பனாமா கால்வாயின் விந்தைகளும், சுவாரஸ்யங்களும்... !!

20ம் நூற்றாண்டின் பொறியியல் வல்லமைக்கு எடுத்துக்காட்டுகளில் முதன்மையானதாக பனாமா கால்வாய் கருதப்படுகிறது. உலக கப்பல் போக்குவரத்தில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் இந்த பனாமா கால்வாய், நூற்றாண்டுகளை கடந்த நிலையில், உலகின் மிகப்பெரிய கப்பல்கள் செல்லும் விதத்தில், விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த செயற்கை கால்வாய் உருவான விதம், அதன் தொழில்நுட்ப சிறப்புகள், தற்போது விரிவாக்கப்பட்டிருப்பதால் கிடைத்திருக்கும் நன்மைகளை இந்த செய்தித் தொகுப்பில் படித்து மகிழலாம்.

நில அமைப்பு

நில அமைப்பு

அமெரிக்க கண்டத்தின் குறுக்காக அட்லாண்டிக் பெருங்கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும் செயற்கை கால்வாய்தான் பனாமா கால்வாய். அமெரிக்க கண்டத்தின் நடுவில் இருக்கும் குறுகிய நிலப்பரப்பு வழியாக இந்த கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது.

உந்துதல்...

உந்துதல்...

அமெரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு நகரிலிருந்து அதற்கு எதிர் முனையில் அமைந்திருக்கும் சில நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரங்களை கடல் வழியாக கப்பல்கள் சென்றடைவதற்கு பல ஆயிரம் கிலோமீட்டர் சுற்ற வேண்டியிருந்தது. இதனால், எரிபொருள் செலவு, விபத்துக்கள், நேர விரயம் உள்ளிட்ட பல பாதகமான விஷயங்கள் இருந்தன.

திட்டம்

திட்டம்

இதையடுத்து, அமெரிக்க கண்டத்தின் நடுவில் உள்ள குறுகிய நிலப்பகுதி வழியாக, நீர் வழித்தடத்தை செயற்கையாக அமைக்கும் திட்டம் 16ம் நூற்றாண்டிலிருந்தே பரிசீலனை செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால், அந்த குறுகிய நில அமைப்பு மிகுந்த தொழில்நுட்ப சவால்களை கொண்டிருந்ததால், அந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்த இயலாமல் போனது.

சூயஸ் கால்வாய் வெற்றி

சூயஸ் கால்வாய் வெற்றி

ஆசியாவையும், ஐரோப்பாவையும் கடல் வழியாக இணைப்பதற்காக செயற்கையாக அமைக்கப்பட்ட சூயஸ் கால்வாய், 1869ம் ஆண்டு திறப்பு விழா கண்டது. பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தால் அமைக்கப்பட்ட இந்த கால்வாய் திட்டம்தான் பனாமா கால்வாய் அமைப்பதற்கான நம்பிக்கையையும், தொழில்நுட்ப உத்திகளையும் தருவதற்கு ஊன்றுகோலாக அமைந்தது.

பிரான்ஸிடம் ஒப்படைப்பு

பிரான்ஸிடம் ஒப்படைப்பு

சூயஸ் கால்வாய் அமைப்பதில் தலைமை பொறியாளராக செயல்பட்ட ஃபெர்டினான்ட் டி லெஸ்ஸிப்ஸிடம் பனாமா கால்வாய் அமைக்கும் திட்டம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், பனாமா கால்வாய் அமைப்பதற்கான நிலப்பகுதி மிக கரடுமுரடான நில அமைப்பையும், மழைக்காடுகளையும் கொண்டிருந்தது. இதனால், கால்வாய் வெட்டும் பணி கடும் சவாலாக இருந்தது. மேலும், பணியில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொற்று நோயிலும், விபத்திலும் சிக்கி கொத்து கொத்தாக மாண்டனர்.

