அல்லு அர்ஜூனை காரை எல்லாம் தள்ள வெச்சாங்களா... விஷயம் தெரிஞ்சதும் கண் கலங்கும் ரசிகர்கள்... ஆதரவு பெருகுது...
இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களிலும் தற்போது வெற்றிகரமாக ஓடி கொண்டுள்ள ஒரு திரைப்படம் புஷ்பா 2 (Pushpa 2). நடிகர் அல்லு அர்ஜூன் (Allu Arjun) நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம், 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனைகளை படைத்து கொண்டுள்ளது. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஸனில் (Box Office Collection) புஷ்பா 2 வரலாறு படைத்து வரும் இந்த நேரத்தில், அதன் கதாநாயகன் அல்லு அர்ஜூன் அதை கொண்டாட முடியாத சூழலில் சிக்கியுள்ளார். காவல் துறை அதிகாரிகளால் அவர் அதிரடியாக கைது (Arrest) செய்யப்பட்டிருப்பதுதான் இதற்கான காரணம்.
புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியானது. அதற்கு முந்தைய நாள், அதாவது டிசம்பர் 4ம் தேதி, ஹைதராபாத் (Hyderabad) நகரில் உள்ள சந்தியா தியேட்டரில் (Sandhya Theatre) புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதை காண அல்லு அர்ஜூன் வந்திருந்தார்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் (Stampede Incident) சிக்கி, ரேவதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கில் ஹைதராபாத் சந்தியா தியேட்டர் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வரிசையில் அல்லு அர்ஜூன் இன்று (டிசம்பர் 13) அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இது சாதாரண விசாரணையாக மட்டுமே இருக்கும் என்றுதான் ஆரம்பத்தில் அனைவரும் நினைத்தனர். அனேகமாக ஸ்டேஷன் பெயிலிலேயே (Station Bail) அல்லு அர்ஜூன் விடுவிக்கப்பட்டு விடுவார் எனவும் கூட எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவல் துறை அதிகாரிகள், நடிகர் அல்லு அர்ஜூனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அல்லு அர்ஜூனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த விஷயம் தெரிந்ததும், அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் கண் கலங்க தொடங்கினர். ஆனால் சிறையில் அடைக்கப்படும் உத்தரவு வெளியான உடனேயே திரையுலகை சேர்ந்த பலரும் அல்லு அர்ஜூனிற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க தொடங்கி விட்டனர்.
அவ்வளவு ஏன்? இந்த விவகாரத்தில் உயிரிழந்த ரேவதியின் கணவரே (Husband) அல்லு அர்ஜூனிற்கு ஆதரவான கருத்தை வெளியிட்டார். ''இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜூன் மீது எந்த தவறும் இல்லை. தேவைப்பட்டால் வழக்கை வாபஸ் வாங்க நான் தயாராக உள்ளேன்'' என அவர் கூறினார். அவரது இந்த பேட்டி, அல்லு அர்ஜூனிற்கு பொதுமக்கள் மத்தியில் கூடுதல் ஆதரவை பெற்று தந்து கொண்டுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தால் சிக்கலில் சிக்கி கொண்டுள்ள அல்லு அர்ஜூன், கார் ஆர்வலர் (Car Enthusiast) ஆவார். அவரிடம் ஏராளமான விலை உயர்ந்த சொகுசு கார்கள் (Luxury Cars) உள்ளன. அல்லு அர்ஜூனிடம் உள்ள சொகுசு கார்களின் விபரம் பின்வருமாறு:
