ஃபார்முலா - 1 கார் பந்தயங்கள் பற்றி தெரிந்திராத சுவாரஸ்யங்கள்
பரபரப்புக்கு பஞ்சமில்லாத உலகின் பணக்கார விளையாட்டுப் போட்டியாக கருதப்படும் ஃபார்முலா - 1 கார் பந்தயங்கள் உலக அளவில் பெரிய அளவிலான ரசிக வட்டத்தை பெற்றுள்ளது. கடந்த 2011ல்தான் இந்தியாவில் இந்த விளையாட்டு முதன்முதலாக நடந்தது.
அதையொட்டி, இந்தியாவிலும் கார் பந்தயங்களுக்கான மவுசு வெகுவாக கூடிவிட்டது. ஃபார்முலா - 1 போட்டிகள் தவிர ஏராளமான போட்டிகள் டெல்லியிலுள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், ஃபார்முலா- 1 போட்டிகள் மீதுதான் அதிக ஈர்ப்பு இருந்து வருகிறது. அந்த போட்டிகள் குறித்த பின்னணித் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஒரு சீசனுக்கு...
ஃபார்முலா- 1 கார்களின் வடிவமைப்பு, எஞ்சின் உள்ளிட்டவை பிரத்யேக அம்சங்களை கொண்டது. சாதாரண கார்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. அதுபற்றியும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

ஸ்டீயரிங்
சாதாரண கார்களுக்கும், ஃபார்முலா- 1 கார்களுக்கான ஸ்டீயரிங் முற்றிலும் வேறுபட்டது. பல்வேறு கட்டுப்பாட்டு வசதிகளுடன் வீடியோ கேம் கன்சோல் போன்றே இருக்கும். ஸ்டீயரிங் வீலில் ஸ்பீடோமீட்டர், எல்லைக் கோட்டை கடப்பதற்கான தூரம் ஆகிய அனைத்து தகவல்களையும் பெறலாம்.

காக்பிட்
டிரைவர் காக்பிட் மிகவும் நெரிசலான அமைப்பை கொண்டது. ஏரோடைனமிக் வடிவமைப்புக்கும், பாதுகாப்பும் கருதி இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்பாட்டு அறையிலிருந்து கொடுக்கப்படும் தகவல்களுக்கு தக்கவாறுதான் காரை நிறுத்த முடியும். டிராக்கில் காரை எந்தவொரு காரணத்துக்காகவும் நிறுத்தக்கூடாது. டிராக்கின் தன்மை உள்ளிட்டவை குறித்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து காரில் பொருத்தப்பட்டிருக்கும் டிரான்ஸ்மீட்டர் வழியாக டிரைவருக்கு உடனுக்குடன் தகவல்கள் கொடுத்த வண்ணம் இருப்பார்கள்.

டபுள் ஆக்சிலேட்டர்
ஃபார்முலா- 1 கார்களில் 2 ஆக்சிலேட்டர்கள் பெடல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இரண்டையும் அழுத்த வேண்டும்.

அதிகபட்ச வேகம்
ஃபார்முலா- 1 கார்கள் அதிகபட்சம் மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. 0-100 கிமீ வேகத்தை வெறும் 1.7 வினாடிகளிலும், 100-200 வேகத்தை 3.8 வினாடிகளிலும் எட்டும் அசாத்திய வல்லமை பெற்றது. 9 வினாடிகளுக்குள் 300 கிமீ வேகத்தை தாண்டி செல்லும்.

எரிபொருள் செலவு
பந்தயம் மற்றும் பயிற்சியின்போது ஒரு அணி சராசரியாக 2,00,000 லிட்டர் எரிபொருளை ஒரு சீசனில் பயன்படுத்துகிறது. இதன் மதிப்பு ரூ.1.52 கோடியாகும்.

எஞ்சின் திறன்
ஒரு நிமிடத்திற்கு அதிகபட்சம் 18,000 முறை சுழலும்(ஆர்பிஎம்) திறன் படைத்த பார்முலா-1 கார் எஞ்சின்கள் ஒரு நொடிக்கு 450 லிட்டர் காற்றை உட்கொள்கின்றன. மேலும், 100 கிமீ செல்வதற்கு 75 லிட்டர் எரிபொருளை உறிஞ்சித் தள்ளுகின்றன.

எஞ்சின்களுக்கு கட்டுப்பாடு
பார்முலா-1 பந்தயங்களின் விதிமுறைகளின்படி, ஒரு சீசனுக்கு 8 எஞ்சின்களை மட்டுமே ஒரு அணி பயன்படுத்த முடியும். இந்த எண்ணிக்கையை தாண்டினால் அந்த அணியின் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்படும். இதேபோன்று, காருக்கு ஒரு கியர் பாக்ஸை 4 போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள அணிகளுக்கு அனுமதியுண்டு.

எரிபொருள் கலவை
இதற்கு முன்னர் கூடுதல் பிக்கப் வேண்டும் என்பதற்காக பார்முலா-1 கார்களுக்கான எரிபொருளில் பவர் பூஸ்டர்கள், பென்ஸீன், ஆல்கஹால் மற்றும் விமான பெட்ரோல் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது அதிக சக்திவாய்ந்த பவர் பூஸ்டர்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், தட்பவெப்பம், ரேஸ் டிராக்கின் தன்மை ஆகியவற்றை பொறுத்து 50 விதமான கலவைகள் கொண்ட எரிபொருள்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.

கரையும் டயர்கள்
சாதாரணமாக, கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் டயர்கள் 16,000 கிமீ வரையிலோ அல்லது அதற்கு மேலும் செல்லும் வகையில் இருக்கும். ஆனால், பார்முலா-1 கார்களில் பொருத்தப்படும் டயர்கள் வெறும் 200 கிமீ வரை செல்லும். பின்னர் புதிய டயர் மாற்ற வேண்டும்.

தாகமெடுத்தால்
ஃபார்முலா- 1 கார்களிலிருந்து வெளிப்படும் வெப்பம் காரணமாக டிரைவருக்கு தாகமெடுப்பது இயற்கை. இதற்காக, காரை நிறுத்த முடியாது. எனவே, விருப்பமான குளிர்பானம் அல்லது தண்ணீர் ஒரு பாட்டிலில் நிரப்பப்பட்டு, அதிலிருந்து ஒரு குழாய் மூலம் டிரைவர் அருந்துவதற்கு வசதியாக வாயருகே பொருத்தப்பட்டிருக்கும். வேண்டும்போது ஒரு பட்டனை தட்டினால், தண்ணீர் குழாய் வழியாக வாய்க்குள் வந்துவிடும்.

சீசனுக்கான பயணம்
ஒரு சீசன் என்று கூறப்படும் ஓர் ஆண்டில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் பந்தயங்களுக்காக ஒரு அணியினர் 1.60 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

புள்ளிகள் கணக்கீடு
ஒவ்வொரு போட்டியிலும் முதலாவது இடத்தை பிடிக்கும் டிரைவருக்கு 25 புள்ளிகளும், 2ம் இடத்தை பிடிக்கும் டிரைவருக்கு 18 புள்ளிகளும், 3ம் இடத்தை பிடிக்கும் டிரைவருக்கு 15 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. 10ம் இடத்தை பிடிக்கும் டிரைவருக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.

புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்
இந்தியாவில் ஃபார்முலா-1 பந்தயங்கள் நுழைவதற்கு முக்கியமான பங்கு புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் எனப்படும் கார் பந்தய களம்தான். ஜேபி ஸ்போர்ட் இன்டர்நேஷனல் நிறுவனம்தான் இதனை அமைத்தது. ரூ.2,000 கோடி முதலீட்டில் 875 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. பந்தய களம் 14 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சுற்று 5.14 கிமீ நீளம் கொண்டது.

பெரும் நிர்வாகம்
புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் மொத்தம் 5,000 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதில், 300 பேர் நாட்டின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பயின்ற திறமைவாய்ந்த எஞ்சினியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நரேன் கார்த்திகேயன்
தமிழகத்தை சேர்ந்த நரேன் கார்த்திகேயன்தான் இந்தியாவின் முதல் ஃபார்முலா-1 பந்தய வீரர் என்ற பெருமைக்குரியவர். இவரது தந்தை கார்த்திகேயனும் கார் பந்தய வீரர் என்பதும், அந்த உந்துதலில்தான் கார் பந்தய உலகில் பக்கம் ஈர்க்கப்பட்டார். 2005ம் ஆண்டு முதன்முறையாக ஃபார்முலா 1 பந்தயங்களில் களமிறங்கினார்.

சஹாரா ஃபோர்ஸ்
இந்தியா சார்பில் ஃபார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்கும் அணிதான் ஃபோர்ஸ் இந்தியா. இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அணி பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு சொந்தமானது. கடந்த 2011ல் இந்த அணியின் 42 சதவீத பங்குகளை சஹாரா நிறுவனம் வாங்கியது. இதையடுத்து, சஹாரா ஃபோர்ஸ் இந்தியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications








