சூப்பர்... தடுப்பூசி செலுத்தி கொண்டால் இவ்வளவு இலவசம், சிறப்பு சலுகைகளா? உடனே கௌம்பீர வேண்டியதுதான்...
தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு இலவசம், சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. எனினும் மூன்றாவது அலை இந்தியாவை வெகு விரைவாக தாக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

ஆனால் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. எனவே தடுப்பூசி செலுத்துவதை ஊக்கும் விதமாக ஜார்கண்ட் மாநிலத்தில அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சாய்பாஷா ரோட்டரி கிளப்பும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து சிறப்பு தடுப்பூசி முகாமை நடத்துகின்றன.

சிங்பம் டிரேடிங் கம்பெனி பெட்ரோல் பங்க்கில், ஜூன் 21ம் தேதி இந்த சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதுமட்டுமல்லாது தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு கூப்பன் ஒன்றும் கொடுக்கப்படும்.

இந்த கூப்பனை சாய்பாஷா வர்த்தக கூட்டமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த கூப்பனை கொண்டு சென்றால், குறிப்பிட்ட கடைகளில் எந்தவொரு பொருளை வாங்கினாலும் 5 சதவீத தள்ளுபடி கிடைக்கும். எனவே தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு பொதுமக்கள் பலர் ஆர்வமாக முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய பரிசு மற்றும் தள்ளுபடி கூப்பன்கள் போன்றவற்றை வழங்கி, தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்களை ஊக்குவிக்கும் வழக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்றதொரு அறிவிப்பு புதுச்சேரி வில்லியனூரிலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கும் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். நாட்டின் ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் விலையுடன், டீசல் விலையும் 100 ரூபாயை கடந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இது வாகன ஓட்டிகளுக்கு நிச்சயமாக பலன் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இத்தகைய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

குறிப்பாக ரஷ்யாவின் மாஸ்கோவில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் 5 கார்கள் வீதம், மொத்தம் 4 வாரங்களுக்கு 20 கார்கள் வழங்கப்படவுள்ளன. குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு புத்தம் புதிய கார் வழங்கப்படும். மாஸ்கோ நகர மேயர் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