விலகிய பிரான்ஸ்

விலகிய பிரான்ஸ்

இந்த திட்டத்தில் இருந்த சவால்கள், பணியாளர்களின் உயிரிழப்பு போன்றவை, இந்த திட்டத்திலிருந்து பிரான்ஸ் பின்வாங்க நேரிட்டது. ஏழு வருடங்கள் போராடியும் இந்த திட்டம் தோல்வியுற்றது. மேலும், பிரான்ஸ் அரசுக்கு இதனால் கடும் நிதி இழப்பும் ஏற்பட்டதால், திட்டத்திலிருந்து விலகியது.

 அமெரிக்கா வசம்...

அமெரிக்கா வசம்...

பிரான்ஸ் விலகியவுடன், அந்த திட்டத்தை 1904ம் ஆண்டு அமெரிக்கா வாங்கியது. கால்வாய் வெட்டுவதில் நிபுணரான கோதல்ஸ் என்ற பொறியாளரிடம் திட்டம் ஒப்படைக்கப்பட்டது. கால்வாய் தோண்டும்போது பிரான்ஸ் சந்தித்த பிரச்னைகள், தொழில்நுட்ப சவால்களை எவ்வாறு களைந்து கால்வாய் வெட்டலாம் என்று ஆராய்ந்து, அதற்கு ஏற்ப அமெரிக்க எஞ்சினியர் கோதல்ஸ் பணியை துவங்கினார்.

ஐடியா...

ஐடியா...

முதலில் இரண்டு கடல் பகுதிகளையும் நேரடியாக இணைக்கும் விதத்தில் மலைகளையும், பாறைகளையும் பிளந்து கால்வாய் அமைக்க திட்டமிட்டனர். ஆனால், அதற்கான நிதி செலவும், கால விரயமும் பன்மடங்கு அதிகமாகும் என்பதை உணர்ந்தனர். இதையடுத்து, நீர்த்தேக்கிகள் மற்றும் மலை மீது செயற்கை ஏரியை உருவாக்கி கால்வாயை அமைக்க முடிவு செய்தனர்.

பனாமா கால்வாய்

பனாமா கால்வாய்

கொலம்பியாவின் காலனி நாடாக இருந்த பனாமா வழியாக கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொலம்பியாவை, வழக்கமான தனது சாணக்கிய அரசியல் மூலமாக அமெரிக்கா அடிபணிய வைத்தது. மேலும், கொலம்பியாவை பணிய வைத்து, ஒப்பந்தம் ஒன்றையும் அமெரிக்கா செய்து கொண்டது. அதன்படி, கால்வாய் பராமரிப்பு, கட்டுப்பாட்டை அமெரிக்கா வசப்படுத்தி, பனாமா கால்வாய் அமைக்கும் பணிகளை துவங்கியது. வெடிமருந்துகள், மண் தோண்டும் கருவிகள், மண்ணை எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் உள்ளிட்ட சாதனங்களுடன் மிக பிரம்மாண்டமான முறையில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்தன.

ரெடி

ரெடி

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்களின் அயராத உழைப்பில் பனாமா செயற்கை கால்வாய் அமைக்கப்பட்டது. 1914ம் ஆண்டில் இந்த கால்வாய் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இந்த கால்வாய் 80 கிமீ நீளத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நீர்த்தேக்கிகள் வழித்தடம் கொண்ட அமைப்புடன் கட்டப்பட்டது.

செயற்கை ஏரிகள்

செயற்கை ஏரிகள்

பனாமா கால்வாய் வழித்தடத்தில் மூன்று செயற்கை ஏரிகள், அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டன. அதில், கட்டூன் ஏரிதான் உலகின் மிகப்பெரிய செயற்கை ஏரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரி 2.4 கிமீ நீளமும், கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் அகலமும், 80 அடி ஆழமும் கொண்டது. இந்த ஏரிகளில் மழை பெய்யும்போது தண்ணீர் சேமிக்கப்பட்டு கப்பல் போக்குவரத்துக்கு ஆதாரமாக விளங்குகிறது.

