பஸ் டிரைவரின் அவசரத்தால் பயங்கர விபத்து! கல்லு மாதிரி நின்னு பயணிகளை காப்பாற்றிய கார்! அந்த நிறுவனத்தோடதா!
இந்திய சாலைகளில் தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் (Road Accidents) பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதுதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. குறிப்பாக சிக்னல்களில் சிகப்பு விளக்குகளை மீறி செல்வதால் ஏராளமான விபத்துக்கள் நடைபெறுகின்றன.
இந்த வரிசையில் பஸ் டிரைவர் ஒருவர், சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தபோது, அதை பொருட்படுத்தாமல் முன்னேறி சென்றதால், பயங்கரமான சாலை விபத்து ஒன்று தற்போது நடைபெற்றுள்ளது. இந்த சாலை விபத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. பஸ் ஒன்றும், ஃபோர்டு எண்டேவர் (Ford Endeavour) கார் ஒன்றும் இந்த விபத்தில் மோதி கொண்டுள்ளன. பஸ் டிரைவர் சிக்னலை மதிக்காமல் வந்த காரணத்தால்தான் இந்த விபத்து நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் நல்ல வேளையாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை. அதேபோல் பெரிய அளவிலான காயங்களும் ஏற்படவில்லை. ஆனால் பஸ் டிரைவர் உள்பட 10 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய ஃபோர்டு எண்டேவர் கார், ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும்.

ஆனால் இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை. ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையை விட்டு வெளியேறிய காரணத்தால், எண்டேவர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. இந்திய சந்தையில் விற்பனையில் இருந்தபோது, டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster) ஆகிய கார்களுடன், ஃபோர்டு எண்டேவர் போட்டியிட்டு வந்தது.
இது மிகவும் வலுவான எஸ்யூவி கார்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விபத்தில் காருக்கு உள்ளே இருந்தவர்கள், பெரிய அளவிலான காயங்கள் இன்றி தப்பித்ததற்கு இதுவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. சரியான நேரத்தில் ஏர்பேக்குகள் விரிவடைந்து, பயணிகளை காப்பாற்றியுள்ளன. கடந்த காலங்களிலும் ஃபோர்டு எண்டேவர் கார், சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை பலமுறை காப்பாற்றியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த விபத்திற்கு 2 முக்கியமான காரணங்கள் உள்ளன. இரண்டு வாகனங்களுமே அதிவேகத்தில் வந்தது ஒரு காரணம். மற்றொன்று பஸ் டிரைவர் சிக்னலை மதிக்காமல் மீறி சென்றது. இந்தியாவில் டிராபிக் சிக்னல்களில் இது வாடிக்கையாக நடைபெற கூடிய ஒரு நிகழ்வுதான்.
சிகப்பு விளக்கு எரிய போகிறது என்றால், வாகன ஓட்டிகள் மின்னல் வேகத்தில் பறக்கின்றனர். சிகப்பு விளக்கு எரிய தொடங்கி விட்டாலும் கூட அவர்கள் வாகனத்தை நிறுத்துவதில்லை. இது பயங்கரமான விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. நீங்கள் சாலை விபத்துக்களில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், சிக்னல்களை மதியுங்கள். மிதமான வேகத்தில் பயணம் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








