்த வழியாக சென்றுள்ளனர். அவர்களிடமும் இதேபோன்று செய்யப்பட்டது. பின்னர், இந்த போலி சுங்கச்சாவடி நாடகத்தை இரவு நேரத்தில் நடத்தியுள்ளனர். அப்போது, மஹிந்திரா பொலேரோ கேம்பர் (Mahindra Bolero Camper) கார் ஒன்று வந்துள்ளது. அதில் இருந்தவர்களும் ஏன் எதற்கு என்றே கேட்காமல் இவர்கள் கேட்ட கட்டணத்தை செலுத்திவிட்டு சென்றுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுங்கச்சாவடி என கூறி யார் பணம் கேட்டாலும் நம்மில் பல வாகன ஓட்டிகள் கொடுத்துவிடுகின்றனர் என்பதை கூறும் விதமாகவே இந்த போலி சுங்கச்சாவடி நாடகத்தை நடத்தி உள்ளனர். இதனை இந்த நபர்கள் மேற்கொண்ட விதமும், இறுதியாக இது எல்லாம் நாடகம் என்பதை சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் தெரிவித்த விதமும் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.
நம் இந்தியா போன்ற நாட்டில் போலியான சுங்கச்சாவடிகளை வாகன ஓட்டிகள் அடையாளம் காணும் அளவிற்கு திறன் கொண்டிருப்பது அவசியமாகும். ஏனெனில், வட இந்தியாவில் சில பகுதிகளில் போலி சுங்கச்சாவடிகளை நீண்ட மாதங்களாக நடத்தி அதன் மூலம் பல இலட்ச ரூபாய்களை வசூல் வேட்டை நடத்திய சம்பவங்களை எல்லாம் செய்தியாக பார்த்துள்ளோம்.
ஆகையால், சுங்கச்சாவடி மையத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் துறையின் லோகோ இடம்பெற்றுள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அதேபோல், சிசிடிவி கேமராக்கள், அதிகாரிகளின் உதவி எண்கள் உள்ளிட்டவை உள்ளனவா என்பதையும் சுற்றி, முற்றி பார்க்க வேண்டும். மேலும், போலி சுங்கச்சாவடிகளில் பெரும்பாலும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறை பின்பற்றப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









