எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சட்டம் எல்லாருக்கும் சமம்! 7.5 கோடி ரூபா காருக்கு ஒரே நாளில் முடிவு கட்டிய RTO!!
ஃபெராரி (Ferrari) கார் ஒன்றை சாலையில் பார்ப்பது என்பதே நம்மில் நிறைய பேருக்கு அரிதான விஷயமாக இருக்கும் நிலையில், ஃபெராரி கார் ஒன்றை வாங்குவதை எல்லாம் யோசித்து பார்க்கவே முடிவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், பென்ஸ் (Benz), பி.எம்.டபிள்யூ (BMW) போன்ற விலையுயர்ந்த கார்களை வாங்கக்கூடிய பணக்காரர்களுக்கு கூட ஃபெராரி, லம்போர்கினி (Lamborghini) போன்ற அல்ட்ரா-லக்சரி கார்களை வாங்குவது கனவாகவே உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இங்கு ஒருவரது விலையுயர்ந்த ஃபெராரி கார் ஆர்டிஓ (RTO) அதிகாரிகளால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் சாலைகளை அமைப்பதற்கும், அவற்றை தொடர்ந்து பராமரிப்பதற்கும் மக்களிடம் இருந்து சாலை வரியாக கிடைக்கும் பணம் அரசாங்கத்திற்கு மிகவும் அத்தியாவசியமாக உள்ளது. புதியதாக எந்தவொரு மோட்டார் வாகனத்தை வாங்கினாலும் அதற்கு ஷோரூமிலேயே சாலை வரியை ஆன்-ரோடு விலை உடன் சேர்த்து வசூலித்து விடுவர்.

அதேபோல், ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு வாகனத்தை கொண்டு சென்று குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பயன்படுத்துகிறீர்கள் எனில், அதனை அந்த மாநிலத்திலேயே அருகில் உள்ள ஆர்டிஓ-இல் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். நேஷ்னல்-பர்மிட் (National Permit) வாகனங்களுக்கு இதில் விலக்கு உள்ளது. அவ்வாறு வாகனத்தை மறுபதிவு செய்யும்போது அதற்கான சாலை வரியையும் மீண்டும் செலுத்த வேண்டியிருக்கும்.
இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றாலும், சாலை போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றும் கர்நாடகாவில் சாலை வரி விஷயத்தை கண்டிப்புடன் கடைப்பிடிக்கின்றனர். குறிப்பாக, பெங்களூருவின் அடையாளமாக மாறி போன போக்குவரத்து நெரிசலை குறைக்க, வெளி மாநிலத்தில் இருந்து வந்து நீண்ட மாதங்களாக கர்நாடகா பதிவெண்ணை பெறாமல் இருக்கும் வாகன ஓட்டிகளை கடந்த சில வருடங்களாகவே பெங்களூரு ஆர்டிஓ அதிகாரிகள் தேடி தேடி பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.

அதிலிலும் குறிப்பாக, விலையுயர்ந்த சொகுசு கார்களை வைத்திருப்பவர்கள் தான் பெங்களூரு ஆர்டிஓ அதிகாரிகளின் முக்கியமான டார்க்கெட்டே ஆகும். ஏனெனில், காரின் விலையை பொறுத்துதான் சாலை வரியும் அமைகிறது. இதனாலேயே கடந்த சில வருடங்களில் போர்ஷே (Porsche), லேண்ட் ரோவர் (Land Rover), மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) கார்கள் மட்டுமின்றி, அஸ்டன் மார்டின் (Aston Martin) கார் ஒன்றிற்கு கூட அபராதம் விதிக்கப்பட்டதை பற்றி பார்த்திருக்கிறோம்.
அந்த வரிசையில்தான் தற்போது, சுமார் ரூ.7.5 கோடி மதிப்பிலான ஃபெராரி எஸ்.எஃப்90 (Ferrari SF90) கார் ஒன்றை சாலை வரி செலுத்தாதற்காக பெங்களூருவை சேர்ந்த ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. உரிமையாளரின் வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிறத்திலான இந்த ஃபெராரி எஸ்.எஃப்90 காரை நேரடியாக அவரது வீட்டிற்கே சென்று பறிமுதல் செய்துள்ளனர்.

இதைவிட நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி என்னவென்றால், தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த ஃபெராரி கார் உரிமையாளர் செலுத்த வேண்டிய மொத்த சாலை வரி எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.1.45 கோடி ஆகும். மஹாராஷ்டிரா (Maharashtra) மாநில ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்பட்ட இந்த ஃபெராரி காரில் '3333' என்கிற ஃபேன்சியான வாகன பதிவெண் உள்ளது. இந்த குறிப்பிட்ட ஃபெராரி எஸ்.எஃப்90 கார் பெங்களூரு சாலைகளில் பலமுறை காட்சி தந்துள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்கள் கூட இணையத்தில் உள்ளன. அந்த வீடியோக்களும், படங்களும் தான் கடைசியில் இந்த ஃபெராரி கார் ஓனருக்கு எதிராக அமைந்துள்ளன. அதாவது, அந்த படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்தே இவ்வாறான ஃபெராரி கார் ஒன்று பெங்களூருவில் நீண்ட மாதங்களாக இயங்கி வருகிறது என்பதை அறிந்து அதற்கு நோட்டீஸ் அனுப்பி, நோட்டீஸுக்கு எந்த பதிலும் வராத காரணத்தினால் தற்போது காரை பறிமுதல் செய்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு விலையுயர்ந்த காரை வாங்கி, அதற்கு மேலும் பல லட்ச ரூபாய்களை செலவு செய்து ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்கியவர் சாலை வரி செலுத்தாமல் அரசாங்கத்தை ஏமாற்ற நினைத்திருப்பதை என்னவென்று சொல்வது...? கர்நாடக அரசை போன்று, சாலை வரி விஷயத்தில் மற்ற மாநிலங்களும் தீவிரமாக இருந்தால், அரசாங்கத்திற்கு வருவாய் இன்னும் கூடுதலாக கிடைக்கும்.
Source: @NEWS9LIVE (https://www.youtube.com/@NEWS9LIVE/shorts)


Click it and Unblock the Notifications









