சந்திரயானுக்கு பிறகு இஸ்ரோ செய்யப்போகும் அடுத்த உலக சாதனை இது தான்! இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணா போதும்
சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் தரை இறங்கியதை தற்போது இந்தியர்கள் பெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர். உலகில் வேறு எந்த விஞ்ஞானிகளாலும் செய்ய முடியாத சாதனையை இஸ்ரோ நேற்றைய செய்து காட்டி இந்தியர்களை கௌரவப்படுத்தியுள்ளது. இந்நிலையில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் பற்றி தான் இங்கு நாம் விரிவாக பார்க்க போகிறோம்.
பூமியில் உள்ள மனிதனை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பத்திரமாக பூமிக்கு திருப்பி கொண்டு வருவது என்பது நிச்சயம் மிகப்பெரிய சாதனைதான். ஒரு காலத்தில் விண்வெளிக்கு செல்வதை இந்தியர்கள் பெரும் கனவாக வைத்திருந்த நிலையில் தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியால் இந்த திட்டம் விரைவில் சாத்தியமாகப் போகிறது.

விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வீரர் என்றால் அவர் பெயர் ராகேஷ் சர்மா தான். 1984 ஆம் ஆண்டு ரஷ்யா நடத்திய ஒரு மிஷனில் இவர் விண்வெளிக்கு சென்றுள்ளார். அதன் பின்பு இந்தியா சார்ந்த பலர் இந்தியா அல்லாமல் மற்ற விண்வெளி ஆய்வு மையங்களின் திட்டங்கள் மூலம் விண்வெளிக்கு சென்று திரும்பி உள்ளனர்.
இஸ்ரோ விண்வெளிக்கு இதுவரை மனிதர்களை அனுப்பியதில்லை. ஆனால் நேற்று செய்த சாதனையால் பலர் இஸ்ரோவை திரும்பிப் பார்க்கின்றனர். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை தயார் செய்து விட்டது. அப்பொழுதே பிரதமர் மோடி ககன்யான் திட்டம் குறித்து அறிவித்தார்.

ககன்யான் என்றால் சமஸ்கிருதத்தில் ஸ்பேஸ் கிராஃப்ட் என பொருள். இந்த திட்டத்தின்படி மூன்று விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி அவர்களை மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது தான் திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.இந்த திட்டத்தை 2021 ஆம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது.
ஆனால் 2020 ஆம் ஆண்டில் வந்த கொரோனா காரணமாக பல்வேறு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக இது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. 2026ம் ஆண்டு விண்வெளிக்கு இஸ்ரோ மனிதர்களை அனுப்பும் என தெரிகிறது.

ககன்யான் திட்டம் என்பது மூன்று நாள் திட்டமாகும். இதன்படி மூன்று விண்வெளி வீரர்களை ராக்கெட்டில் ஏற்றி அவர்களை விண்ணுக்கு அனுப்பி பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் அவர்களை நிறுத்தி மூன்று நாட்கள் அவர்கள் அங்கு ஆய்வு செய்த பின்ப அவர்களை மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது தான் இந்தத் திட்டத்தின் செயலாகும்.
இந்தத் திட்டத்திற்கு பத்திரமாக விண்வெளி வீரர்கள் பூமிக்கு வர அவர்கள் கடலில் தரை இறங்குவார்கள் அவர்களை மீட்க இந்திய கடற்படை தயாராக இருக்கும்படி திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக தற்போது உள்ள ராக்கெட்டில் கூடுதலாக க்ரூ எஸ்கேப் சிஸ்டம் என்ற புதிய கருவியை செட் செய்து அதில் எந்த நேரம் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், அதன் மூலம் விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமியில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் முன்பு மூன்று முறை ஒத்திகை பார்க்க இஸ்ட்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒரு முறை எந்த பேலோடுகளும் இல்லாமலும் இரண்டு முறை பேலோடுகளுடன் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பி சோதனை செய்த பின்பு அதன் மூலம் நல்ல முடிவுகள் கிடைத்தால் மட்டுமே விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விண்வெளி வீரர்கள் பயன்படுத்துவதற்கான பிரத்தியேகமான ஸ்பேஸ் சூட் கடந்த 2019 பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதை இரண்டு ஆண்டுகள் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரில் விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை செய்து உருவாக்கியுள்ளனர். இதில் ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதை விண்வெளிக்கு செல்லும் வீரர் சுமார் 60 நிமிடங்கள் வரை சுவாசிப்பதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ககன்யான் திட்டத்திற்காக இஸ்ரோ தற்போது சந்திராயன் 3 விண்கலத்தை அனுப்பிய அதே எல்விஎம் 3 ராக்கெட்டை தான் பயன்படுத்த போகிறது. இந்தத் திட்டத்திற்காக அரசு ரூபாய் 9,023 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்திற்காக விண்வெளி வீரர்களை தயார் செய்யும் பல்வேறு ஏற்பாடுகளை இஸ்ரோ செய்துள்ளது.
இஸ்ரோ விண்வெளி வீரர்களை தயார் செய்வதற்காக மட்டும் ரஷ்யாவில் உள்ள லீவ்காஸ்மோஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து பெங்களூருவிலும் ரஷ்யாவிலும் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி முதல் இரண்டு பயிற்சிகள் பெங்களூருவிலும் மூன்றாவது பயிற்சி ரஷ்யாவிலும் வழங்கப்பட உள்ளது.
விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க 40 பயிற்றுநர்களுடன் 218 வகுப்புகள் நடைபெற உள்ளது. இது போக 75 உடற்பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இவர்கள் விண்வெளியில் எப்படி நடந்து கொள்வது என்பதை அறிந்து கொள்ள இரண்டு இடங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டியதும் மேலும் 12 மணி நேரம் என இரண்டு முறை பறக்கும் பயிற்சியும் இரண்டு மெடிக்கல் டெஸ்ட் மற்றும் இரண்டு தேர்வுகளும் எழுத வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ககன்யான் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் இந்தியா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் நான்காவது பெரிய நாடாக இருக்கும். ஏற்கனவே அமெரிக்கா ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் வெற்றி பெற நாம் அனைவரும் இஸ்ரோ உடன் துணை நிற்போம்.


Click it and Unblock the Notifications
