இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஏழை விவசாயி! இவர் செஞ்ச காரியத்தை பத்திதான் இப்ப எல்லாரும் பேசறாங்க!
பீஹார் மாநிலத்தை சேர்ந்த விவசாயி வினோத் குமார் பட்டேல். இவரிடம் டிராக்டர் இல்லாமல் இருந்தது. போதிய பணம் இல்லாததுதான் இதற்கு காரணம். ஆனால் இதற்காக வினோத் குமார் பட்டேல் மனம் தளர்ந்து விடவில்லை. அவரது தொடர் முயற்சியின் விளைவாக தற்போது புதிய டிராக்டர் ஒன்று உருவாகியுள்ளது.
பம்ப் செட் இயந்திரத்தின் இன்ஜின் உதவியுடன், வினோத் குமார் பட்டேல் இந்த டிராக்டரை உருவாக்கியுள்ளார். இந்த டிராக்டரை உருவாக்குவதற்கு, வினோத் குமார் பட்டேல் சுமார் 1 வருட காலத்தை எடுத்து கொண்டுள்ளார். அத்துடன் சுமார் 2 லட்ச ரூபாயையும் அவர் செலவிட்டுள்ளார்.

இந்த டிராக்டர்தான் தற்போது அனைவரின் பேசு பொருளாகவும் மாறியுள்ளது. குறிப்பாக வினோத் குமார் பட்டேலின் சொந்த ஊரை சேர்ந்த பலரும் இந்த டிராக்டரை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். போதிய வசதிகளும், பணமும் இல்லாத சூழலிலும், வினோத் குமார் பட்டேல் புதிய டிராக்டரை உருவாக்கியிருப்பது உண்மையிலேயே ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.
நிலத்தை உழவு செய்யும் பணிகளை இந்த டிராக்டர் எளிமையாக்கியுள்ளதாக வினோத் குமார் பட்டேல் பெருமையுடன் கூறுகிறார். வினோத் குமார் பட்டேல் உருவாக்கியுள்ள டிராக்டரில் பொருத்தப்பட்டிருப்பது, 350 ஹெச்பி திறனுடைய பம்ப் செட் இன்ஜின் ஆகும். இது பயன்பாடற்ற நிலையில் இருந்தது. அதனை எடுத்து பொருத்தி, டிராக்டரை உருவாக்கி அசத்தி விட்டார் வினோத் குமார் பட்டேல்.
வழக்கமான டிராக்டர் செய்யும் அனைத்து வேலைகளையும் இந்த டிராக்டரும் செய்யும் என வினோத் குமார் பட்டேல் குறிப்பிட்டுள்ளார். போதிய பணமும், ஆதரவும் இல்லாத காரணத்தால், இந்த டிராக்டரை உருவாக்க வினோத் குமார் பட்டேல் மிகவும் மெனக்கெட்டுள்ளார். ஆனால் தயாரிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளதால், அவர் 'ஓவர்நைட் சென்சேஷன்' ஆகி விட்டார்.
இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இதே போன்ற டிராக்டரை உருவாக்கி தரும்படி தற்போது வினோத் குமார் பட்டேலுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. இது தொடர்பாக விவசாயிகள் பலர் வினோத் குமார் பட்டேலை அணுகியுள்ளனர். தற்போது வரை அவருக்கு 25 ஆர்டர்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக அவரால் உடனடியாக அவர்களுக்கு டிராக்டர்களை டெலிவரி செய்ய முடியாத சூழல் இருக்கிறது. இருப்பினும் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு டிராக்டர்களை டெலிவரி செய்ய தேவையான முயற்சிகளை வினோத் குமார் பட்டேல் எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக டிராக்டரின் விலையில் 50 சதவீதத்தை முன்கூட்டியே தரும்படி விவசாயிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வினோத் குமார் பட்டேல் போன்ற திறமைசாலிகள் பலர் இந்தியாவில் இருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டியது அரசின் கடமையாகும். அரசு இதை செய்யும்பட்சத்தில், பல திறமைசாலிகளின் வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்கும். இல்லாவிட்டால் பலரின் திறமை வெளி உலகத்திற்கே தெரியாமல் போய் விடும்.


Click it and Unblock the Notifications