பிரதமரும் இதைதான் எதிர்பார்த்தாரு!! இலட்ச ரூபாய் செலவழிச்சாலும் இலட்சத்தீவுக்கு செல்வது கஷ்டம் - ஏன் தெரியுமா?
இந்தியாவில் இருந்து லட்சத்தீவு (Lakshadweep)-க்கு செல்வதற்கான விமான டிக்கெட்கள் மார்ச் மாதம் வரையில் விற்று தீர்ந்துவிட்டதாக ஓர் அதிர்ச்சிக்கர தகவல் வெளியாகியுள்ளது. எவ்வாறு இது சாத்தியமானது என்பதையும், இலட்சத்தீவுக்கு செல்ல திடீரென நம் மக்களிடையே எவ்வாறு இப்படியொரு ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
பெரிய அளவில் இயற்கை வளங்களை கொண்டில்லாத தீவுகளுக்கு சுற்றுலா துறை தான் முதன்மையான வருவாய் ஆகும். சுற்றுலா பயணிகள் மூலம் ஈட்டிய வருவாயில் லக்சரி தரத்திலான சுற்றுலாவை வழங்கக்கூடிய தீவாக மாலத்தீவு விளங்குகிறது. பல்வேறு சிறு, சிறு தீவுகளை கொண்ட மாலத்தீவு தனி அரசாங்கத்தின் கீழ் செயல்படுகிறது.

மாலத்தீவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளனர். ஆனால், மாலத்தீவில் இருந்து வடக்கே 754 கிமீ தொலைவில் உள்ள இலட்சத்தீவை சுற்றுலா பயணிகள் பெரியதாக கண்டுக் கொள்வதில்லை. இதனை உணர்ந்த நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இலட்சத்தீவுக்கு சென்றிருந்தார். அதுதொடர்பான படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி, வைரலாகின.
நம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இந்த அளவிற்கு அழகான தீவுகள் உள்ளனவா என பலரும் மோடியின் பயணத்திற்கு பின் இலட்சத்தீவை பற்றி ஆராய ஆரம்பித்தனர். கூகுளில் நிறைய பேர் இலட்சத்தீவை பற்றி தேடுவதாக சமீபத்தில் கூட செய்திகள் வெளியானதை உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

இந்த நிலையில் தற்போது, இலட்சத்தீவு செல்வதற்கான விமான டிக்கெட்கள் அனைத்தும் மார்ச் மாதம் வரையில் விற்று தீர்ந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அத்துடன், சுற்றுலா நிறுவனங்களும் இலட்சத்தீவுக்கு செல்வதற்கான சுற்றுலா திட்டங்களை நிறைவு செய்து, இதன்பின் மார்ச் மாதம் வரையில் சுற்றுலா திட்டங்களை வகுக்க முடியாத நிலைமையில் உள்ளன.
மொத்தம் 35 தீவுகளை உள்ளடக்கியது இலட்சத்தீவு ஆகும். கேரள கடற்கரைக்கு அருகே அரபிக்கடலில் அமைந்துள்ள இலட்சத்தீவுகளில் அகாட்டி என்ற ஒரேயொரு தீவில் மட்டுமே விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அல்லியன்ஸ் ஏர் என்ற ஏர்லைன் நிறுவனம் மட்டுமே தனது விமானத்தை இயக்கி வருகிறது.

அல்லியன்ஸ் ஏர் நிறுவனத்தின் ஏடிஆர்-72 விமானம் கேரளா மாநிலத்தின் கொச்சியில் இருந்து தினந்தோறும் இயக்கப்படுகிறது. அதாவது, இலட்சத்தீவுக்கு விமானம் வழியாக செல்ல வேண்டுமென்றால், கொச்சியில் இருந்து மட்டுமே செல்ல முடியும். இந்த விமான பயணம் ஏறக்குறைய 1 மணிநேரம் 30 நிமிடங்களாக உள்ளது. இந்த பயணத்திற்கு அல்லியன்ஸ் ஏர் பயன்படுத்தும் ஏடிஆர்-72 விமானம் ஆனது வெறும் 72 இருக்கைகளை மட்டுமே கொண்டதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்னும் 2 மாத காலத்திற்கு இலட்சத்தீவுக்கு விமானம் வாயிலாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றால் இலட்சத்தீவுக்கு செல்ல எத்தனை பேர் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை அறியலாம். புதியதாக இலட்சத்தீவுக்கு செல்பவர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே இந்த தீவுகளுக்கு சென்றவர்களும் மீண்டும் செல்ல விரும்புவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது பிரதமரின் இலட்சத்தீவு பயணம் ஆகும். இதன் மூலமாக வரும் காலங்களில் இலட்சத்தீவு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணும் என்பது உறுதி.



Click it and Unblock the Notifications









