ஸ்டண்ட் செஞ்சவங்களுக்கு சட்டத்த மீறி பாடம் புகட்டிய மக்கள்! மொத்த சோஷியல் மீடியாவும் சப்போட்டுக்கு வந்துருச்சு
உலகிலேயே சாலை விபத்துக்களால் (Road Accidents) மிகவும் கடுமையாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற மறுப்பதுதான், இதற்கு மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது இந்தியாவில் சமீப காலமாக ஒரு மோசமான கலாச்சாரம், மிகவும் வேகமாக பரவி வருகிறது. பொது சாலைகளில் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுவதை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம்.
பொது சாலைகளில் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுவர்களால், அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை. கூடவே சாலையை பகிர்ந்து கொள்ளும் மற்ற வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய நபர்கள் மீது காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் எல்லாம் இல்லை.

தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து கொண்டுதான் உள்ளனர். இருப்பினும் காவல் துறை அதிகாரிகளால், நிலைமையை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை. எனவே பொதுமக்களே தற்போது சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் நடைபெற்றுள்ளது.
அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் சமீபத்தில் ஒரு சிலர் குழுவாக பைக் ஸ்டண்ட்டில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 2 பேரை, பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அத்துடன் நிற்காமல் அவர்களின் ஸ்கூட்டர்களை, பாலம் ஒன்றின் மேலே இருந்து கீழே வீசி, சுக்குநூறாக நொறுக்கி இருக்கின்றனர்.
பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு 2 ஸ்கூட்டர்கள் சுக்கு நூறாக்கப்பட்ட சம்பவத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக 36 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 36 பேரும் பைக் ஸ்டண்ட்டில் ஈடுபட்டவர்கள் ஆவர்.
ஆனால் ஸ்கூட்டர்களை பாலத்தில் இருந்து கீழே வீசியது தொடர்பாக பொதுமக்கள் மீது காவல் துறை தரப்பில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது உறுதியாக தெரியவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் அப்பகுதியில் போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பொதுமக்கள் செய்தது சரியா? தவறா? என்று கேட்டால், நிச்சயமாக தவறுதான். பைக் ஸ்டண்ட்டில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்காக பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்தது தவறு என்றுதான் நாங்கள் கருதுகிறோம். ஆனால் சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலரும், பொதுமக்களின் செயலை நியாயப்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் செய்தது தவறு என்று கூறுவதால், பைக் ஸ்டண்ட்டில் ஈடுபட்டவர்களை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதுவும் தவறுதான். ஆனால் பைக் ஸ்டண்ட்டில் ஈடுபடுவதை தவறு என்றெல்லாம் கூறி விட முடியாது. பொது சாலைகளில், மற்றவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் பைக் ஸ்டண்ட்டில் ஈடுபடுவதுதான் தவறு.
பைக் ஸ்டண்ட்டில் ஆர்வம் உடையவர்கள், பாதுகாப்பான தனியார் இடங்களில் தங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம். ஆனால் அப்போது பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் அணிந்திருப்பதை உறுதி செய்து கொள்வது நன்மை பயக்கும். பெங்களூர் சம்பவத்தை பொறுத்தவரை, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு உள்ளது.


Click it and Unblock the Notifications








