மத்திய அரசின் இந்த தாராள மனசு தாங்க நாட்டை வளர செய்யுது!! அசால்ட்டா ரூ.1,500 கோடி தூக்கி கொடுக்குறாங்க!
ஃபேம்-2 (FAME-2) திட்டத்தின்படி எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்திக்கு வழங்கிவந்த மானியத்தை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது. இதன்படி, இவி நிறுவனங்கள் எவ்வளவு மானியத்தை பெறவுள்ளன என்பதையும், இதன் மூலமாக எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகள் எந்த அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
கார்பன் மாசற்ற பசுமையான போக்குவரத்தை வழங்குவதினாலும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதினாலும் எலக்ட்ரிக் வாகனங்களை மத்திய அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொண்டுவரப்பட்ட ஃபேம்-2 திட்டத்தின்படி, கடந்த சில வருடங்களாக எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வது வழக்கத்தை காட்டிலும் சற்று செலவு மிகுந்ததாக உள்ளதால், இதன் விளைவாக எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகள் அதிகமாக இருக்க கூடாது என்பதற்காக இந்த மானியத்தை மத்திய அரசு வழங்க ஆரம்பித்தது. இந்த நிலையில், கடந்த 2023 ஜூன் மாதத்தில் இருந்து எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை மத்திய அரசு குறைத்தது.
இதன் காரணமாக, எலக்ட்ரிக் 2-வீலர்களின் விலைகள் அதிகரித்தன. சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ஃபேம்-2 திட்டம் குறித்து ஏதேனும் அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது, ஃபேம்-2 திட்ட மானியங்கள் மேலும் குறைக்கப்படலாம் அல்லது அனைவரையும் ஆச்சிரியமளிக்கும் வகையில் அதிகரிக்கப்படலாம் என கூறப்பட்டது.

ஆனால், இடைகால பட்ஜெட்டில் ஃபேம்-2 திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இந்த நிலையில், ஃபேம்-2 திட்டத்திற்கான நிதி தொகையை ரூ.10,000 கோடியில் இருந்து ரூ.11,500 கோடியாக மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம் அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கான மானிய தொகை ரூ.1,500 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் மானியம் வருகிற 2024 மார்ச் 31ஆம் தேதி வரையில் விற்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கானது ஆகும். அதாவது, மார்ச் 31 வரையில் நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் மானியத்துக்கு இந்த கூடுதல் ரூ.1,500 கோடி பயன்படுத்தப்படும். ஒருவேளை மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்ட மானியம் தீர்ந்து போகும் பட்சத்தில், மீதம் இருக்கும் நாட்களுக்கு மறுபடியும் கூடுதலாக எந்த மானியமும் அறிவிக்கப்படாது எனவும் மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எலக்ட்ரிக்கில் இயக்கும் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இந்த மானியம் கிடைக்கும். வாகன மானியங்களுக்கு ரூ.7,048 கோடி, மூலதன சொத்து உருவாக்க மானியங்களுக்கு ரூ.4,048 கோடி மற்றும் மற்ற முயற்சிகளுக்கு ரூ.400 கோடி என ஃபேம்-2 திட்டத்திற்கான ரூ.11,500 கோடி நிதி பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
10 லட்ச எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள், 5 லட்ச எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள், 55,000 எலக்ட்ரிக் கார்கள் மற்றும் 7,000 எலக்ட்ரிக் பேருந்துகளை உருவாக்கி பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நோக்கத்தில் ஃபேம்-2 திட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்தியது. 2022இல் ஒட்டுமொத்தமாக 10.2 லட்ச எலக்ட்ரிக் வாகனங்களும், 2023இல் சற்று கூடுதலாக 15.3 லட்ச எலக்ட்ரிக் வாகனங்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை ஆனது அதிகரித்து வருவதன் காரணத்தினாலேயே ஃபேம்-2 மானியங்களை குறைக்கும் திட்டத்தில் மத்திய அரசு உள்ளதாக பேச்சுக்கள் எழ ஆரம்பித்தன. ஆனால், இதற்கிடையில் தற்போது ஃபேம்-2 திட்ட மானிய தொகை ரூ.1,500 அதிகரிக்கப்பட்டு இருப்பது ஆச்சிரியத்தை தாண்டி, ஒருவித குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications









