17 லட்ச ரூபாய் பைக்கில் உணவு டெலிவரி செய்ய சென்ற இளைஞர், ஊரே இவரை தான் திரும்பி பாக்குது!
17 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுஸூகி ஹயபுஸா பைக்கில் இளைஞர் ஒருவர் உணவு டெலிவரி செய்ய சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இவர் உண்மையிலேயே உணவு டெலிவரி செய்ய தான் சென்றாரா அல்லது வீடியோவிற்காக இப்படி செய்தாரா என்ற விரிவான விபரங்களை உள்ளே காணலாம் வாருங்கள்.
இன்று சமூக வலைதளங்கள் என்பது இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மனிதனின் அங்கமாக மாறிவிட்டது. சமூக வலைதளங்களில் இல்லாத நபர்களே இல்லை என சொல்லிவிடலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சமூக வலைதளங்களை பயன்படுத்த துவங்கி விட்டனர். மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என பல நபர்கள் சமூக வலைதளங்களில் ஏதாவது வித்தியாசமான வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

இப்படி வித்தியாசமான வீடியோக்களை எடுத்து வெளியிட்டே பலர் பிரபலம் ஆகி விட்டனர். தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் பல்வேறு நபர்கள் பிரபலமாக இருக்கின்றனர். இப்படியாக தான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக நெட்டிசன் ஒருவர் தற்போது வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோ எச்எஸ்பி அஃபிஸியல் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான சுஸூகி ஹயபுஸா பைக்கில் ஸோமாட்டோ நிறுவனத்தின் டி-சர்ட் அணிந்த நபர் ஒருவர் அமர்ந்து ஓட்டி வருகிறார். அவருக்கு பின்னால் அவர் உணவு டெலிவரி செய்யும் பை இருக்கிறது. இவ்வளவு காஸ்ட்லியான பைக்கை உணவு டெலிவரி செய்யும் ஒருவர் ஓட்டி வருவதை பார்க்கும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த வீடியோ உள்ளது.

இந்த வீடியோ குறித்து நாம் இன்னும் தேடிப் பார்த்தபோது இந்த வீடியோவில் உள்ள இந்த சுஸூகி ஹயபுஸா பைக் இந்த வீடியோ வெளியான இஸ்டாகிராம் சேனலை நடத்தி வரும் ஹார்ட் ப்ரீத் சிங் என்பவருக்கு சொந்தமான பைக் என தெரிய வந்துள்ளது.
பைக்கை ஓட்டி வருபவர் யார் என்று விவரம் தெரியவில்லை. இவர் ரசிகர் யாராவது இவர் பைக்கை ஓட்டி பார்க்க விருப்பப்பட்டு அவர் பைக்கை கொடுத்தாரா என்ற விபரமும் தெரியவில்லை. ஆனால் இந்த பைக்கை ஒட்டி வரும் நபர் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி வருகிறார்.

சுஸூகி ஹயபுஸா பைக் ஒரு சூப்பர் பைக் ஆகும். தமிழகத்தில் ஏற்கனவே யூடியூப் டிடிஎஃப் வாசன் இந்த பைக்கை தான் பயன்படுத்தி வந்தார். இந்த பைக்கில் தான் அவர் விபத்திலும் சிக்கினார். இந்த பைக் இன்ஜினை பொருத்தவரை 1340 சிசி இன்ஜின் கொண்டது. இது 190 பிஎஸ் பவரையும் 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த பைக் லிட்டருக்கு 17 கிலோமீட்டர் மைலேஜ் தரும் பைக்காக இருக்கிறது.
இந்த பைக் ஒரே ஒரு வேரியண்டில் தான் விற்பனையாகிறது. அதில் மூன்று கலர் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த பைக் விலையை பொருத்தவரை இந்திய மதிப்பில் ரூபாய் 16.90 லட்சம் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த பைக்கின் முன்பக்கம் இரண்டு டிஸ்க் மற்றும் பின்பக்கம் ஒரு டிஸ்க் கொண்ட பிரேக்கிங் சிஸ்டம் இருக்கிறது. வீடியோவில் உள்ள இந்த ஹயபுஸா பைக் பியர்ல் பிரில்லியன்ட் ஒயிட் என்ற நிறத்தை கொண்டதாக இருக்கிறது.

இந்த பைக்கில் பல முக்கிய அம்சங்கள் இருக்கிறது. முக்கியமாக எல்இடி லைட் புதிய டிஎஃப்டி இன்ஸ்ட்ருமென்ட் கண்ட்ரோல் அம்சங்கள் இருக்கிறது. இந்த பைக்கின் பாதுகாப்பிற்காக டிராக்சன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், இன்ஜின் பிரேக் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், டிரைவ் மோடு உள்ளிட் அம்சங்கள் இருக்கிறது. மொத்தத்தில் இந்த பைக்கில் பல்வேறு விதமான கஷ்டமைஸபில் ரைடிங் ஆப்ஷன்கள் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலர் இப்படி சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக வித்தியாசமான முயற்சிகளை செய்து பிரபலமாகி வருகின்றனர். ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள வீடியோவில் பிரபலம் ஆவதற்காக இவர் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியுள்ளார். இது முற்றிலும் தவறான விஷயமாகும். நீங்களும் இப்படி பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஏதாவது முட்டாள்தனமாக செய்யாதீர்கள்.


Click it and Unblock the Notifications









