இதெல்லாம் அவருக்கு சாதாரணம்... வால்வோ காரை வாங்கிய பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி... விலை எவ்ளோனு தெரியுமா?
பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி தற்போது வால்வோ நிறுவனத்தின் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனராக உருவெடுத்திருப்பவர் எஸ்.எஸ். ராஜமௌலி (S.S. Rajamouli). நான் ஈ, பாகுபலி மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்த ஆர்ஆர்ஆர் என ராஜமௌலி இயக்கிய திரைப்படங்கள் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் வசூலை வாரி குவிக்கின்றன. இந்த சூழலில், புதிய கார் ஒன்றை ராஜமௌலி தற்போது வாங்கியுள்ளார்.

வால்வோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவு மூலம் இந்த தகவல் நமக்கு தெரியவந்துள்ளது. இந்த இன்ஸ்டாகிராம் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: வால்வோ கார் இந்தியா குடும்பத்திற்கு முன்னோடி திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியை பணிவுடன் வரவேற்கிறோம்.

அவரது பாதுகாப்பான மற்றும் சௌகரியமான பயணங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள். இவ்வாறு அந்த பதில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இயக்குனர் ராஜமௌலி, புதிய காரின் சாவியை பெறும் புகைப்படமும் இந்த பதிவில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் தற்போது சமூக வலை தளங்களில் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

அத்துடன் புதிய வால்வோ காரை வாங்கியுள்ள இயக்குனர் ராஜமௌலிக்கு பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் ராஜமௌலி தற்போது வாங்கியிருப்பது வால்வோ எக்ஸ்சி40 (Volvo XC40) கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் வால்வோ எக்ஸ்சி40 கார் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அது டி4 ஆர்-டிசைன் (T4 R-Design) வேரியண்ட் ஆகும். இந்த மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை 44.50 லட்ச ரூபாய் ஆகும். ஆன் ரோடு விலை தோராயமாக 51 லட்ச ரூபாய் என்ற அளவில் வரும். வால்வோ எக்ஸ்சி40 காரின் டி4 ஆர்-டிசைன் வேரியண்ட்டில், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 187.40 பிஹெச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். தற்போதைய நிலையில் பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் மட்டுமே வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி கார் கிடைக்கிறது. டீசல் இன்ஜின் தேர்வு இல்லை. இந்த காரில், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. இது ஃப்ரண்ட் வீல் டிரைவ் (FWD - Front Wheel Drive) கார் ஆகும்.

பொதுவாக வால்வோ கார்கள் பாதுகாப்பிற்கு பெயர் பெற்றவை. இதற்கு வால்வோ எக்ஸ்சி40 காரும் விதிவிலக்கு அல்ல. இந்த காரில் 7 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அஸிஸ்ட், டிராக்ஸன் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகளையும் வால்வோ எக்ஸ்சி40 கார் பெற்றுள்ளது.

இதுதவிர இபிடி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற வசதிகளும் வால்வோ எக்ஸ்சி40 காரில் வழங்கப்பட்டுள்ளன. ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ஹில் டெசண்ட் கண்ரோல், ஹில் அஸிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளையும் வால்வோ எக்ஸ்சி40 கார் பெற்றுள்ளது. அதே நேரத்தில் வால்வோ எக்ஸ்சி40 காரில், 54 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட வால்வோ எக்ஸ்சி40 காரைதான் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி தற்போது வாங்கியுள்ளார். இந்த சூழலில் இந்திய சந்தையில் தற்போது வால்வோ கார்களின் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வால்வோ மட்டுமல்லாது இன்னும் பல்வேறு சொகுசு கார் நிறுவனங்களும் தங்கள் வாகனங்களின் விலைகளை அதிகரித்துள்ளன.

இதில், பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் ஆடி போன்ற சொகுசு கார் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை. உற்பத்தி செலவு அதிகரித்து கொண்டே வருவது உள்ளிட்ட காரணங்களால் கார்களின் விலைகளை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொகுசு கார் நிறுவனங்கள் மட்டுமல்லாது, மாருதி சுஸுகி போன்ற நிறுவனங்களும் இந்திய சந்தையில் தற்போது கார்களின் விலைகளை உயர்த்தியுள்ளன. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையுடன் சேர்ந்து, கார்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








