குப்பை வீசியதால் ரூ2,400 அபராதம் போட்ட டிடிஆர்! இப்படி ஒரு ரூல்ஸ் இருக்குறதே யாருக்கும் தெரியாதே!
நாம் குழந்தைகளாக இருக்கும்போதே குப்பைகளை எப்படி குப்பைத் தொட்டியில் போட வேண்டும், எப்படி நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என நாம் வீட்டிலிருந்து பள்ளி முதல் பல இடங்களில் கற்றுத் தரப்படுகிறது. ஆனால் மக்கள் பலர் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது போல் பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பதில்லை. இது இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ரயிலில் பயணம் செய்த பயணிகள் ரயிலை குப்பையாக்கியதற்காக ரூபாய் 2400 அபராதமாக செலுத்தியுள்ளார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ரயிலில் நாம் பயணம் செய்யும்போது உணவருந்தி கொண்டே பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறோம். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் போது பயணத்தின் நடுவே உணவு உட்கொள்வது என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயம் தான். ரயில் பயணிகள் பலர் பயணத்தின் போது உணவு சாப்பிட்டு விட்டு அதன் குப்பைகளை ரயிலிலேயே வீசிவிடுகிறார்கள்.

முக்கியமாக சீட்டுக்கு அடியில் மிக அதிகமாக குப்பை சேர்கிறது. இது ரயில் பயணத்தை சுகாதாரமற்ற ஒரு இடமாக மாற்றி விடுகிறது. ரயிலில் பயணம் செய்யும்போது இப்படியாக உணவு சாப்பிட்டால் அந்த குப்பைகளை போடுவதற்காக குப்பை தொட்டிகள் டாய்லெட் அருகே அமைக்கப்பட்டு இருக்கும். பொதுமக்கள் அந்த குப்பைத் தொட்டியில் தான் தங்களது குப்பைகளை போட வேண்டும்.
இது குறித்து ரயில்வே நிர்வாகம் பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை செய்து வருகிறது. எப்படி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது குற்றம் எனவும், அதிக லக்கேஜ்களை ஏற்றுக் கொண்டு பயணம் செய்வது குற்றம் எனவும், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறதோ அதேபோலவே ரயில் நிலையத்தையும் ரயில் பெட்டிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் டெல்லியை அடுத்த ஆக்ரா பகுதியில் இப்படியாக ரயில் பயணத்தில் ஈடுபடும் போது பயணிகள் விதிமுறை மீறலில் ஈடுபடுவதை கண்காணிக்க ரைடு ஒன்று நடத்தப்பட்டது. இதில் ரயில் பயணிகள் விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. பொதுவாக இந்த ரைடுகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகள் மீது அபராதம் விதிக்கப்படும்.
ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக அனைத்து விதமான விதிமுறைகளுக்கு ரைடு நடத்தப்பட்டு விதிமுறைகளை மீறும் பயணிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இதில் முக்கியமாக ரயிலில் சாப்பிட்டு விட்டு அதன் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடாமல் ரயில் பெட்டியிலேயே வீசிய நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இப்படியாக இந்த ரைடில் மொத்தம் 22 பயணிகளுக்கு ரூபாய் 2400 குப்பைகளை ரயில் பெட்டியில் வீசி அசுத்தம் செய்வதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோக 243 பயணிகள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. 304 பயணிகளிடம் மற்ற விதிமுறை மீறல்களுக்கான அபராதம் விதிக்கப்பட்டது. ஆக மொத்தம் இந்த ரைடில் ரூ 2,43,750 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.
குறிப்பாக குப்பைகளை குப்பை தொட்டியில் வீசாமல் ரயில் பெட்டி உள்ளேயே வீசியவர்களுக்கு அவர்கள் வீசிய பொருட்களின் மதிப்பில் 10 மடங்கு அபராதமாக விதிக்கப்பட்டது. உதாரணமாக பத்து ரூபாய்க்கான சிப்ஸ் பாக்கெட்டை சாப்பிட்டு விட்டு குப்பையை வீசினால் சிப்ஸ் பாக்கெட் விலை 10 என்ற மதிப்பில் 10 மடங்காக ரூபாய் 100 அபராதமாக விதிக்கப்பட்டது.
மேலும் அவர்களுக்கு இனி குப்பைகளை ரயில் பெட்டியில் வீசக்கூடாது, ரயில் பெட்டிகளில் உள்ள குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும் என அறிவுறுத்தலும் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை இனி இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது பயணிகளின் கடமையாக இருக்கிறது என்பதால் அதை பயணிகளுக்கு அறிவுறுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம்மை சுற்றியுள்ள இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமையாக இருக்கிறது. பலர் இந்த கடமையை தவறி நமது சுற்றுப்புறங்களை மிக மோசமான நிலையில் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பாடம் புகட்டும்படி ரயில்வே நிர்வாகம் இப்படியான நடவடிக்கை எடுத்தது நிச்சயம் வரவேற்கத்தக்கது. இந்தியா முழுவதும் இந்த நடவடிக்கையை தீவிர படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications









