பாஸ்ட்டேக் பயன்படுத்தினால் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம் தெரியுமா? அப்போ உடனே வாங்கிட வேண்டியதுதான்
பாஸ்ட்டேக் பயன்படுத்தினால் எவ்வளவு ரூபாய் சேமிக்கப்படும் என்பது உள்ளிட்ட தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி விட்டு செல்வதால், கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் கட்டணம் செலுத்துவது தொடர்பாக சில சமயங்களில் வாகன ஓட்டிகளுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே மிக கடுமையான வாக்குவாதம், தகராறு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.

இதுபோன்ற காரணங்களால் டோல்கேட்களில் மிகவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவ்வாறான சமயங்களில் வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தி செல்ல நீண்ட நேரமாகிறது. எனவே இத்தகைய பிரச்னைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாஸ்ட்டேக் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

பாஸ்ட்டேக் மூலமாக டோல்கேட்களில் வாகனங்களின் தடையற்ற இயக்கம் உறுதி செய்யப்படும். அத்துடன் வாகனங்கள் வேகமாக செல்வதால், டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையும் தவிர்க்கப்படும். பாஸ்ட்டேக் மூலம் வாகன ஓட்டிகளுக்கு இன்னும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. டோல்கேட்களில் நெரிசலாக இருந்தால் கட்டணம் செலுத்த நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கும்.

இதன் மூலம் உங்கள் நேரத்துடன் சேர்த்து, உங்கள் வாகனத்தின் எரிபொருளும் வீணாக செலவாகும். ஆனால் பாஸ்ட்டேக் மூலம் இந்த பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன. உங்கள் வாகனத்திற்கு பாஸ்ட்டேக் இருக்கும் பட்சத்தில், நீங்கள் தொடர்ந்து பயணித்து கொண்டே இருக்கலாம். மேலும் ரசீது கொடுக்க வேண்டியது கிடையாது என்பதால், காகித பயன்பாட்டையும் பாஸ்ட்டேக் குறைக்கிறது.

இவ்வாறு ஏராளமான நன்மைகள் இருப்பதால், கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் டிசம்பர் 1ம் தேதியன்று இந்த உத்தரவு அமலுக்கு வரவில்லை. அதற்கு மாறாக டிசம்பர் 15ம் தேதி வரை 15 நாட்களுக்கு கூடுதல் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் கடந்த டிசம்பர் 15ம் தேதியும் வாகன ஓட்டிகளுக்கு சிறிய தளர்வு வழங்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு டோல்கேட்டிலும் 75 சதவீத லேன்கள் பாஸ்ட்டேக் லேன்களாக இருக்க வேண்டும் எனவும், அதே சமயம் 25 சதவீத லேன்கள் ஹைப்ரிட் லேன்களாக இருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. வாகன உரிமையாளர்கள் இந்த 25 சதவீத ஹைப்ரிட் லேன்களில் ரொக்கமாகவும் கட்டணம் செலுத்தலாம்.

ஆனால் இந்த சலுகையும் ஒரு மாத காலத்திற்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் ஜனவரி 15ம் தேதி வரை. இன்னும் பலர் பாஸ்ட்டேக்கை வாங்காததால், இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வாகன உரிமையாளர்கள் மத்தியில், பாஸ்ட்டேக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.

இந்த சூழலில் பாஸ்ட்டேக் விற்பனை தற்போது 1 கோடி என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். பாஸ்ட்டேக்கை அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் டோல் பிளாசாக்களில் டிராபிக் ஜாம் குறையும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில் டோல்கேட்களில் போக்குவரத்து இயக்கத்தின் வேகம் குறைந்தபட்சம் 4 மடங்கு அதிகரிக்கும் எனவும் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதனிடையே பாஸ்ட்டேக் மூலமான பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 20 லட்சம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து துறை செயலாளர் சஞ்சீவ் ரஞ்சன் இதனை தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்போது, எரிபொருள் விரயம் மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படுவதால், 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் சேமிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது!! எனவே இதுவரை வாங்காமல் இருக்கும்பட்சத்தில், உங்கள் வாகனத்திற்கு உடனடியாக பாஸ்ட்டேக்கை வாங்கி விடுங்கள்.


Click it and Unblock the Notifications








