ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கும் போகும் முதல் தமிழர் இவர் தான்! யார் இவர் தெரியுமா?
இஸ்ரோவின் அடுத்த கனவு திட்டமான ககன்யான் திட்டத்திற்கு விண்வெளியில் பயணம் செய்யப்போகும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த நான்கு வீரர்கள் ஒரு வீரர் தமிழர் என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து முதன்முதலாக இஸ்ரோ மூலம் விண்வெளிக்கு அனுப்ப போகும் வீரர்கள் பட்டியலில் தமிழரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்தாண்டு இஸ்ரோ தனது கனவு திட்டமான சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. நிலவின் தென் துருவப் பகுதியில் திட்டமிட்டபடி சந்திரயான் 3 விண்கலம் தரை இறங்கியது. இதன் மூலம் உலக நாடுகள் யாரும் செய்யாத சாதனையை செய்து மிகப் பெரிய விண்வெளி ஆய்வு மையமாக மாறி உள்ளது. இந்நிலையில் இஸ்ரோவின் அடுத்தடுத்த நகரங்களை எல்லாம் உற்று நோக்கி வருகிறார்கள்.

இஸ்ரோவின் அடுத்த கனவு திட்டமாக மாறி இருப்பது ககன்யான் திட்டம் தான். அதாவது பூமியிலிருந்து மூன்று விண்வெளி வீரர்களை சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்திற்கு எடுத்துச் சென்று அவர்கள் விண்வெளியில் சில ஆய்வுகளை மேற்கொண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வருவது தான் இந்த ககன்யான் திட்டமாகும். தற்போது இஸ்ரோ இதற்காக தான் தீவிரமாக உழைத்து வருகிறது.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கான முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட சோதனையும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்ட சோதனையில் ஆள் இல்லாமல் இந்த திட்டத்திற்கான ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் போது இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு செல்லும் வீரர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது.

அதன்படி நேற்று திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி விண்வெளிக்கு செல்லும் வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி நான்கு வீரர்கள் விண்வெளிக்காக தேர்வு செய்யப்பட்டனர். குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், மற்றும் விங் கமெண்டர் சுபாஷ் சுக்லா ஆகிய நான்கு பேரும் தேர்வு செய்யப்பட்டு தற்போது விண்வெளிக்கு பயணம் செய்வதற்காக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விண்வெளிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அஜித் கிருஷ்ணன் என்பவர் தமிழர் என தெரிய வந்துள்ளது. கடந்த 1982-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ம் தேதி இவர் சென்னையில் பிறந்துள்ளார். இவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் தேர்ச்சி பெற்றவர். இவர் அகாடமியில் படிக்கும் போதே சிறப்பாக செயல்பட்டதற்காக ஜனாதிபதியிடம் தங்கப்பதக்கம் வாங்கியவர்.

இவர் கடந்த 2003-ம் ஆண்டு இந்திய விமானப்படையின் போர் விமான பிரிவில் நியமிக்கப்பட்டார். தற்போது விமானம் ஓட்ட படித்து வரும் எதிர்கால விமானிகளுக்கு விமானம் ஓட்ட கற்றுக் கொடுக்கும் பயிற்சியாளராகவும் இருக்கிறார். இந்தியா புதிய விமானங்களை வாங்கும்போது அதை ஓட்டி பார்த்து சோதனை செய்யும் சோதனை விமானியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் இதுவரை 2900 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் பெற்றவராக உள்ளார்.
இவர் Su-30 MKI, MiG-21, MiG-21, Mig-29, Jaguar, Dornier, An-32 போன்ற போர் விமானங்களை எல்லாம் ஓட்டி அனுபவம் பெற்றவராக இருக்கிறார். இவர் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் செயல்பட்டு வரும் ராணுவ பணியாளர்கள் சேவை கல்லூரியில் பயிற்சி பெற்றவர். இவர் இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கான தேர்வான பட்டியலில் ஒருவராக இருக்கிறார்.
இந்தியா கடந்த 1984-ம் ஆண்டு சோவியத் யூனியன் மூலம் விண்வெளிக்கு முதல் இந்தியராக ராக்கேஷ் சர்மா என்பவரை அனுப்பியது. அதன் பின்பு 40 ஆண்டு காலம் யாரையும் விண்வெளிக்கு அனுப்பாத நிலையில் தற்போது இஸ்ரோ மூலமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் எல்லாம் இறங்கியுள்ளது. இவர்கள் பத்திரமாக விண்வெளிக்கு சென்று திரும்பி வந்தால் அது இஸ்ரோவின் அடுத்த மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ அனுப்பும் ஒவ்வொரு ராக்கெட்டிலும் தமிழர்களின் பங்கு மிக அதிகமாக இருக்கிறது சந்திரயான் திட்ட இயக்குனராக தமிழர் ஒருவர் தான் இருந்தார். அதன் பின்பு நடத்தப்பட்ட ஆதித்யா எல் ஒன் திட்டத்திற்கும் தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் தான் இயக்குனராக இருந்தார். இப்படியாக தமிழர்களின் பங்கு இஸ்ரோவில் அதிகமாக இருந்து வரும் நிலையில் தான் திட்டத்திலும் விண்வெளி வீரர்களில் ஒருவராக தமிழர்தான் இருக்கிறார் என்பது நமக்கு பெருமை.


Click it and Unblock the Notifications









