First Car 10 ஆண்டு பாச போராட்டம்! தங்களது முதல் காரை போராடி மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்த குடும்பம்!
இந்தியாவை பொறுத்தவரையில், ஒரு கார் வாங்குவது என்பது இன்னமும் பலருக்கு பெரும் கனவாகதான் இருந்து வருகிறது. தங்களது முதல் காரை பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் வாங்குபவர்கள், அதை தங்கள் குழந்தை போல் பாவிக்க தொடங்கி விடுகின்றனர். அந்த முதல் காருடன் அவர்களுக்கு எப்போதும் 'ஸ்பெஷல் சென்டிமெண்ட்' இருக்கும்.
ஆனால் எதிர்பாராத ஒரு சில சூழல்களால், தங்களது முதல் காரை விற்று விட்டு வேறு காருக்கு ஒரு சிலர் மாறி விடுகின்றனர். ஆனால் பின் நாட்களில் முதல் காரை ஏன் விற்றோம்? என்ற மனநிலை பலருக்கும் வந்து விடுகிறது. அதை எப்படியாவது திருப்பி வாங்கி விட மாட்டோமா? என்ற எண்ணமும் பலரது மனதிற்குள் சுற்றி சுழன்று கொண்டிருக்கிறது.

இந்த வகையில், தங்களது குடும்பம் முதல் முறையாக வாங்கிய டாடா இண்டிகா (Tata Indica) காரை விற்பனை செய்து விட்டு, ஒருவர் மனம் வருந்தியுள்ளார். பின்னர் 10 ஆண்டுகளாக தேடி அந்த காரை திரும்பவும் வாங்கியுள்ளார். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை உங்களுக்கு தொகுத்து வழங்க போவதுதான் இந்த செய்தி தொகுப்பு.
Saurabh.kmph என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த சம்பவம் தொடர்பான பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவில் கூறப்பட்டிருப்பது பின்வருமாறு: 10 ஆண்டுகள் தேடுதல் வேட்டை இறுதியில் வெற்றிகரமான நிறைவுக்கு வந்துள்ளது. 2003ம் ஆண்டு வாங்கிய எங்கள் குடும்பத்தின் முதல் காரை, 2013ம் ஆண்டு விற்பனை செய்து விட்டோம்.
அந்த காரை திரும்ப என்னிடம் விற்பனை செய்ய உரிமையாளரும் (கடைசியாக காரை வைத்திருந்தவர்), அவரது குடும்பத்தினரும் மனப்பூர்வமான வகையில் ஒத்துழைப்பு நல்கினர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு முறை அந்த காரை எங்களது குடும்பத்திற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தில் அந்த காரை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவுடன், 20 ஆண்டுகள் பழைய டாடா இண்டிகா காரின் உரிமையாளர், அதை திரும்ப பெற்ற சந்தோஷத்தில், தனது பெற்றோரிடம் சாவியை ஒப்படைக்கும் படங்களும் இடம்பெற்றுள்ளன.
உண்மையிலேயே இந்த சம்பவங்களை கேட்கும்போது நமக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. சாதாரணமான ஒரு கார் என்றாலும், அதை இந்த குடும்பம் தங்களது வீட்டில் ஒருவர் என்று நினைத்துள்ளது. எனவேதான் நீண்ட காலமாக போராடி மீண்டும் அதை அவர்கள் தங்களுடைய வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட டாடா இண்டிகா கார், இந்திய சந்தையில் மிகவும் பிரபலமானது ஆகும். தற்போது அந்த கார் விற்பனையில் இல்லை. இருப்பினும் இந்திய சாலைகளில் இன்னும் டாடா இண்டிகா கார்களை சர்வ சாதாரணமாக காண முடியும். இந்தியாவின் கார் வரலாற்றில், தனித்துவமிக்க ஒரு காராக டாடா இண்டிகா கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) கூட தனது முதல் காரான மாருதி 800 (Maruti 800) காரை தவற விட்டு விட்டதாக ஒரு முறை சமூக வலை தளங்களில் கூறியிருந்தார். அதை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற அவரது ஆசை விரைவிலேயே நிறைவேறியது. அதன்படி இந்த குடும்பமும் தங்களது முதல் காரை போராடி மீட்டெடுத்துள்ளது. முதல் கார் என்பது போக்குவரத்திற்கானது மட்டுமல்லது. அது கடந்த காலங்களை மீண்டும் நினைவூட்டும்!


Click it and Unblock the Notifications








