நம் பலமும், பெருமையும்... 'மேட் இன் இந்தியா' ராணுவ வாகனங்கள்!!
சாதாரண பயன்பாட்டிற்கும், ராணுவ பயன்பாட்டிற்குமான வாகனங்களின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இடையே அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. தோற்றத்தில் மட்டுமல்ல, கட்டுறுதியிலும், தொழில்நுட்பத்திலும் ராணுவ வாகனங்கள் வேறுபடுகின்றன.
இந்தநிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும் விதத்தில், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் சில முக்கிய ராணுவ வாகனங்கள் பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம். நாட்டிற்கு பெருமையை மட்டுமல்ல, பலத்தையும் சேர்க்கும் அந்த ராணுவ வாகனங்களையும், அதன் தயாரிப்பாளர் விபரங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

அசோக் லேலண்ட் கவச வாகனம்
தோற்றத்தில் வித்தியாசமாக இருக்கும் இந்த கவச வாகனம், கண்ணி வெடித் தாக்குதல்களிலில் கூட சேதமடையாத கட்டமைப்பு கொண்டது. இந்த கவச வாகனத்தில் டிரைவர், இணை ஓட்டுனர் உள்பட 10 பேர் பயணிக்க முடியும்.

எஞ்சின்
இந்த கவச வாகனத்தில் 6 சிலிண்டர்கள் கொண்ட டர்போ டீசல் எஞ்சின் இரு விதமான பவரை வெளிப்படுத்தும் விதத்தில் கிடைக்கின்றன. ஒரு மாடல் 230 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மற்றொரு மாடல் 360 பிஎச்பி பவரையும், 1,400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது.

சிறப்பம்சங்கள்
இந்த கவச வாகனம் 350 மிமீ அளவுக்கு கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இந்த வாகனத்தின் கூரை மீது இரண்டு துப்பாக்கிகளை பொருத்தி எதிரிகள் மீது தாக்குதல் நடத்தவும், தற்காப்பு செய்து கொள்ள முடியும். 4 வீல் டிரைவ் மற்றும் 6 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. இதன் சஸ்பென்ஷன் மற்றும் டயர்கள் விசேஷ அம்சங்களுடன் எந்தவொரு சாலைகளையும் செவ்வனே எதிர்கொள்ளும்.

இந்தியாவின் ஹம்மர்
இந்தியாவின் ஹம்மர் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. போர் சமயங்களிலும், சாதாரண சமயங்களிலும் ராணுவ வீரர்களின் போக்குவரத்திற்கான விசேஷ அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட பல்வகை பயன்பாட்டு வாகனம்.

எஞ்சின்
இந்த ராணுவ பயன்பாட்டு வாகனத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 5 சிலிண்டர்கள் கொண்ட 2.7 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 172 பிஎச்பி பவரையும், 340 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

விசேஷ அம்சங்கள்
தரையிலிருந்து 350 மிமீ உயரத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த ராணுவ எஸ்யூவியில் விசேஷ டயர்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. 65 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கரடு முரடான சாலைகளையும் எதிர்கொள்வதற்கான விசேஷ டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

டாடா கவச வாகனம்
எல்லையோர கண்காணிப்பு, நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளுக்காக பயன்படுத்தக்கூடிய கட்டமைப்பு வசதிகளை கொண்டது. ராணுவ வீரர்களையும், துணை ராணுவத்தினரையும் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகவும், எதிரிகளின் முன்னேற்றத்தை தடுக்கவும் உதவும். கண்ணி வெடித் தாக்குதல்களில் கூட சேதமடையாது. இந்த வாகனத்தில் 14 பேர் பயணிக்கலாம்.

