ஜி20 மாநாடு - ஸ்தம்பித்து போனது டெல்லி வான்வெளி!! இதுவரையில் பார்த்திராத ஏர்லைன்ஸ் விமானங்கள் வந்திருக்கு!
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக வந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளின் சிறப்பு விமானங்கள் டெல்லியில் குவிந்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், ஜி20 உச்சி மாநாட்டை பற்றியும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
நாடு முழுவதும் தற்சமயம் ஜி20 உச்சி மாநாடு குறித்த பேச்சாக உள்ளது. 19 வெளிநாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த பொருளாதாரம் சார்ந்த மாநாடு தெற்காசியாவிலேயே முதல் நாடாக இந்தியாவில் நடைபெறுகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன பிரதமர் என உலகின் முக்கிய தலைவர்கள் தற்சமயம் குவிந்து இருப்பதால், டெல்லியை மொத்த உலகமும் உற்றுக் கவனிக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். வெளிநாட்டு தலைவர்களுக்காக மத்திய அரசு வாடகை எடுத்துள்ள லக்சரி கார்களும், வேன்களும் டெல்லி சாலைகளில் அங்கும் இங்குமாக சென்று வருகின்றன.
அதேபோல், வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வந்த விமானங்கள் டெல்லியை சூழ்ந்துள்ளன. நேற்று (செப்டம்பர் 8) மட்டும் கிட்டத்தட்ட 21 சிறப்பு விமானங்கள் டெல்லியில் தரையிறக்கப்பட்டுள்ளன. இதில் 12 விமானங்கள் செப்டம்பர் 8ஆம் தேதி மாலை 5 மணியளவில் டெல்லியில் தரையிறங்கின. இந்த 12 விமானங்களில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானமும் ஒன்றாகும்.

வெளிநாட்டு பிரதிநிதிகளின் பெரும்பாலான விமானங்கள் இந்திய விமான படையின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லியின் பாலாம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு உள்ளன. இந்த வகையில், டெல்லிக்கு வந்துள்ள விவிஐபி விமானங்களில் சில விமானங்கள் மட்டுமே வெளிநாட்டு தலைவர்கள் வந்தவை ஆகும். பெரும்பாலானவை அவர்களின் பாதுகாப்புக்காக வந்தவை ஆகும்.
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்த விவிஐபி-களின் விமானங்களால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் அன்றாட சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என அங்கிருந்து வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மொரீஷியஸ் நாட்டின் தலைவர்களும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சிங்கப்பூர் நாட்டு தலைவர்களின் விமானங்கள் மட்டுமே தரையிறக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், சிக்னல் உள்ளிட்ட தொழிற்நுட்ப குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால், செப்டம்பர் 8ஆம் தேதி மதியம் 12 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரையில் டெல்லிக்கு வரும் வழக்கமான விமானங்களின் எண்ணிக்கையில் 25% குறைக்கப்பட்டும், சில விமானங்களின் வழித்தடங்கள் மாற்றுப்பாதைக்கும் திருப்பிவிடப்பட்டுள்ள. ஏனெனில் அந்த 12 மணிநேரத்தில் தான் வெளிநாட்டு தலைவர்களின் விமானங்கள் அதிகளவில் தரையிறங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஜெர்மனி அதிபர் ஓல்ஃப் ஸ்க்ஹோல்ஸ் மற்றும் பிரெஞ்சு பிரதமர் இம்மானுவேல் மெக்ரானின் விமானங்கள் இன்று (செப்டம்பர் 9) காலையில் தான் தரையிறங்கின. அதேபோன்று, நாளை (செப்டம்பர் 10) மாலை 6 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரையில் ஜி20-இல் கலந்துக் கொண்டவர்களின் விமானங்கள் புறப்படும் என்பதால், வழக்கமான விமான சேவைகள் குறைக்கப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஜி20 மாநாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளும் தலைவர்கள் மற்றும் விமானங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் இந்தியாவிற்கு உள்ளது. ஆகையால், வெறும் 2 நாள் மாநாடு என கருதினாலும், ஜி20 மாநாட்டை நடத்துவதில் உள்ள சிரமங்களை நிச்சயமாக மத்திய அரசாங்க அதிகாரிகள் உணர்ந்திருப்பார்கள்.


Click it and Unblock the Notifications
