விமானியே வந்து சொன்னாலும் இந்த இருக்கைகளில் மட்டும் அமர்ந்து விடாதீர்கள்!! பின்விளைவுகள் அதிகமா இருக்கும்...
விமானத்தில் முதல்முறையாக பறக்க உள்ளீர்கள் எனில் ஏற்கனவே விமான பயணங்களை மேற்கொண்டவர்கள் பல்வேறு விதமான அறிவுரைகளை வழங்குவர். அதில் சிலர் விமானத்தில் பின் இருக்கையை புக் செய்ய வேண்டாம் என கூறுவதை கூட கேட்க முடியும். அது எதற்காக? விமானத்தின் பின் இருக்கைகளில் அமர்வதால் என்னென்ன பிரச்சனைகள் வரும்? என்பதற்கு இந்த விஷயத்தில் நிபுணத்துவம் வாய்ந்தவர் கூறுவதை இனி பார்க்கலாம்.
விமானத்தில் எந்த இருக்கையில் அமர்ந்தால் என்ன? எப்படியாவது விமானத்தில் ஒருமுறையாவது பறந்து பார்த்துவிட வேண்டும் என நினைப்பவராக இருந்தாலும், முதல் பயணத்திலேயே விமானத்தின் பின் வரிசை இருக்கையில் அமர்ந்து அசவுகரியமான பயண அனுபவத்தை பெற வேண்டாம். பின் இருக்கையில் அமர்வதில் உள்ள முக்கிய பிரச்சனை, கழிவறை அருகில் இருக்கும் என்பதாகும்.

மற்ற பயணிகள் அடிக்கடி கழிப்பறைக்கு வந்த வண்ணம் இருப்பார்கள் என்பதால், பின் இருக்கைகளில் அமர்பவர்களுக்கு எப்போதுமே ஒருவிதமான அசவுகரிய உணர்வு இருக்கும். அதுமட்டுமின்றி, விமானம் மட்டுமில்லாமல் எந்தவொரு இடத்திலும் கழிப்பறைக்கு அருகே எவரொருவரும் அமர விரும்ப மாட்டார்கள். இந்த விஷயம் ஏற்கனவே விமானத்தில் பயணித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். விமானத்தின் பின் இருக்கையில் அமர்வதால் சந்திக்க வேண்டிவரும் வேறு சில பிரச்சனைகளை விமானி ஒருவர் கூறியுள்ளார்.
பேட்ரிக் ஸ்மித் என பெயர் கொண்ட அந்த விமானி கூறியதாவது, பொதுவாகவே விமான பணியாளர்கள் விமானத்தின் முன்பகுதியில் இருக்கையை தேர்வு செய்யவே பயணிகளிடம் பரிந்துரைப்பர். ஏனெனில், விமானம் குலுங்கும்போது (டர்போலென்ஸ்) பெரும்பாலும் விமானத்தின் பின் வால்பகுதியே அதிகம் குலுங்கும். அதாவது, விமானத்தின் இறக்கைகளுக்கு பின்பகுதிதான் அதிக அதிர்வுகளை சந்திக்கும்.

"டிக்கெட்டிற்கு செலவிடும் காசை மிச்சப்படுத்த விரும்பினால், விமானத்தின் மத்தியில் இருக்கையை தேர்வு செய்ய முயலுங்கள்" என கூறும் விமானி பேட்ரிக் ஸ்மித், பல மணிநேரங்களுக்கு விமானத்தில் பயணம் செய்யவுள்ளீர்கள் எனில் காசை பார்க்காமல் விமானத்தின் முன் இருக்கை வரிசையில் டிக்கெட்டை புக் செய்யுங்கள் என பரிந்துரை செய்கிறார்.
எல்லா விமானங்களும் வெவ்வேறு விதமாக வடிவமைக்கப்படுகின்றன. இதனால், ஒரே எண்ணை கொண்ட இருக்கை விமானத்தை பொறுத்து வேறுப்படும். உதாரணத்திற்கு, உள்நாட்டு விமானம் ஒன்றில் 14சி என்ற எண்ணை கொண்ட இருக்கை மத்திய வரிசையில் அமைந்துள்ளது என்றால், அதே எண்ணை கொண்ட இருக்கை நீண்ட தொலைவு இயங்கும் சர்வதேச விமானத்தில் பின் வரிசையில் அமைந்திருக்கலாம்.

இதனால் டிக்கெட்டை புக் செய்வதற்கு முன்பு விமானத்தை பற்றியும், அதன் கட்டமைப்பு & இருக்கை அமைப்பை பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. அல்லது நீங்கள் பயணம் செய்ய விரும்பும் விமானத்தில் ஏற்கனவே பயணித்தவர்கள் யாராவது தங்களது விமர்சனத்தை இணையத்தில் வழங்கியிருந்தால், அதனை ஒருமுறை பார்க்கவும். அல்லது சீட்குரு.காம் போன்ற இணையத்தள பக்கங்களை ஆராயலாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: விமானத்தில் முதல் இருக்கை வரிசையில் அமர்வதும் பிரச்சனைதான், அதேபோல் பின் இருக்கைகளில் அமர்வதும் பிரச்சனைதான். ஆனால் இவையாவும் எப்போதும் சவுகரியத்தை தேடுப்பவர்களுக்கே. எல்லா நேரங்களிலும் நேர்மறையான எண்ணங்களை கொண்டவர்களுக்கு எங்கு அமர்ந்தாலும் பிரச்சனையில்லை. அதுமட்டுமின்றி, அவ்வப்போது கழிப்பறைக்கு செல்லும் பழக்கம் உள்ளவர்களுக்கு விமானத்தில் பின் இருக்கைகளே ஏற்றவை என்பது எங்களது கருத்து.


Click it and Unblock the Notifications









