ஃபோக்ஸ்வேகன் கார் பெயர்களில் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யங்கள்!!
உலகின் மாபெரும் கார் தயாரிப்பு குழுமமாக திகழும் ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் தனது கார் மாடல்களுக்கான பெயரை எப்படி தேர்ந்தெடுத்து வைத்துள்ளது தெரியுமா? அந்த பெயர்களுக்கு பின்னால் சுவாரஸ்யங்கள் அடங்கியுள்ளன.
அதனை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். நமது வாசகரின் பின்னூட்டத்தின் அடிப்படையில் இந்த செய்தியை வழங்குகிறோம்.

கோல்ப்
கோல்ப் என்றவுடன் விளையாட்டுத்தான் நினைவுக்கு வரும். ஆனால், ஜெர்மன் மொழியில் கோல்ப் என்பது Gulf Stream எனப்படும் கடலில் ஏற்படும் வெப்ப நீரோட்டத்தை குறிக்கும் சொல். ஐரோப்பிய நாடுகளின் தட்பவெப்பத்தை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கும் கல்ப் ஸ்ட்ரீம் என்ற கடல் நீரோட்டத்தை குறிக்கும் வகையில் கோல்ப் பெயரை தேர்வு செய்தது ஃபோக்ஸ்வேகன்.

பஸாத்
பூமத்திய ரேகை பகுதிகளில் வீசும் வெப்ப காற்றையும், பொதுவான பூமியில் காற்று சுழற்சியையும் குறிக்கும் வகையிலான சொல்லின் அடிப்படையில் பஸாத் என பெயரிடப்பட்டது.

சிராக்கோ
சஹாரா பாலைவனப் பகுதிகளில் வெப்பக் காற்றும், குளிர்ச்சியான காற்றும் இணைந்து உருவாகி இத்தாலியில் வீசும் காற்றை இத்தாலி நாட்டவர் சிராக்கோ என்று அழைக்கின்றனர். இதனை அரபு நாடுகளில் கிப்லி, சிலி மற்றும் சாம்சின் என்றும் அழைக்கின்றனர். இந்த காற்றில் மணலும் கலந்து வீசும். கமென்ட் பாக்சில் 'அந்த' சிராக்கோவை பத்தி எதுவும் கேட்டுடாதீங்க...!!

டூரக்
சஹாரா பாலைவனப் பகுதியில் வாழும் நாடோடி இனத்தவரின் பெயர்தான் டூரக் என்பதாகும். டூரக் என்பதற்கு கடவுளால் கைவிடப்பட்டவர்கள் என்று அராபிய மொழியில் அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. கடினமான தட்பவெப்ப நிலையிலும் அவர்களின் வாழ்க்கை முறை இருப்பதை போன்று தனது எஸ்யூவியும் அனைத்து வித சாலைகளையும் எளிதாக எதிர்கொள்ளும் என்று பொருள்படும் வகையில் டூரக் என்று பெயரிட்டது ஃபோக்ஸ்வேகன்.

ஜெட்டா
ஜெட் ஸ்ட்ரீம் எனப்படும் கடல் நீரோட்டத்தின் அடிப்படையாகக் கொண்டு உருவான பெயர்தான் ஜெட்டா.

கொராடோ
1988 முதல் 1990 வரை தயாரிக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகனின் ஸ்போர்ட்ஸ் கார் மாடல்தான் கொராடோ. ஸ்பானிய மொழியில் ஓடுவதை குறிக்கும் Correr என்பதன் அடிப்படையில் இந்த பெயர் வைக்கப்பட்டது.

வென்ட்டோ
இத்தாலிய மொழியில் காற்றை குறிக்கும் சொல்தான் வென்ட்டோ.

போலோ
வட துருவ பகுதியில் வீசும் காற்றின் Polar wind என்பதை வைத்து தனது ஹேட்ச்பேக் காருக்கு போலோ என்று பெயரிட்டது ஃபோக்ஸ்வேகன்.

டிகுவான்
ஆங்கிலத்தில் டைகர் என்பதையும், லெகுவான் என்ற பச்சோந்தி ஓணானின் பெயரையும் இணைத்து தனது முதல் காம்பெக்ட் எஸ்யூவிக்கு டிகுவான் என ஃபோக்ஸ்வேகன் பெயரிட்டது.

பீட்டில்
உருவத்தில் வண்டு போன்று இருப்பதால் இந்த காருக்கு பீட்டில் என்ற பெயர் தொற்றிக் கொண்டது.


Click it and Unblock the Notifications