விந்தையான தொழில்நுட்பம்

விந்தையான தொழில்நுட்பம்

கடலில் இருந்து பனாமா கால்வாய்க்குள் நுழையும்போது கப்பல்கள் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மூன்றடுக்குகளாக உயர்த்தும் அமைப்புடைய, ராட்சத நீர்தொட்டிகளில், நிறுத்தப்பட்டு உயரம் அதிகரிக்கப்படும். அங்கிருந்து கப்பல்கள் கால்வாய் வழியாக பயணித்து ஏரியில் நுழைந்து மறுபக்கம் செல்கின்றன. மறுபுறத்தில் இருக்கும் மூன்றடுக்கு உயரம் கொண்ட நீர்த்தொட்டிகள் வழியாக கப்பலின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு கால்வாயை மீண்டும் கடந்து கடலை அடைகின்றன.

ராட்சத தொட்டிகள்

ராட்சத தொட்டிகள்

ஒவ்வொரு தொட்டியிலும் கப்பலை நிறுத்தி பல லட்சம் கேலன் தண்ணீர் நிரப்பப்பட்டு கப்பல் நிற்கும் உயரம் அதிகரிக்கப்படுகிறது. அதற்கு இணையான நீர்மட்டம் கொண்ட அடுத்த தொட்டிக்கு கப்பல் செல்லும். நீர் நிரப்புதற்கும், வெளியேற்றுவதற்கும் ராட்சத நீர் வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறாக மூன்று தொட்டிகளின் மூலமாக கப்பல்கள் 90 அடி வரை உயர்த்தப்படுகின்றன. இதற்காக, தொட்டிகளை அடைக்கும் விதத்தில், ராட்சத கதவுகள் கொண்ட பூட்டு அமைப்பு இருக்கிறது. அதேபோன்று, நீர்த்தொட்டிகளில் கப்பல்கள் நிறுத்தப்பட்டு உயரம் குறைக்கப்படுகிறது. இது விந்தையான தொழில்நுட்பமாகவும் இருக்கிறது.

பிரத்யேக எந்திரங்கள்

பிரத்யேக எந்திரங்கள்

கப்பல்களை நீர்த்தொட்டிகளில் நிறுத்த வரும்போது பக்கவாட்டில் இடித்துவிடாமல் நேராக கொண்டு வந்து துல்லியமாக நிறுத்துவதற்காக, தொட்டிகளின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் தண்டவாளங்களில், ரயில் எஞ்சின் போன்ற இழுவை எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை கப்பலுடன் கம்பி வடங்கள் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும். அதேபோன்று, அதிக திறன் கொண்ட இழுவை கப்பல்களும் பயன்படுத்தப்படுகின்றன.

பணம் கொட்டும் தொழில்

பணம் கொட்டும் தொழில்

பனாமா கால்வாய் கட்டியதற்காக, 1999ம் ஆண்டு வரை அமெரிக்கா இந்த கால்வாயின் பராமரிப்பு மற்றும் கட்டண வசூலிப்பு முறையை மேற்கொண்டு வந்தது. அதன்பிறகு, பனாமா நாட்டு வசம் இந்த கட்டண வசூல் முறை ஒப்படைக்கப்பட்டது. தற்போது பனாமா நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரமே இந்த கால்வாய்தான். இந்த கால்வாயில் பயணிக்கும் ராட்சத கப்பல்களுக்கு ஒரு வழிக்கட்டணமாக ஒரு லட்சம் டாலர்கள் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன. பனாமா நாட்டுக்கு பெரும் வருவாய் ஈட்டப்படுவதுடன், இதில் 14,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில், 5,000 தொழிலாளர்கள் பனாமா நாட்டை சேர்ந்தவர்கள்.

சோகத்தை மறைத்து நிற்கும் அதிசயம்

சோகத்தை மறைத்து நிற்கும் அதிசயம்

பனாமா கால்வாய் கட்டுமானத்தின்போது 25,000 தொழிலாளர்கள் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கொசுக்களினால் பரவும் நோய்களினால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு நிலவிய மிக மோசமான தட்பவெப்பம் காரணமாக, தொழிலாளிகளின் உடல்நிலை சீக்கிரமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