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan): அல்லு அர்ஜூனிடம் உள்ள விலை உயர்ந்த கார்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில், 590 பிஹெச்பி பவர் மற்றும் 900 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள மற்றும் அதிகம் விற்பனையாகி வரும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. முகேஷ் அம்பானி (Mukesh Ambani) குடும்பத்திடம் மட்டும் சுமார் 10 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜாகுவார் எக்ஸ்ஜே எல் (Jaguar XJ L): அல்லு அர்ஜூனிடம் உள்ள ஜாகுவார் எக்ஸ்ஜே எல் காரில், 3.0 லிட்டர் வி6 டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 271 ஹெச்பி பவர் மற்றும் 600 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
ஹம்மர் ஹெச்2 (Hummer H2): அல்லு அர்ஜூனின் ஹம்மர் ஹெச்2 கார், அதிகபட்சமாக 393 பிஹெச்பி பவர் மற்றும் 563 என்எம் டார்க் திறனை உருவாக்கி சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லக்கூடியது. எம்எஸ் டோனி (MS Dhoni) உள்ளிட்ட பிரபலங்களிடமும் ஹம்மர் ஹெச்2 கார் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue): அல்லு அர்ஜூனின் ரேஞ்ச் ரோவர் வோக் காரில், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 387 பிஹெச்பி பவர் மற்றும் 550 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. சல்மான் கான் (Salman Khan) போன்ற பிரபலங்களும் ரேஞ்ச் ரோவர் வோக் காரை வைத்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அல்லு அர்ஜூன் இன்று ஏராளமான சொகுசு கார்களை வைத்திருந்தாலும் கூட, ஒரு காலத்தில் சாலையில் அடிக்கடி காரை தள்ளும் அளவிற்கு, அவரது குடும்பத்தால் கஷ்டமான சூழலில் வளர்க்கப்பட்டவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மைதான். இதை ஒரு முறை அல்லு அர்ஜூனே நேரடியாக கூறியுள்ளார்.
அல்லு அர்ஜூன் 18 வயதை எட்டியபோது, அவரது தந்தை அவருக்கு சொந்தமாக முதல் காரை வாங்கி கொடுத்துள்ளார். 18 வயது நிரம்பியவுடன் சொந்தமாக கார் வாங்கி தருகிறேன் என்ற வாக்குறுதியின்படி, அல்லு அர்ஜூனின் தந்தை இதை செய்துள்ளார். ஆனால் அல்லு அர்ஜூனின் தந்தை வாங்கி கொடுத்தது புதிய கார் அல்ல.
அது பழைய கார் ஆகும். அல்லு அர்ஜூனிற்கு புதிய காரை வாங்கி தருவதில், அவரது தந்தைக்கு உடன்பாடு இல்லை. எனவே நண்பர் ஒருவரிடம் இருந்து பழைய காரை வாங்கி கொடுத்துள்ளார். பழைய கார் என்பதால், அந்த காரை ஓட்டியதை விட தள்ளியதுதான் அதிகம் என அல்லு அர்ஜூன் கடந்த காலங்களில் பேட்டிகளின்போது தெரிவித்துள்ளார்.
சொல்லப்போனால் 'மிடில் க்ளாஸ்' குடும்ப சூழலில்தான் நடிகர் அல்லு அர்ஜூன் வளர்க்கப்பட்டுள்ளார். உண்மையில் அல்லு அர்ஜூன் பாரம்பரியமான சினிமா பின்னணியை கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார். எனவே அவர்கள் நினைத்திருந்தால், அல்லு அர்ஜூனிற்கு புதிய காரையே வாங்கி தந்திருக்க முடியும்.
ஆனால் அல்லு அர்ஜூனின் அப்பாவும், தாத்தாவும், மிடில்-க்ளாஸ் குடும்பத்தில் இருந்து வந்து, திரைத்துறையில் சாதித்து செல்வந்தவர்களாக மாறியவர்கள். அவர்கள் நன்றாக பணம் சம்பாதித்த பிறகும் கூட, மிடில்-க்ளாஸ் மன நிலையை கை விடவில்லை. எனவே அல்லு அர்ஜூனையும் மிடில்-க்ளாஸ் சூழலிலேயேதான் அவர்கள் வளர்த்துள்ளனர்.
சாலையில் காரை எல்லாம் தள்ளும் அளவிற்கு அல்லு அர்ஜூன் வளர்க்கப்பட்டதற்கு இதுவே காரணம். மிடில் க்ளாஸ் பையனாகதான் வளர்க்கப்பட்டேன் என்பதும் கூட அல்லு அர்ஜூனே நேரடியாக கூறிய வார்த்தைகள்தான். அப்படிப்பட்ட ஒருவர் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் போன்ற கார்களை எல்லாம் வைத்திருப்பது ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.


Click it and Unblock the Notifications