எஞ்சின்
இந்த வாகனத்தில் 240 பிஎச்பி பவரையும், 925 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல சக்திவாய்ந்த டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் ஆற்றல் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. இதுவும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

சிறப்பம்சங்கள்
பவர் ஸ்டீயரிங் மற்றும் ஏர்கண்டிஷன் வசதிகள் கொண்டது. 1 மீட்டர் ஆழத்திலான நீர் நிலைகளை கூட எளிதில் கடக்கும். ரன் ஃப்ளாட் டயர்கள் கொடுக்கப்பட்டிருப்பதால், தாக்குதலில் சேதமடைந்தாலும், தடையில்லாமல் தொடர்ந்து இயக்க முடியும். இந்த கவச வாகனத்தின் கூரை மீது துப்பாக்கிகள் பொருத்தும் கட்டமைப்பு வசதி உள்ளது.

மஹிந்திரா மார்க்ஸ்மேன்
மஹிந்திராவின் குண்டு துளைக்காத வாகனம். நகர்ப்புறங்களில் தீவிரவாதிகளின் தாக்குதல்களை விரைவாக சென்று முறியடிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வாகனத்தில் ஓட்டுனர் உள்பட 6 பாதுகாப்புப் படையினர் பயணிக்க முடியும்.

எஞ்சின்
இந்த சிறிய வகை கவச வாகனத்தில் 2.49 லிட்டர் சிஆர்டிஇ டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த வாகனம் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து வீரர்களை பாதுகாப்பதுடன், முன்னேறிச் சென்று எதிரிகளை துவம்சம் செய்வதற்கான வசதிகளை கொண்டுள்ளது.

விசேஷ அம்சங்கள்
2011ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதல் நடந்த பின்னர் முதல்முறையாக மும்பை போலீஸில் இந்த கவச வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வாகனத்தில் 7 துப்பாக்கிச் சுடுவதற்கான போர்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஏகே-47 மற்றும் ஏக-56 உள்ளிட்ட நவீன ரக எந்திர துப்பாக்கிகளால் கூட இந்த வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது.

அசோக் லேலண்ட் சூப்பர் ஸ்டாலியன் 8*8
நம் நாட்டு ராணுவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வீரர்களுக்கான போக்குவரத்து சாதனமாக விளங்குகிறது. தற்போது 65,000 அசோக் லேலேண்ட் ஸ்டாலியன் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.

எஞ்சின்
இந்த டிரக்கில் பயன்படுத்தப்படும் டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 360 பிஎச்பி பவரையும், 1,400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 8 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளதால், எந்தவொரு சாலை நிலையிலும் எளிதாக செல்லும்.

சிறப்பம்சங்கள்
லடாக் பனிக்கட்டி சாலைகளாகட்டும், ராஜஸ்தான் பாலைவனமாகட்டும், எந்தவொரு சாலைகளிலும் சிறப்பாக செயல்படும் ராணுவ பயன்பாட்டு வாகனம். இந்த வாகனத்தில் துப்பாக்கிகளை பொருத்தி தாக்குதல் நடத்துவதற்கான கன் மவுண்ட்டும் உள்ளன. எனவே, போர் சமயங்களில் இந்த வாகனத்தில் சென்றபடியே, தாக்குதல் நடத்த முடியும்.

டாடா கவச வாகனம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிறிய வகை கவச வாகனம்.லைட் ஸ்பெஷலிஸ்ட் வெகிக்கிள் என்று அழைக்கப்படும் இந்த வாகனமும், ராணுவ வீரர்களை விரைவாக போர் பகுதிக்கும், எல்லைப் பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்கான அம்சங்களை கொண்டது.

எஞ்சின்
இந்த வாகனத்தில் 3.0 லிட்டர் டைகோர் டர்போ டீசல் எஞ்சின் உள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த வாகனத்தில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக, அனைத்து சாலை நிலைகளையும் எளிதாக கடக்க முடியும்.

சிறப்பம்சங்கள்
அவசர காலங்களில் தாக்குதல் வாகனமாகவும், ராணுவ ஆம்புலன்சாகவும் உடனடியாக மாற்றிக் கொள்ளும் அம்சங்களை கொண்டது. கண்ணி வெடித்தாக்குதல்களிலும் சேதமடையாது.


Click it and Unblock the Notifications