கன்னாபின்னானு உயரும் பெட்ரோல் விலை! தமிழகத்தில் இப்படி ஒரு சலுகையை யாருமே எதிர்பாக்கல! உடனே யூஸ் பண்ணிக்கணும்!
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில், தமிழகத்தில் அதிரடியான சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை வாகன ஓட்டிகளை வாட்டி வதைத்து வருகிறது. பல மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை முதல் முறையாக 100 ரூபாயை கடந்துள்ளது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தங்களது கலால் மற்றும் வாட் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அல்லது ஜிஎஸ்டி வரம்பிற்குள்ளாவது பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும்பட்சத்தில், பெட்ரோல், டீசலின் விலை வெகுவாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் வருவாய் இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால், வாகன ஓட்டிகளின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தற்போது தயாராக இல்லை.

இதனால் சமூக வலை தளங்களில் வாகன ஓட்டிகள் மனக்குமுறலை கொட்டி வருகின்றனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில், பிரபல பிரியாணி கடை ஒன்று தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பிரியாணி பிரியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு கவனம் ஈர்த்துள்ளது. பிரியாணி வாங்கினால் பெட்ரோல் இலவசம் என்பதுதான் அந்த அறிவிப்பு.

பிரபல பிரியாணி கடையான தொப்பி வாப்பா பிரியாணிதான் இந்த அதிரடி சலுகையை அறிவித்து கவனம் ஈர்த்துள்ளது. இதன்படி ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால், 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும். ஆனால் இந்த சலுகை நாளை (ஜூலை 8, வியாழன்) ஒரு நாள் மட்டுமே வழங்கப்படும். அத்துடன் சென்னை நகரில் உள்ள தொப்பி வாப்பா பிரியாணி கடையின் கிளைகளில் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.

எனவே பிரியாணி மீது காதல் கொண்ட வாகன ஓட்டிகள் நாளை தொப்பி வாப்பா பிரியாணி கடைகளுக்கு படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால் ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களில் கேக் வாங்கினால், பெட்ரோல் இலவசம் என நிறைய பேக்கரிகள் அறிவித்திருக்கின்றன.

அதேபோன்று எரிபொருள் விலை உயர்வை குறிப்பிடும் வகையில், திருமண நிகழ்ச்சிகளில் மணமக்களுக்கு பெட்ரோல், டீசலை நண்பர்கள், உறவினர்கள் பரிசாக வழங்கிய வினோத சம்பவங்களும் கூட நடந்துள்ளன. இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை தற்போதைக்கு குறைவதற்கான வாய்ப்புகள் எதுவும் தென்படவில்லை.

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை காரணமாக மத்திய, மாநில அரசுகளும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் மூலமாக கிடைக்கும் வருமானத்தை அவை பெரிதும் நம்பியுள்ளன. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் எரிபொருள் விலை குறைவது சந்தேகமே.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால், இந்திய மக்களின் கவனம் எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது தற்போது திரும்பியுள்ளது. அதற்கேற்ப முன்னணி கார் மற்றும் டூவீலர் நிறுவனங்கள் தொடர்ச்சியாக பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. எனவே வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications