எவ்ளோ பெட்ரோல் போட முடியுமோ அவ்வளவையும் போட்டுக்கோங்க.. முடிஞ்சா அண்டா, குண்டாவுளேயும் நிரப்பிக்கோங்க..
அண்டை மாநிலங்களில் இருப்பதைவிட எரிபொருளின் விலை சற்றே குறைவாக இருப்பதாகக் கூறி பெட்ரோலுக்கு விதிக்கப்படும் வாட் வரியை உயர்த்த திட்டமிடப்பட்டு இருக்கின்றது. புதுச்சேரி அரசாங்கமே இந்த திட்டத்தைப் போட்டுள்ளது. 1 ஜனவரி 2025 முதலே வரி உயர்த்தப்பட இருக்கின்றது. ஆகையால், புத்தாண்டு முதல் புதிய விலையில் பெட்ரோல், டீசல் ஆகியவை பாண்டிச்சேரியில் விற்கப்பட இருக்கின்றன. பெட்ரோல் விலையில் 2.44 சதவீதமும், டீசல் விலையில் 2.57 சதவீதமும் வாட் வரி உயர்த்தப்பட இருக்கின்றது. இதற்கான ஒப்புதல் சமீபத்திலேயே ஆளுநர் கே கைலாசநாதன் வழங்கினார்.
இந்த தகவல் புதுச்சேரி மக்களை பெருத்த அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. இந்த வாட் வரி உயர்வு புதுச்சேரி மாநிலம் மொத்தத்திற்கும் பொருந்தும் என்பது கவனிக்கத்தகுந்தது. இப்போதைய நிலவரப்படி புதுச்சேரியில் பெட்ரோலுக்கு 14.54 சதவீத வரியும், டீசலுக்கு 8.65 சதவீதம் வரியும் வசூலிக்கப்படுகின்றது.

இது வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி முதல் 16.98 சதவீதம் (பெட்ரோல்) மற்றும் 11.22 சதவீதம் (டீசல்) வரையில் உயர இருக்கின்றது. இதேபோல், காரைக்கால்-இல் பெட்ரோலுக்கு 14.55 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுகின்றது. இது 16.99 சதவீதமாக உயர இருக்கின்றது.
தொடர்ந்து, டீசலுக்கு விதிக்கப்பட்டு வரும் 8.66 சதவீத வாட் வரி 11.23 சதவீதமாகவும் உயர்த்தப்பட இருக்கின்றது. இங்கு மட்டுமல்ல மாஹி மற்றும் யானம் உள்ளிட்ட பகுதிகளிலும் வாட் உயர்த்தப்பட இருக்கின்றது. அந்தவகையில், மாஹியில் பெட்ரோலுக்கு 13.32 சதவீதத்தில் இருந்து 15.79 சதவீதமாகவும், டீசலுக்கு 6.91 சதவீதத்தில் இருந்து 9.52 சதவீதமாகவும் உயர்த்தப்பட உள்ளது.

தொடர்ந்து, யானம் பகுதியில் பெட்ரோலுக்கு 15.26 சதவீதத்தில் இருந்து 17.69 சதவீதமாகவும், டீசலுக்கு 8.82 சதவீதத்தில் இருந்து 11.48 சதவீதமாகவும் உயர்த்தப்பட இருக்கின்றது. எனவே ரூ. 2 வரை பெட்ரோல், டீசலின் விலை உயரும் சூழல் பாண்டியில் தற்போது உருவாகி இருக்கின்றது. இதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரக் கூடும் என அஞ்சப்படுகின்றது.
மாநிலத்திற்கும் கிடைக்கும் வருவாயை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் உயர்த்தப்படும் முயற்சியில் புதுச்சேரி களமிறங்கி இருக்கின்றது. ஏற்கனவே வாட் வரி வாயிலாக கிடைக்கும் வருவாய் அரசுக்கு அதிகரித்தே காணப்படுகின்றது. ரூ. 640 கோடியில் இருந்து அது 740 கோடியாக கடந்த மூன்றாண்டுகளில் அதிகரித்து உள்ளது.
இதை மேலும் அதிகப்படுத்தும் ஓர் முயற்சியாகவே வாட் வரி தற்போது உயர்த்தப்பட இருக்கின்றது. அதேவேளையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் புதுவையில் இப்போதும் சரி, வாட் உயர்விற்கு பின்னரும் சரி, பெட்ரோல், டீசல் விலை சற்றே குறைவாகவே இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
புதுச்சேரியைச் சுற்றியிருக்கும் தமிழக வாசிகள் தங்களின் பெட்ரோல் தேவைக்கு புதுச்சேரி சென்ற வண்ணம் இருக்கின்றனர். இவர்களுக்கு இந்த தகவல் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. தமிழகத்தைவிட ரூ. 8-9 வரை விலை வித்தியாசத்தில் அங்கு எரிபொருள் விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
பாண்டிச்சேரியில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற யூனியன் பிரதேசங்களிலும் இதுபோன்று குறைவான விலையிலேயே எரிபொருள் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த சிறப்பை தக்க வைத்துக் கொள்ளும் விதமாகவே சற்றே குறைவாகவே வாட் வரி தற்போது உயர்த்தப்பட்டு இருப்பதாக புதுச்சேரியைச் சேர்ந்த அதிகாரிகள் வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றன. எனவே எப்போதும் போல் பெட்ரோல், டீசல் விற்பனை சூடுபிடித்தே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களில் வசிக்கும் தமிழக வாசிகளுக்கும் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விலை உயர்வில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் எவ்ளோ பெட்ரோல் போட முடியுமோ அவ்வளவையும் நாளை நள்ளிரவிற்கு முன்னரே போட்டுக்கொள்வது நல்லது. முடிஞ்சா கொஞ்சம் பெட்ரோலையும் வாங்கி சேமிச்சு வச்சுக்கோங்க. இதன் வாயிலாக கொஞ்சம் நாளைக்கு எரிபொருள் விலை உயர்வில் இருந்து தப்பிக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








