மாநிலத்திலேயே யார்கிட்டேயும் இந்த கார் இல்லை! வீட்டுக்கே வந்து டெலிவிரி செஞ்சிட்டாங்க
டாக்டர் விஜு ஜேக்கப் (Dr Viju Jacob), கேரளாவின் மிக பெரும் செல்வந்தர்களுள் ஒருவர். கேரள முதலமைச்சர் பிரனாவ் விஜயனில் இருந்து பல அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் வரையில் விஜு ஜேக்கப்பிற்கு நெருக்கமானவர்களாக உள்ளனர். இந்த அளவிற்கு பிரபலமானவராகவும், செல்வந்தராகவும் விளங்கும் விஜூ ஜேக்கப்பிடம் பல விலையுயர்ந்த கார்கள் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால், கேரளாவில் ஃபெராரி ரோமா (Ferrari Roma) காரை வாங்கிய முதல் நபர், டாக்டர் விஜு ஜேக்கப் ஆவார். இந்த நிலையில், இவர் தற்போது கேரளாவிலேயே முதல் ஆளாக ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
சின்தைட் இண்டஸ்ட்ரீஸ் (Synthite Industries), கோதுமை மற்றும் இந்திய மசாலா பொருட்களை விற்பனை செய்வதில் உலகளவில் முன்னணியில் உள்ள நிறுவனமாக விளங்குகிறது. இதனாலேயே 'கேரளாவின் மசாலா அரசன்' என புகழப்படும் விஜு ஜேக்கப் அவர்கள் 1972இல் நிறுவிய சின்தைட் நிறுவனத்திற்கு வெளிநாட்டு ஏற்றுமதிக்கான அங்கீகாரத்தை 1980ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் வழங்கியது.

உணவுக்கு தேவையான மசாலா பொருட்கள் மட்டுமின்றி, வாசனை திரவியங்கள் மற்றும் எண்ணெய்யும் சின்தைட் நிறுவனத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1994இல் முதல் இந்திய தனியார் நிறுவனமாக இங்கிலாந்தின் ஐ.எஸ்.ஓ 9002 சான்றிதழை பெற்ற சின்தைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சார்பில் 2003ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் உடுமலைபேட்டையில் காற்றாலைகள் நிறுவப்பட்டன.
இந்த அளவிற்கு உலக நாடுகள் பலவற்றில் வணிகத்தை மேற்கொண்டுவரும் சின்தைட் நிறுவனத்தை நிறுவியவரான விஜு ஜேக்கப் முனைவர் பட்டத்தை பெற்ற தொழிலதிபராக உள்ளார். ஏற்கனவே கூறியதுபோல், விலையுயர்ந்த கார்களை புதியது, புதியதாக வாங்குவதில் ஆர்வமிக்கவராக விளங்கும் டாக்டர் விஜூ ஜேக்கப் கடந்த ஆண்டு ஏப்ரலில் கேரளாவிலேயே முதல் ஆளாக பிரபல ஸ்போர்ட்ஸ் கார் (Sports Car) நிறுவனமான ஃபெராரியின் ரோமா காரை வாங்கி ஆச்சிரியப்படுத்தினார்.

தொழிலதிபர் விஜு ஜேக்கப்பின் முழுவதும் சில்வர் நிறத்திலான ரோமா கார் சாலையில் கொண்டு செல்லப்ப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று அந்த சமயத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இந்த நிலையில் தற்போது, கேரளாவின் முதல் கஸ்டமராக ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் சீரிஸ்-2 (Cullinan Series-2) காரை டாக்டர் விஜு ஜேக்கப் வாங்கியுள்ளார்.
வெள்ளை நிறத்திலான கல்லீனன் சீரிஸ்-2 காரை விஜு ஜேக்கப் அவர்கள் தனது குடும்பத்துடன் டெலிவிரி பெறும் படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளன. இதுகுறித்து விஜு ஜேக்கப் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடவுளின் சொந்த நாட்டின் சாலைகளை இப்போது 'பரவசத்தின் புத்துணர்ச்சி' அலங்கரிக்கிறது. கேரளாவின் முதல் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் சீரிஸ்-2ஐ அறிமுகப்படுத்துகிறோம்.
இது ஆடம்பரம், துல்லியம் மற்றும் காலத்தால் அழியாத நுட்பத்தின் சிம்பொனி ஆகும். நேர்த்தியின் பயணம் இப்போது துவங்குகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா உள்பட உலகளவில் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்கள் பிரபலமானவைகளாக விளங்குகின்றன. இந்தியாவின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியிடம் மட்டும் 3க்கும் அதிகமான கல்லீனன் கார்கள் உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இத்தகைய கல்லீனன் காரின் சீரிஸ்-2 மாடலை கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. கல்லீனன் சீரிஸ்-2 காரின் 'பிளாக் பேட்ஜ்' (Black Badge) எடிசனும் அறிமுகம் செய்யப்பட்டது. சாதாரணமான கல்லீனன் சீரிஸ்-2 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.5 கோடியாகவும், பிளாக் பேட்ஜ் எடிசனின் விலை ரூ.12.25 கோடியாகவும் தற்சமயம் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேரளாவின் மசாலா அரசன் டாக்டர் விஜு ஜேக்கப் மிக சமீபத்தில், சில தினங்களுக்கு முன்னர்தான் கருப்பு நிறத்திலான மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் (Mercedes-Benz E-Class) காரை வாங்கி இருந்தார். அதனை தொடர்ந்து, அதனை காட்டிலும் விலைமிக்க ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் சீரிஸ்-2 காரை குடும்பத்துடன் தற்போது டெலிவிரி பெற்றுள்ளார். மேலே குறிப்பிடப்பட்டு இருப்பது, கல்லீனன் சீரிஸ்-2 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில கோடி ரூபாய்கள் அதிகமாக வரும்.


Click it and Unblock the Notifications








