இவர்கிட்ட மட்டும் எப்படி காசு கூடினே போகுது... அதானியின் புதிய ரூ.4 கோடி லக்சரி கார்!!
உலகின் 2வது பெரும் பணக்காரராக விளங்கும் கௌதம் அதானி புதியதாக ரேஞ்ச் ரோவர் லாங்-வீல்பேஸ் காரை வாங்கியுள்ளார். அப்படி இந்த காரில் என்ன சிறப்பு உள்ளது? இந்த ரேஞ்ச் ரோவர் காரின் விலை என்ன? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு உலகில் பல்வேறு வணிகங்கள் சரிவை நோக்கி சென்றன. அதில் இருந்து அவை தற்போது மெல்ல மெல்ல மீண்டு வந்தாலும், வைரஸ் பரவல் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் பல விதமான மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், பல கோடீஸ்வரர்கள் சரிவை கண்டுள்ளனர்.

ஆனால் நம் இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரரான கௌதம் அதானியின் கதையே வேறு. ஏனெனில், கடந்த சில வருடங்களில் இவர் அடைந்திருக்கும் வளர்ச்சி அபரிதனமானது என்றுதான் சொல்ல வேண்டும். குஜராத்தை சேர்ந்த கௌதம் அதானி பல வருடங்களாகவே பல்வேறு துறை வணிகங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் மூலமாக அவர் தற்சமயம் உலகின் 2வது பெரும் பணக்காரராக அங்கம் வகிக்கிறார்.

முகேஷ் அம்பானியை போன்று, கௌதம் அதானியும் விலைமிக்க சொகுசு கார்களை வாங்கி தனது கேரேஜில் அழகு பார்ப்பதை விரும்பக்கூடியவர். இதனாலேயே அதானியிடம் பல்வேறு ஸ்போர்ட்ஸ் கார்களும், லக்சரி கார்களும் உள்ளன. இதில் தற்போது புதியதாக இணைந்திருப்பது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆகும். லாங்-வீல்பேஸ் ரேஞ்ச் ரோவர் காரான இது தனது பிரபலமான வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

வீல்பேஸ் என்பது காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் ஆகும். லாங்-வீல்பேஸ் என்றால் சக்கரங்களுக்கு இடையே தூரம் அதிகமாக உள்ளது என அர்த்தம். அப்படியென்றால், காரின் நீளமும் அதிகமாகவே இருக்கும். லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார் ஷார்ட்-வீல்பேஸ் வெர்சனிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. அதானியின் புதிய லாங்-வீல்பேஸ் ரேஞ்ச் ரோவர் காரில் மொத்தம் 7 இருக்கைகள் உள்ளன.

அதானி தற்போது வாங்கியிருப்பது ரேஞ்ச் ரோவரின் ஆட்டோபயோகிராஃபி வேரியண்ட் ஆகும். இது ரேஞ்ச் ரோவர் காரின் வேரியண்ட் வரிசையில் மத்தியில் உள்ள வேரியண்ட் ஆகும். ரேஞ்ச் ரோவரின் ஆட்டோபயோகிராஃபி வேரியண்ட் இந்தியாவில் பெட்ரோல் & டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்கு கிடைக்கிறது என்றாலும், அதானி வாங்கியிருப்பது டீசல் என்ஜின் உடன் என கூறப்படுகிறது.

டீசல் என்ஜின் உடன் ரேஞ்ச் ரோவர் பயோகிராஃபி லாங்-வீல்பேஸ் காரின் விலை ஆனது தற்சமயம் ரூ.3.5 கோடி என்ற அளவில் உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. கூடுதல் ஆக்ஸஸரீகள் உடன், இன்ஸ்சூரன்ஸ், ஆர்டிஓ என அனைத்தையும் சேர்த்து பார்த்தால் ஆன்-ரோடு விலையானது எப்படியிருந்தாலும் ரூ.4 கோடியை தாண்டிவிடும். இவ்வளவு தொகை கொடுத்து வாங்கும் காருக்கு நிச்சயமாக கூடுதல் ஆக்ஸஸரீகளை வாங்கி பொருத்துவர்.

இருந்தாலும் அதானி சார்பில் ஏதேனும் கூடுதல் ஆக்ஸஸரீகள் காரில் பொருத்தப்பட்டுள்ளனவா என்ற விபரங்கள் இல்லை. ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி டீசல் வேரியண்ட்டில் பொருத்தப்படும் 3.0 லிட்டர் இன்லைன்-6 சிலிண்டர் டீசல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 346 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4-சக்கர-டிரைவ் சிஸ்டம் நிலையான தேர்வாக பொருத்தப்படுகிறது. ஏற்கனவே கூறியதுபோல், 4.4 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் தேர்விலும் ரேஞ்ச் ரோவர் கார் கிடைக்கிறது. இந்த சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 523 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறன் வரையில் காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது.

அதானி புதியதாக வாங்கியிருக்கும் ரேஞ்ச் ரோவர் காரின் வெளிப்பக்க படங்கள் மட்டுமின்றி, உட்புற கேபினை வெளிக்காட்டும் படங்களும் வெளிவந்துள்ளன. அவற்றின்படி பார்க்கும்போது, கருப்பு & பழுப்பு என ட்யூவல்-டோன் பெயிண்ட்டில், ப்ரஷ்டு அலுமினியம், மரப்பலகைகள் மற்றும் கருப்பு நிற இன்செர்ட்கள் உடன் காரின் கேபின் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் ரேஞ்ச் ரோவர் லக்சரி எஸ்யூவி காருக்கு லம்போர்கினி உருஸ், போர்ஷே கேயேன்னே கூபே மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் மேபக் ஜிஎல்எஸ் கார்கள் போட்டியாக விளங்குகின்றன. இந்த ரேஞ்ச் ரோவர் கார் மட்டுமின்றி பிஎம்டபிள்யூ 7-சிரீஸ், டொயோட்டா வெல்ஃபையர், ஆடி க்யூ7, ஃபெராரி கலிஃபோர்னியா மற்றும் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் போன்ற கார்களும் அதானியிடம் உள்ளன.


Click it and Unblock the Notifications