விரிவாக்கம்

விரிவாக்கம்

தற்போது கப்பல் வணிகம் பன்மடங்கு கூடியிருப்பதால், கப்பல்களின் வடிவமும் மிக பிரம்மாண்டமாய் மாறியிருக்கிறது. இதற்கு ஏற்ப கால்வாயை விரிவாக்க பனாமா கால்வாய் நிர்வாகமும், அந்நாட்டு அரசும் முடிவு செய்தன. 2007ம் ஆண்டு இதற்கான பணிகள் துவங்கி, மூன்றாவது நீர்த்தேக்கி தொட்டிகளை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கப்பல் போக்குவரத்து துவங்கியிருக்கிறது. 5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் துவங்கப்பட்ட, விரிவாக்கத் திட்டம் கால தாமதத்தால், தற்போது 17 பில்லியன் டாலர்கள் மதிப்பில் நிறைவடைந்துள்ளது. இந்த திறப்பு விழாவில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பயன்

பயன்

ஏற்கனவே 4,500 கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் திறன் படைத்த கப்பல்கள்தான் இந்த கால்வாய் வழியாக பயணிக்கும் நிலை இருந்தது. ஆனால், தற்போது விரிவாக்கம் செய்யப்பட்ட கால்வாய் மூலமாக 14,000 கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை கூட கையாளும் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால், 110 அடி அகலமும், 1,000 அடி நீளம் கொண்ட உலகின் மிகப்பெரிய கப்பல்களை இந்த கால்வாய் வழியாக எளிதாக கடக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், 18,000 கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் சூப்பர் சைஸ் கப்பல்களை இந்த புதிய கால்வாய் வழியாக செல்ல இயலாது.

போக்குவரத்து புள்ளி விபரம்

போக்குவரத்து புள்ளி விபரம்

ஆண்டுக்கு இதுவரை 13,000 முதல் 14,000 கப்பல்கள் இந்த பனாமா கால்வாய் வழியாக பயணித்து மறுபுறத்தை அடைக்கின்றன. 1914ம் ஆண்டிலிருந்து இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான கப்பல்கள் இந்த கால்வாயை பயன்படுத்தி பயணித்துள்ளன. கடந்த 2010ம் ஆண்டு ஒரு மில்லியனாவது கப்பல் இந்த வழித்தடத்தை கடந்தது.

பயண நேரம்

பயண நேரம்

பனாமா கால்வாயை நெருங்கும்போது கப்பல்கள், கால்வாய் நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும். கப்பலின் எடை, வடிவம் உள்ளிட்ட தகவல்களுடன் முன்பதிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளை பனாமா கால்வாய் நிர்வாகம் செய்யும். அதன்பிறகே, கப்பல் பனாமா கால்வாயை நெருங்க முடியும். அதுவரை கடலிலேயே பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். மொத்தமாக இந்த கால்வாயை கடந்து மறுபுறத்தில் கடலை அடைவதற்கு 23 மணி நேரத்திலிருந்து 30 மணி நேரம் பிடிக்குமாம். பனாமா கால்வாயின் முக்கிய பகுதியை கடப்பதற்கு மட்டும் 8 மணி நேரம் பிடிக்கும்.

மற்றொரு திட்டம்

மற்றொரு திட்டம்

பனாமா கால்வாய் அமைப்பதற்கு முன்னர், நிகரகுவா வழியாகவும் கால்வாய் அமைக்க திட்டம் பரிசீலிக்கப்பட்டது. அந்த திட்டத்தை செயல்படுத்தி தர தயார் என்று 2013ம் ஆண்டு சீன நிறுவனம் ஒன்று நிகரகுவா நாட்டிடம் தெரிவித்தது. இது அமையும் பட்சத்தில் பனாமா கால்வாய் வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

போக்குவரத்து நிறுத்தம்

போக்குவரத்து நிறுத்தம்

நிலச்சரிவு, பராமரிப்புப் பணிகள், விபத்துக்கள் போன்றவற்றால் சில வேளைகளில் இந்த கால்வாய் மூடப்பட்ட கதையும் உண்டு. ஆனால், 24 மணிநேரமும், ஆண்டின் அனைத்து நாட்களிலும் இயங்குகிறது பனாமா கால்வாய். ஓய்வறியாமல் உழைக்கும் பனாமா கால்வாய் உலகின் 160 நாடுகளையும், 1,700 துறைமுகங்களையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்து தடமாக பயன்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Fascinating Facts About the Panama Canal.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X