எல்லாம் வாடகை தான்!! ஜி20 மாநாட்டில் பந்தா காட்ட லக்சரி கார்கள் தயார்! நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வாடகையாம்
ஜி20 உச்சி மாநாடு பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை (செப் 9) டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு வருகை தரும் உலக தலைவர்கள் பயன்படுத்த உள்ள கார்கள் என்னென்ன என்பது குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை பற்றி இனி பார்க்கலாம்.
இந்தியாவில் மட்டுமின்றி, தெற்காசியாவிலேயே முதல்முறையாக ஜி20 உச்சி மாநாடு 2023 செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. டெல்லியின் இந்தியன் கேட்டிற்கு அருகே உள்ள பிரகதி மைதனில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா உள்பட 19 நாடுகளை சேர்ந்த தலைவர்களும், ஐரோப்பிய யூனியனை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இவ்வாறு உலகின் முக்கிய தலைவர்கள் கலந்துக் கொள்வதினால் மொத்த டெல்லியே பரபரப்பாக உள்ளது. மாநாடு நடைபெறவுள்ளது வெறும் 2 நாட்கள் தான் என்றாலும், அந்த 2 நாட்களுக்கு ஜி20 மாநாட்டில் கலந்துக் கொள்ளும் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் அதிகாரிகள் பயன்படுத்த வாகனங்களை இந்திய அரசாங்கம் தான் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போன்ற சில வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவிற்கு வரும்போதே கூடவே கார்களையும் கொண்டு வருகின்றனர். மற்றவர்களுக்கு, லக்சரி கார்களும், வேன்களும் டெல்லி, மும்பை, சண்டிகர் மற்றும் பெங்களூருவில் உள்ள வாடகை லக்சரி கார் நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. சில வாடகை கார் நிறுவனங்களிடம் போதிய அளவிற்கு வாகனங்கள் இல்லாததால், அண்டை நாடான நேபாளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ளும் வெளிநாட்டு தலைவர்களுக்கு அதிகளவில் உயர் தரத்திலான முழு-நீள செடான் கார்களே வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய லக்சரி செடான் கார்களில், மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ், மெர்சிடிஸ்-மேபக் எஸ்600, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ், ஜெனேசிஸ் ஜி80 மற்றும் ஆடி ஏ8 உள்ளிட்டவை அதிகாரிகள் பலரால் விரும்பி தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று, நடுத்தர-அளவு செடான் கார்களான மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் போன்றவையும் வாடகைக்கு பெறப்பட்டு, வந்திருக்கும் வெளிநாட்டு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு வாடகைக்கு லக்சரி கார்களை வழங்கும் நிறுவனங்களில் முக்கியமானதாக கராச்சி டாக்ஸி சர்வீஸ் விளங்குகிறது.

டெல்லியில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் கராச்சி டாக்ஸி சர்வீஸ் (KTC) 2023 ஜி20 உச்சி மாநாட்டிற்காக 30இல் இருந்து 35 கார்களை வழங்கியுள்ளது. இதில் சில கார்களுக்கு நாள் ஒன்று ரூ.1 லட்சம் வரையில் வாடகை ஆகும். மேலும், டொயோட்டா கோஸ்டர் போன்ற சில லக்சரி வேன்களை கேடிசி நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. ஏனெனில், டொயோட்டா கோஸ்டர் லக்சரி வேன் இந்தியாவில் விற்பனையில் இல்லை.
புதிய கார்கள் தங்களது நிறுவனத்தின் சேவையில் நவம்பர் மாதத்தில் இணையவுள்ளதாக கூறும் கேடிசி நிறுவனர் இக்பால் சிங், மத்திய அரசாங்கத்தின் ஜி20 மாநாட்டிற்கான உடனடி தேவையால் புதியதாக வாங்கிய கார்களை முன்கூட்டியே டெலிவிரி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வாகனங்களை நம் இந்தியாவை சேர்ந்த டிரைவர்கள் தான் இயக்கவுள்ளனர். ஆதலால், டிரைவர் பணியில் அமர்த்தப்படுபவர்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டும் தெரிந்திருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேடிசி மட்டுமே 35 கார்களை வழங்குகிறது எனும்போது, மற்ற நிறுவனங்கள் மொத்தமாக நிறைய கார்களை வழங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வாடகைக்கு லக்சரி கார்களை பெறுவது மத்திய அரசாங்க அதிகாரிகளுக்கு ஒரு தலைவலி என்றால், அவ்வாறு வாங்கப்படும் கார்களை முழுவதுமாக சோதனை செய்து, அவற்றிற்கு பாதுகாப்பு தர சான்றிதழை வழங்க வேண்டியது அதை விட பெரிய சவால் ஆகும்.


Click it and Unblock the Notifications
