வருஷத்துக்கு ஒரு தடவை கட்டினால் போதுமா!! டோல் பூத்தில் இருந்து சில வினாடிகளில் கிளம்பிடலாம்!
எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்தையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அந்த நாட்டின் சாலை உள்கட்டமைப்பு ஆகும். ஏனெனில், சர்வதேச வணிகத்தை உள்நாட்டு வணிகத்துடன் இணைப்பதில் முக்கியமான பாலமாக நாட்டின் நெடுஞ்சாலைகள் விளங்குகின்றன. நெடுஞ்சாலைகளுக்கு மாற்றாக, உலக தரத்திலான விரைவுச்சாலைகளை கொண்டுவரும் பணிகளில் கடந்த சில வருடங்களாகவே மத்திய அரசு தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் விரைவுச்சாலைகளை கொண்டுவந்து நாட்டின் சாலை போக்குவரத்தை விரைவுப்படுத்துவது தான் மத்திய அரசாங்கத்தின் முக்கியமான நோக்கமாக உள்ளது.
ஆனால், இதற்கு அரசாங்கத்தின் உழைப்பு மட்டும் இருந்தால் மட்டும் போதாது. மக்களாகிய நமது நிதி உதவியும் தேவைப்படுகிறது. அதற்காகவே சுங்கச்சாவடி கட்டணங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், வரிசையில் நின்று கட்டணத்தை செலுத்த வேண்டி இருந்ததால், சுங்கச்சாவடி கட்டணங்களினால் போக்குவரத்தில் தாமதங்கள் ஏற்பட ஆரம்பித்தன.

பாதுகாப்பான முறையில் போக்குவரத்தை எவ்வாறு விரைவுப்படுத்துவது என யோசித்துவந்த மத்திய அரசுக்கு கட்டணங்களை செலுத்துவதற்காக வாகன ஓட்டிகள் நீண்ட நேரத்திற்கு வரிசையில் நிற்க வேண்டி இருப்பது பெரிய குறையாக தெரிந்தது. இந்த பிரச்சனையை சமாளிக்கும் பொருட்டே 2017ஆம் ஆண்டில் 'ஃபாஸ்டேக்' (FASTag) என்கிற புதிய கட்டணம் வசூலிக்கும் முறையை இந்திய நெடுஞ்சாலை துறை கொண்டுவந்தது.
கட்டணத்தை செலுத்துவதற்கு பதிலாக ரேடியோ அதிர்வெண் கொண்ட அடையாள தொழிற்நுட்ப அட்டையை சுங்கச்சாவடியில் காட்டினாலே போதும் என்கிற நிலையை ஃபாஸ்டேக் மூலம் கொண்டுவந்தனர். இது வரிசையில் நின்று நேரத்தை வீணடிப்பதை வெகுவாக குறைத்தது. இருப்பினும், அந்த குறுகிய நேரத்தை கூட வாகன ஓட்டிகள் செலவு செய்ய கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் மத்திய அரசு, அதன் ஒருபகுதியாக புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

இதுகுறித்து நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஃபாஸ்டேக்கில் வருடாந்திர கட்டண முறையை கொண்டுவர மத்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதாவது, வருடம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் பயணிப்பதற்கு ஒருமுறை கட்டணம் செலுத்தினாலே போதுமானது என்கிற முறை கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான ஒருமுறை வருட கட்டணமாக ரூ.3,000 நிர்ணயிக்கப்பட உள்ளது.
இந்த புதிய டோல் கட்டண முறையை அறிமுகம் செய்வதுடன், ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்துவதை இரு பிரிவாக பிரிக்க மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக இந்த அமைச்சகத்தை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, புதிய வருட பாஸ் முறையை கடைப்பிடிப்பது அல்லது பயணம் செய்த தூரத்தை பொறுத்து கட்டணத்தை செலுத்துவது என இரு ஆப்ஷன்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

ஒருமுறை வருடாந்திர கட்டணத்தை செலுத்துவதன் மூலமாக வருடம் முழுவதும் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளை உபயோகப்படுத்தலாம். அதுவே, பயண தூரத்தை பொறுத்து கட்டணத்தை செலுத்தும் முறை ஆனது வருடாந்திர கட்டண முறையை தேர்வு செய்யாதவர்கள் பின்பற்ற வேண்டியது ஆகும்.
அதாவது, அரசாங்கத்தால் முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ள வருடந்திர கட்டண முறையை தேர்வு செய்யவில்லை எனில், தூரத்தை பொறுத்த கட்டண முறை நேரடியாக அமலுக்கு வந்துவிடும். இந்த கட்டண முறையும் மத்திய அரசாங்கம் புதியதாக கொண்டுவருவது ஆகும். தற்போதைய சுங்கச்சாவடி கட்டண முறைக்கு பதிலாக, 100கிமீ-க்கு ரூ.50 என்கிற 'தூரத்தை பொறுத்து கட்டணம்' வசூலிக்கும் முறை பின்பற்றப்பட உள்ளதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புதிய சுங்கச்சாவடி கட்டண வசூலிக்கும் முறைகளால் தற்போதைய ஃபேஸ்டேக் கட்டணம் வசூலிக்கும் சிஸ்டத்தில் பெரியதாக எந்த மாற்றமும் கொண்டுவர வேண்டியது இல்லை. ஆனால், புதிய வருடாந்திர ஃபேஸ்டேக் கட்டணம் முறை குறித்த விபரங்கள் இன்னும் தேவைப்படுகின்றன. ஏனெனில், வருடத்திற்கு ரூ.3,000 என்பது குறிப்பிட்ட எந்த வாகனங்களுக்கு ஆனது? அல்லது அனைத்து விதமான வாகனங்களுக்கும் ஆனதா என்கிற விபரங்கள் தெரிய வேண்டியுள்ளன. தற்போதைக்கு இதுகுறித்த பேச்சுவார்த்தையில் தான் மத்திய அரசாங்கம் உள்ளதால், வருடாந்திர ஃபேஸ்டேக் கட்டணம் குறித்த விபரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications









