பின்னாடி இருக்கும் வேன் மட்டும் மாறவே இல்ல... 40 வருஷமா உழைக்கும் மாருதி தயாரிப்பு!!
இன்றைய கால உலகில் நிறைய குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, இப்போதெல்லாம் ஒரு காரை சில வருடங்கள் பயன்படுத்தினாலே அதிகம். ஏனெனில், அதற்குள் அந்த காரை எக்ஸ்சேஞ்ச் செய்து புது காரை வாங்கி விடுகின்றனர். ஆனால் 20, 30 வருடங்களுக்கு முன்பு வரையில் ஒரு வீட்டில் ஒரு கார் இருந்தாலே பெரிய விஷயம். அதனை அவ்வளவு விரைவாக விற்கவும் மாட்டார்கள். இதனால், காலப்போக்கில் அந்த கார் அவர்களது குடும்பத்தில் ஒரு ஆளாக மாறிவிடும். அவ்வாறு, இங்கு ஒரு குடும்பத்தில் மாருதி சுஸுகி ஆம்னி வேன் ஒன்று சுமார் 40 வருடங்களாக பயன்பாட்டில் உள்ளது. இந்த 40 வருடங்களில் அந்த ஆம்னி வேன் உடன் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் மாருதி கடந்த காலங்களில் இருந்து விற்பனைக்கு அறிமுகம் செய்த தரமான வாகனங்களுள் ஒன்று ஆம்னி (Omni) ஆகும். மாருதி 800 காருக்கு அடுத்து, மாருதி நிறுவனத்தில் இருந்து வெளிவந்த 2வது வாகனம் ஆம்னி வேன் ஆகும். பெட்டகம் வடிவில் உருவாக்கப்பட்ட ஆம்னியை கார் என்று அழைப்பதை காட்டிலும் வேன் என்று அழைப்பு தான் சரியாக இருக்கும்.

ஏனெனில், மாருதி ஆம்னியில் பயணிகளை ஏற்றிச் செல்வது மட்டுமின்றி, பொருட்களையும் கொண்டு செல்ல முடிந்தது. இதனால், வியாபாரிகள் மத்தியிலும் அந்த சமயத்தில் ஆம்னி பிரபலமாக இருந்தது. தற்சமயம் விற்பனையில் இல்லாவிடினும், சுமார் 30 வருடங்களாக விற்பனையில் இருந்தது மாருதி ஆம்னியின் சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.
30 வருடங்களில், பல லட்சம் பேர்களிடத்தில் ஆம்னி சென்று சேர்ந்துள்ளது. அவர்களுள் சிலர் இப்போதும் ஆம்னி வேனை பயன்படுத்தி வருகின்றனர் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு, சுமார் 40 வருடங்களாக ஒரே குடும்பத்தில் பயன்பாட்டில் இருக்கும் மாருதி ஆம்னியை பற்றி தான் இனி பார்க்க போகிறோம். இது தொடர்பான படங்கள் ரெடிட் என்கிற வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த படங்களை வெளியிட்டவர் அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ஆவார். இவர் சிறு வயதாக இருக்கும்போது அவர்கள் வைத்திருந்த ஆம்னி வாகனத்துடன் குடும்பமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பின், கடந்த 35 வருடங்களில் இதேபோன்று 3 புகைப்படங்கள் இந்த குடும்பத்தினரால் எடுக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து படங்களிலும் ஒரே மாதிரியாக போஸ் கொடுக்க இந்த குடும்பத்தினர் முயற்சித்து இருப்பது பார்த்தாலே தெரிகிறது.

இந்த 35 வருடங்களில் பலருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த படங்களை பதிவிட்டவரின் தந்தை இந்த ஆம்னியை வாங்கியுள்ளார். குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே இந்த ஆம்னியை வாங்கிய அவருக்கு தற்போது முழுவதுமாக வெள்ளை முடி தெரியும் அளவிற்கு வயதாகிவிட்டது. இருப்பினும், அவர் வாங்கிய ஆம்னி வாகனம் மட்டும் இன்னமும் நல்ல கண்டிஷனில் உள்ளது.
4 படங்களிலும் இந்த ஆம்னி வேன் சிவப்பு நிறத்தில் உள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட படத்திலும் பளபளப்பான சிவப்பு நிறத்தில் வேன் காட்சியளிக்கிறது. ஆதலால் நிச்சயமாக, கடந்த 40 வருடங்களில் சில முறை காருக்கு புதியதாக பெயிண்ட் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த அளவிற்கு நல்ல கண்டிஷனில் இருக்கும் மாருதி ஆம்னியை இப்போது காண்பது மிகவும் அரிதானது ஆகும்.
இதில் இருந்து இந்த குடும்பத்தினர் இந்த ஆம்னியை தங்களது குடும்பத்தில் ஒரு ஆள் போன்று மிகவும் கவனமாக பாதுகாத்து வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. 20, 30 வருடங்களுக்கு முன், ஆம்னி வேனை சாலையில் எல்லா இடங்களிலும் காண முடிந்தது. பள்ளி வாகனமாக, சுற்றுலா வாகனமாக, சரக்கு வாகனமாக என பல்வேறு விஷயங்களுக்கு ஆம்னி பயன்படுத்தப்பட்டது. மாருதி 800 காரில் பொருத்தப்பட்ட அதே 800சிசி என்ஜின் தான் ஆம்னியிலும் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதுதான், எம்பிவி, எஸ்யூவி எல்லாம் வந்துவிட்டது. ஆனால், 20, 30 வருடங்களுக்கு முன்பு வரையில் குடும்பமாக பயணிக்க விரும்புபவர்கள் பரவலாக வாங்கிய வாகனம் ஆம்னி ஆகும். ஏனெனில், அந்த அளவிற்கு இந்த வாகனத்தினுள் விசாலமான இடவசதி கிடைக்கிறது. இத்தகைய வாகனத்தை இந்த குடும்பத்தினர் இப்போதும் பாதுகாப்பாக பயன்படுத்தி வருகின்றனர் என்றால், இத்தனை வருடங்களில் இதனை எந்த அளவிற்கு குழந்தை போல் பாதுகாத்து வருகின்றனர் என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications








