மொத்த ஊரும் பார்க்க, வரிசைக்கட்டி சென்ற லாரிகள் ஒருத்தருக்கு மட்டுமே சொந்தமா! ஃபார்சூனர் காரில் சென்றவர் யார்?
இந்தியாவில் வாகன ஊர்வலங்களுக்கு எப்போதுமே குறை இருந்ததே கிடையாது. திருவிழா, பேரணி என்று எதற்கெடுத்தாலும் வாகனங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால், இங்கு ஒருவர் தான் வாங்கிய புத்தம் புதிய லாரிகளை ஒன்றாக சாலையில் கொண்டு சென்று மாஸ் காட்டியுள்ளார்.
இவரது பெயர், ஆனந்த் சிங் (Anant Singh) ஆகும். உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள தொழிலதிபர்களுள் ஒருவர். மற்ற தொழிலதிபர்களை போன்று ஆட்டோமொபைல் வாகனங்களில் ஆர்வம் கொண்டவராக ஆனந்த் சிங் இருப்பது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தாலே தெரிகிறது. இளம் வயதிலேயே தொழிலதிபராக மாறிய ஆனந்த் சிங் தற்போது அதிக எண்ணிக்கையிலான லாரிகளை வாங்கியுள்ளார்.

அவை அனைத்தையும் வரிசையாக சாலையில் ஆனந்த் சிங் கொண்டு செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் இந்த வீடியோவில், புதியதாக வாங்கப்பட்ட லாரிகள் அனைத்தும் பின்னால் வரிசையாக வந்துக் கொண்டிருக்க, தொழிலதிபர் ஆனந்த் சிங் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரில் அவற்றிற்கு முன்னால் செல்வதை காண முடிகிறது.
இது பார்க்க, திரைப்பட காட்சி போன்று உள்ளது. லாரிகளை டெலிவிரி பெற்று கொண்டு செல்வது மட்டுமில்லாமல், இந்த லாரிகள் வாங்குவது தொடர்பாக ஆனந்த் சிங்கின் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் ஏகப்பட்ட வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளன. லாரிகளை புக் செய்வதற்கு முன்னர் அவற்றை ஆனந்த் சிங் பார்ப்பதில் இருந்து, அவற்றை டெலிவிரி பெறுவது வரையில் ஏகப்பட்ட பதிவுகள் இந்த தொழிலதிபரின் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளன.

ஆனந்த் சிங் மொத்தம் எத்தனை லாரிகளை வாங்கியுள்ளார் என்பது குறித்த தெளிவான விபரம் இல்லை. 10இல் இருந்து 12 லாரிகளை இவர் வாங்கி இருக்கலாம். அதேபோல், இத்தனை லாரிகளை எதற்காக ஆனந்த் சிங் வாங்கியுள்ளார்? அவருக்காக வாங்கியுள்ளாரா அல்லது வேறு யாராகவும் வாங்கியுள்ளாரா? என்கிற தகவலும் கிடைக்கப் பெறவில்லை.
தொழிலதிபர் ஆனந்த் சிங் வாங்கி இருப்பது டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் சிக்னா 5530 (Signa 5530) லாரிகளை ஆகும். இதில் பின்பக்க சரக்கு ஏற்றி செல்லும் பகுதியை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். கரடு, முரடான சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ற லாரியாக டாடா சிக்னா 5530 விளங்குகிறது.
இந்த டாடா லாரியில் பொருத்தப்படுகின்ற 6.7 லிட்டர் கம்மின்ஸ் என்ஜின் அதிகப்பட்சமாக 304 பிஎஸ் மற்றும் 1100 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த லாரியில் 2 எரிபொருள் டேங்குகள் வழங்கப்படுகின்றன. இதில் ஒன்று, 365 லிட்டர்கள் கொள்ளளவிலும், மற்றொன்று 192 லிட்டர்கள் கொள்ளளவு உடன் அவசர காலத்தில் உபயோகிக்க கூடியதாகவும் உள்ளன.
இன்றைய கால லாரிகளை செயல்திறன்மிக்கதாக வடிவமைப்பதுடன், சொகுசான பயணத்தை வழங்கக் கூடியவைகளாகவும் வடிவமைக்கின்றனர். அந்த வகையில், டாடா சிக்னா 5530 லாரியில் 3 வழிகளில் அட்ஜெஸ் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, அதிவேகத்தில் சார்ஜ் செய்யக்கூடிய யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட்கள், ஸ்லீப்பர் பெர்த், டிரைவர் & க்ளீனர் என இருவருக்கும் சன் விஸர்ஸ், எல்லாவற்றையும் விட முக்கியமாக கேபின் முழுக்க ஏசி வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இவை மட்டுமில்லாமல், எமர்ஜென்சி லாக்கிங் ரீடிராக்டர் சீட் பெல்ட்கள், சாய்க்கக்கூடிய தாழ்வான ஸ்டேரிங் சக்கரம் மற்றும் டிரைவர் மானிடரிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் சிக்னா 5530 லாரியில் வழங்கும் டாடா நிறுவனம், தனது லாரிகளில் க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) வசதியையும் வழங்குகிறது. இத்தனை வசதிகள் இருந்தாலும், இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான லாரிகளை ஒரே நேரத்தில் கொண்டு சென்றால், வேகமாகவும் செல்ல முடியாது; அதேபோல் உடனடியாக எல்லா லாரிகளையும் சட்டெர்ன நிறுத்தவும் முடியாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நெடுஞ்சாலைகளில் பைக் மற்றும் கார் பேரணிகளை பார்த்திருக்கிறோம். ஆனால், லாரிகளின் பேரணி கேட்பதற்கும் சரி, பார்ப்பதற்கும் சரி சற்று வித்தியாசமாக உள்ளது. ஆனால், இவ்வாறான பயணங்களில் மிகுந்த கவனம் வேண்டும். நன்கு அனுபவமிக்க டிரைவர்களால் மட்டுமே எந்தவொரு அசம்பாவிதமும் இல்லாமல் இவ்வாறு லாரி பேரணியை நடத்த முடியும். ஆனந்த் சிங் நடத்திய இந்த நிகழ்வில் பங்கேற்க லாரி டிரைவர்கள் எந்த அளவிற்கு திறன்மிக்கவர்கள் என்பது கேள்விக்குறியே.


Click it and Unblock the Notifications








