ஃபாக்ஸ்கான் தலைவருக்காக கொஞ்சம் நேரம் டிரைவராக மாறிய தமிழக அமைச்சர்.. அவரு ஓட்டி சென்ற காருதான் இங்க ஹைலைட்டே!
ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் அதன் பெண் ஊழியர்களுக்காக மிகவும் பிரமாண்டமான தங்கும் விடுதியை கட்டியிருக்கின்றது. காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம்-வடகால் கிராமத்திலேயே இந்த தங்கும் விடுதி கட்டப்பட்டு இருக்கின்றது. தலா பத்து தளம் கொண்ட 13 பிளாக்குகள் கட்டப்பட்டு இருக்கின்றன. இந்த விடுதியில் சுமார் 18 ஆயிரத்து 720 பெண் தொழிலாளிகள் தங்க முடியும். நவீன வசதிகளுடன் இந்த விடுதி தயார் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. சுமார் 706 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு இருக்கும் இந்த தங்கும் விடுதியை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் நிறுவனம் மற்றும் தமிழகம் சார்பில் பலர் கலந்துக் கொண்டனர். நிறுவனத்தின் தலைவர் யங் லியு-ம் திறப்பு விழாவில் முன்னிலை வகித்தார். இதற்காக இந்தியா வந்திருந்த யங் லியு-வை சென்னை ஏர்போர்ட்டில் பிக்-அப் செய்து தன்னுடைய காரில் நிகழ்விடத்திற்கு அழைந்து வந்தார் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா.

இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, அமைச்சர் டிஆர்பி ராஜா, ஃபாக்ஸ்கான் தலைவரை அழைத்துச் செல்ல பயன்படுத்திய காரை பற்றிய சந்தேகமே பலருக்கு எழும்பி இருக்கின்றது. அது என்ன கார்? அதன் சிறப்புகள் என்ன? மற்றும் விலை விபரம் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
வீடியோ மற்றும் படங்களின் அடிப்படையில் வைத்து பார்க்கையில் டிஆர்பி ராஜா பயன்படுத்தி இருப்பது லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) கார் மாடல் என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், 2021 ஆம் ஆண்டு மாடல் என்பதும் தெரிய வந்துள்ளது.
அன்றைய நாள் நிலவரப்படி இந்த கார் மாடல் ரூ. 88.24 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே விற்கப்பட்டது. மேலும், இதன் அதிகபட்ச விலையே ரூ. 1.72 கோடி மட்டுமே ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். சுமார் 7 வேரியண்டுகளிலேயே அப்போது இந்த கார் விற்கப்பட்டது.
எஸ் (S), எஸ்இ (SE), எச்எஸ்இ (HSE), எச்எஸ்இ டைனமிக் (HSE Dynamic), ஆட்டோபயோகிராஃபி டைனமிக் (Autobiography Dynamic), எச்எஸ்இ சில்வர் (HSE Silver) மற்றும் எச்எஸ்இ டைனமிக் பிளாக் வேரியண்ட் (HSE Dynamic Black variants) ஆகியவையே அவை ஆகும்.
இத்துடன், இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்பட்டன. 296 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 296 பிஎச்பி மற்றும் 650 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட 3.0 லிட்டர், 6 சிலிண்டர் டீசல்-மைல்டு ஹைபிரிட் ஆகியவையே அவை ஆகும்.
இவற்றில் எந்த தேர்வை டிஆர்பி ராஜா பயன்படுத்து வருகின்றார் என்பது தெரியவில்லை. இருப்பினும், இந்த வேரியண்டுகள் அனைத்தும் சொகுசான டிராவல் அனுபவத்தை வழங்குவதில் திறன் வாய்ந்தவை ஆகும். குறிப்பாக, பள்ளம்-மேடுகள் நிறைந்த சாலைக்கு ஏற்றவையாக லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் கார் மாடல் இருக்கின்றது.
இதனால்தான் பல ஆண்டுகளைக் கடந்து இப்போதும் இந்த கார் மாடல் விற்பனையில் இருக்கின்றது. இன்றைய தேதி நிலவரப்படி புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் மாடல் ரூ. 1.40 கோடி என்கிற விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
சொகுசு மற்றும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஓர் கவர்ச்சியான எஸ்யூவி ரக கார் மாடலே இதுவாகும். இந்த காரில் 5பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். ஹீட் மற்றும் வெண்டிலேட் வசதிக் கொண்ட லெதர் இருக்கைகள், சாஃப்டாக மூடும் திறன் கொண்ட டோர்கள், மெரிடியின் 3டி சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், கேபினுள் இருக்கும் காற்றின் தரத்தை அளவீடு செய்யும் சென்சார் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, 28.96 செமீ அளவுள்ள திரை பின்னிருக்கையாளர்களுக்காக வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, டிரைவருக்கு உதவும் விதமாக 3டி சரவுண்ட் கேமிரா, ஸ்டியரிங் அசிஸ்ட் வசதிக் கொண்ட அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், பார்க் அசிஸ்ட் போன்ற அம்சங்களும் புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் இந்த கார் மிக சிறந்த வாகனமாகவே காட்சியளிக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போது விற்பனையில் இருப்பதைக் காட்டிலும் டிஆர்பி ராஜா பயன்படுத்தி வரும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் மாடல் குறைவான சிறப்பம்சங்களையே தாங்கி இருக்கும். ஆனால், பயன்பாட்டின்போது சொகுசான டிராவல் அனுபவத்தை வழங்குவதில் அது கொஞ்சம்கூட பின் தங்கியிருக்காது. இதன் காரணத்தினாலேயே ஃபாக்ஸ்கான் தலைவரை அழைத்து வர இந்த காரை அவர் பயன்படுத்தியிருப்பார் என யூகிக்க முடிகின்றது.


Click it and Unblock the Notifications








