4 கோடி ரூபா காருக்காக 45.99 லட்ச ரூபா செலவில் நம்பர்.. ஜேம்ஸ் பாண்டுனு நினைச்சுக்கிட்டாரோ! அப்படி என்ன நம்பர்?
4 கோடி ரூபா காருக்காக இந்தியர் ஒருவர் ரூ. 45.99 லட்சம் செலவிட்டு ஃபேன்சி பதிவெண்ணை வாங்கி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவிலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. பொதுவாக வெளிநாடுகளிலேயே இதுமாதிரியான நிகழ்வுகள் அடிக்கடி நடக்கும். அதேவேளையில், அத்தி பூ பூத்தாற்போல் அவ்வப்போது இந்த நிகழ்வு அரங்கேறுவது வழக்கம். ஆனால், இப்போது அரங்கேறி இருக்கும் ஃபேன்சி நம்பர் கொள்முதல் சம்பவம் நாட்டை திரும்பி பார்க்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.
'கேஎல் 07 டிஜி 0007' (KL 07 DG 0007) எனும் ஃபேன்சி நம்பரே யாரும் நம்ப முடியாத அளவிற்கு மிக அதிக விலையில் ஏலத்தில் விற்பனையாகி இருக்கின்றது. சமீபத்திலேயே இந்த பதிவெண்ணை எர்ணாகுளம் ஆர்டிஓ ஏலத்தின் வாயிலாக விற்பனைச் செய்வதாக அறிவித்திருந்தது என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.

இதை மட்டுமல்ல மொத்தமாக ஆறு வகைகளின் ஃபேன்சி எண்களை கேரளா அரசாங்கம் ஏலத்தின் வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தது. ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரையிலான அடிப்படை விலை அவற்றிற்கு நிர்ணயம் செய்யப்பட்டன. இதில் ஒன்றே ரூ. 45.99 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையாகி இருக்கின்றது.
இதற்கு முன்னதாக கேரளாவில் இந்த அளவு அதிக விலையில் ஃபேன்சி நம்பர் விற்பனையாகியதில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. கடைசியாக ரூ. 31 லட்சம் என்கிற தொகையிலேயே ஃபேன்சி நம்பர் விற்பனைச் செய்யப்பட்டு இருக்கின்றது. தனியார் நிறுவனம் ஒன்றே ரூ. 45.99 லட்சத்திற்கு கேஎல் 07 டிஜி 0007 பதிவெண்ணை ஏலத்தில் வாயிலாக வாங்கி இருக்கின்றது.
அந்த நிறுவனத்தை பற்றிய கூடுதல் விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதேவேளையில், இந்த பதிவெண்ணை அவர்கள் தங்களின் லம்போர்கினி உருஸ் கார் மாடலுக்காக வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஓர் ஆடம்பர கார் மாடலே இந்த உருஸ் ஆகும்.
இது ஓர் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட சொகுசு எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இதன் ஒரே ஒரு யூனிட்டை இந்தியாவில் இப்போது வாங்க வேண்டும் என்றால் ரூ. 4 கோடிக்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.
இத்தகைய அதிக விலையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு பெரும் பணக்காரர்கள் மத்தியில் மட்டுமே வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 657 எச்பி மற்றும் 850 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.
இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 300 கிமீ ஆகும். மேலும், இந்த காருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 3.3 செகண்டுகளே போதுமானது ஆகும். இத்தகைய ஆற்றலை உருவாக்குகின்ற காரணத்தினாலேயே உலகின் அதிக ஆற்றலை உருவாக்கும் எஸ்யூவி கார்களில் ஒன்றாக உருஸ் காட்சியளிக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் லம்போர்கினி உருஸ் சொகுசு எஸ்யூவி காருக்கு பணக்காரர்கள் மத்தியில் மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய காருக்கே அதிக தொகையை செலவிட்டு சூப்பரான ஃபேன்சி நம்பரால் கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கின்றார் கேரளாவைச் சேர்ந்த பணக்காரர். குறிப்பாக, இவ்வளவு தொகை செலவிட்டு '0007' நம்பரை வாங்கி இருப்பதால் அந்த நபர் ஜேம்ஸ் பாண்டு ஃபேனாக இருப்பாரோ என்கிற கேள்வியையும் நம் மனதில் எழுப்பி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








