ஃபேம் 2 மானியத்தில் இவ்வளவு முறைகேடா? குடுத்த பணத்தை எல்லாம் திரும்ப கேட்கும் மத்திய அரசு!
எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிற்காக வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஃபேம் 2 என்ற மானியத்தை மத்திய அரசு வழங்கி வந்த நிலையில், சில எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் இதை விதிமுறைகளை மீறி வாங்கியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வாகன தயாரிப்பாளர்களிடம் அவர்கள் விதிமுறையை மீறி வாங்கிய மானியத்தை திரும்ப தரும்படி மத்திய அரசு கேட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக மத்திய அரசு ஃபேம் என்ற மானியத்தை அறிமுகப்படுத்தியது. இந்த மானியத்தின் முதல் கட்டத்தில் நேரடியாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. இதன் இரண்டாவது கட்டத்தை பொருத்தவரை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கும் மானியத்தை வழங்காமல் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்கி எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையை குறைப்பதற்கான வழிமுறைகளை செய்து வைத்திருந்தது. இதற்காக பல்வேறு விதமான விதிமுறைகளையும் வைத்திருந்தது.

இந்நிலையில் நீண்டஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்த ஃபேம்2 மானியத்தின் கீழ் பல்வேறு விதமான சலுகைகளை பெற்று மானியங்களையும் பெற்று வந்தனர். இந்நிலையில் சில எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் ஃபேம்2 மானியத்தை முறைகேடாக பெற்றுள்ளதாக மத்திய அரசுக்கு தகவல் வந்தது. அதன் பெயரில் மத்திய ஹெவி இண்டஸ்ட்ரி அமைச்சகம் சார்பில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டு இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த குழு நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து ஃபேம் 2 மானியம் பெற்றதில் முறைகேடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதை அவர்கள் நிறுவனங்கள் வேண்டுமென்றே செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல மாதங்கள் நடந்த விசாரணைக்கு பிறகு இந்தியா முழுவதும் 13 எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் இந்த முறைகேடில் ஈடுபட்டுள்ளது தெளிவாக தெரிந்துள்ளது.

இதில் பிரபல நிறுவனங்களாக இருக்கும் ஹீரோ எலக்ட்ரிக், ஒகினாவா ஆட்டோ டெக், ஆம்பியர் வெஹிகிள்ஸ், பென்லிங் இந்தியா, ரிவோட் இன்டலிகார்ப், ஆமோ மொபிலிட்டி, உள்ளிட்ட நிறுவனங்களும் உள்ளடங்கும். இந்நிறுவனங்கள் எல்லாம் தற்போது முறைகேடாக பெற்ற மானிய பணத்தை திரும்பத் தரச் சொல்லி மத்திய அரசு கேட்டுள்ளது. இதன்படி மத்திய அரசுக்கு 469 கோடி ரூபாய் திரும்ப வர வேண்டியது உள்ளது.
பல்வேறு கட்டங்களாக நடந்த விசாரணையில் இந்த ஃபேம் மானியத்தின் கீழ் மானியம் பெற தகுதி வாய்ந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்கள் வாகனங்களுக்கான அனைத்து உதிரி பாகங்களையும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. ஆனால் அதை மீறி இந்த நிறுவனங்கள் எல்லாம் தங்கள் உதிரி பாகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அதை தங்கள் வாகனங்களில் பொருத்தி அதற்காக மானியங்களை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

ஆரம்ப காலத்தில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் உதிரி பாகங்களுக்கும் மானியம் குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால் அதை மீண்டும் இந்தியாவிலேயே தயாரிக்க முடியாமல் நிறுவனங்கள் வெளிநாட்டில் வாங்கிய நிலையில் அதற்கும் மானியம் பெறுவது விதிமுறைக்கு மாறாக இருந்தது. இதை தான் அந்த குழு கண்டுபிடித்துள்ளது.
இதன் காரணமாக இந்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. ஏற்கனவே பெறப்பட்ட மானியம் தங்களுக்கானது என நினைத்து அதை செலவு செய்து வந்த நிலையில், தற்போது இந்த மானியத்தை தற்போது திரும்ப அரசுக்கே அளிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இது நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
இது மட்டுமல்லாமல் இனி இந்நிறுவனங்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட உதிரி பாகங்களை பயன்படுத்தி தங்கள் வாகனங்களை தயாரித்தால் மட்டுமே அடுத்த கட்ட மானியங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் போது அந்த மானியங்களையும் பெரும் தகுதியையும் பெரும் என தெரிய வந்துள்ளது. இதற்காக அந்நிறுவனம் தனியாகப் பெரிய முதலீடும் செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் ஃபேம் 2 மானிய அறிவிக்கப்பட்டபோது தங்களுக்கு இந்த மானியம் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். இதனால் விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் ஃபேம் 2 மானியத்தை பெற்றுள்ளனர். தற்போது இதை அரசு கண்டுபிடித்து முறைகேடாக வேண்டும் மானியத்தை பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இது நிச்சயம் வரவேற்க வேண்டியது.


Click it and Unblock the Notifications









