குஜராத் சாலையில் வலம் வந்த டயரில்ல விநோத வாகனம்.. 80 கிமீ தூரம் வரை டிராவல் பண்ணுமா!
இந்தியர்கள் பலர் தங்களுக்கான வாகனத்தை தாங்களே வடிவமைக்கும் அளவிற்கு கை தேர்ந்தவர்களாக மாறியுள்ளனர். இதற்கு சான்றாக நம் நாட்டில் பல சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. இளைஞர்கள் பலர் தங்களின் தனித் திறனைக் காண்பிக்கும் பொருட்டு வீட்டிலேயே வைத்து வாகனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்தமாதிரியான ஓர் நிகழ்வே தற்போது மீண்டும் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் ஓர் விநோதமான வாகனத்தை வடிவமைத்திருக்கின்றனர். இந்த வாகனம் வழக்கமான வாகனத்திடம் இருந்து பலநிலைகளில் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது.
ஒரு பெரிய கண்ணாடி உருளை போன்ற உருவம் கொண்ட வாகனத்தையே மாணவர்கள் உருவாக்கி இருக்கின்றனர். இதை பார்ப்பவர்கள் யாரும் இதனை வாகனம் என கூறமாட்டார்கள். அந்த மாதிரியான ஓர் தனித்துவமான தோற்றத்தையே இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது. டைனோசர் படத்தில் வரும் பந்து போன்ற வாகனத்தை தழுவி இந்த வாகனத்தை மாணவர்கள் வடிவமைத்திருக்கலாம் என யூகிக்க முடிகின்றது.

ஏனெனில், இந்த வாகனத்திலும் வழக்கமான வாகனங்களில் காணப்படும் டயர் மற்றும் ஸ்டியரிங் வீல் உள்ளிட்டவை இடம் பெறவில்லை. மேலும், இது ஓர் மின்சார வாகனமும் கூட. இதில் ஓர் முழு சார்ஜில் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என அவ்வாகனத்தை வடிவமைத்த மாணவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 35 கிமீ என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர். இத்துடன், மிக மிக சுவாரஷ்யமான தகவலாக இந்த வாகனத்தை வெறும் ரூ. 65 ஆயிரம் செலவிலேயே அவர்கள் தயார் செய்துவிட்டதாகவும் தெரிவித்து இருக்கின்றனர். இதன் மற்றுமொரு ஸ்பெஷல் என்னவென்றால் இது ஏஐ தொழில்நுட்பத்தின் வாயிலாக இயங்கும் என்பதுதான்.
இதனால்தான், இந்த வாகனத்தில் ஸ்டியரிங் வீல் வழங்கப்படவில்லை. இந்தியாவில் பெரு நிறுவனங்களின் தலையீடு இல்லாமல் இதுபோன்று ஓர் வாகனம் வடிவமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். எனவே, இந்தியாவின் மிக மிக குறைவான செலவில் உருவாக்கப்பட்ட முதல் அதிக ரேஞ்ஜ் தரும் ஏஐ எலெக்ட்ரிக் வாகனமாகவும் இது மாறி இருக்கின்றது.
இந்த வாகனத்தை பிற பொருட்களின் கழிவுகளைக் கொண்டு உருவாக்கியதாலேயே இந்த அளவிற்கு குறைவான விலையில் உருவாக்க முடிந்ததாக மாணவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த வாகனத்தின் உற்பத்தி மிகப் பெரிய அளவில் தொடங்கப்படும் எனில் இதன் உற்பத்தி செலவு இன்னும் பலமடங்கு குறைய நேரிடும்.
சிவம் மோர்யா, சங்கம் மிஸ்ரா மற்றும் தஜித் ஆகியோர் சேர்ந்தே இந்த வாகனத்தை உருவாக்கி இருக்கின்றனர். ஏழை மற்றும் எளிய மக்களை மனதில் கொண்டே இதனை உருவாக்கி இருக்கின்றனர். வீடியோ கேம் விளையாட உதவும் ஜாய் ஸ்டிக் மற்றும் செல்போனின் சில பாகங்களைப் பயன்படுத்தியே இந்த வாகனத்தை ஸ்டியரிங் வீல் மற்றும் டயர் இல்லாமல் இயங்கும் வகையில் மாணவர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.
உண்மையில் இது ஒரு அசத்தலான வாகனம் ஆகும். இந்தியாவில் மிக மிக மலிவான விலையில் இத்தகைய திறன் கொண்ட வாகனம் உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். நான்கு அடி நீளம் மற்றும் ஆறடி அகலம் கொண்டதாக இந்த வாகனம் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் ஒரு நபர் மட்டுமே பயணிக்க முடியும். கூட லக்கேஜ்களையும் அவரால் எடுத்து செல்ல முடியும்.
இந்த இயக்கத்திற்காக என்ன மாதிரியான திறன் கொண்ட பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. விரைவில் இதுபற்றிய விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இதை வர்த்தக ரீதியாக எப்போது உற்பத்தி செய்வார்கள் என்பது பற்றிய விபரமும் வெளியிடப்படவில்லை. ஆனால், இதை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள் என்று மட்டும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னணி நிறுவனங்களே ஸ்டியரிங் வீல் இல்லாத வாகனங்களை இன்னும் தயார் செய்யாத நிலையில் பொறியியல் படிப்பை படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் இந்த வகை வாகனத்தை உருவாக்கி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. விரைவில் இந்த வாகனத்தை அவர்கள் விற்பனைக்குக் கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








