மெக்லாரன் 750எஸ் காரை வாங்கிய இந்திய பணக்காரர்.. எந்த ஊருகாரருங்க ஒத்த காருக்கு இவ்ளோ பணத்த கொட்டியிருக்காரு!
இந்தியாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் உலகின் மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றான மெக்லாரன் 750எஸ் சூப்பர் கார் மாடலை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றிய விபரங்களையும், இந்த சூப்பர் காரின் விலை மற்றும் சிறப்புகள் பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
உலக புகழ்பெற்ற சூப்பர் கார் உற்பத்தி நிறுவனம் மெக்லாரன் (McLaren). இந்த நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக மெக்லாரன் 750எஸ் சூப்பர்கார் (McLaren 750S supercar) இருக்கின்றது. இந்த காரையே இந்தியாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர் வேறு யாரும் அல்ல சில மாதங்களுக்கு முன்னர் குடும்ப பிரச்னை காரணமாக சர்ச்சையில் சிக்கிய கவுதம் சிங்கானியாதான் அவர் ஆவார். ரேமண்ட் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சேர்மேன் இவரே ஆவார். இவர் ஓர் மிகப் பெரிய கார் காதலர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக இவரிடத்தில் மிக அதிக எண்ணிக்கையில் சூப்பர் மற்றும் அரிய வகை சொகுசு கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே அவருடைய சூப்பர் கார்களின் பட்டியலில் புதிதாக மெக்லாரன் 750எஸ் சூப்பர் காரை சேர்த்திருக்கின்றார். இது அவர் வாங்கும் மூன்றாவது மெக்லாரன் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும்.

ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்தால் அலங்கரித்து இருக்கும் மெக்லாரன் 750எஸ் சூப்பர் காரையே அவர் வாங்கி இருக்கின்றார். இது ஓர் அதிக திறனை வெளியேற்றும் சூப்பர் கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ ஃப்ளாட் பிளேன் வி8 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது அதிகபட்சமாக 750 பிஎஸ் பவரையும், 800 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்தகைய திறன் மிக்க காரிலேயே அவர் சமீபத்தில் மும்பையில் சாலையில் வலம் வந்திருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட படங்களே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இதன் வாயிலாகவே கவுதம் சிங்கானியா மெக்லாரன் 750எஸ் சூப்பர் காரை வாங்கியது உறுதியாகி இருக்கின்றது.

இந் கார் மணிக்கு 200க்கும் அதிகமான கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது ஆகும். இந்த வேகத்தை வெறும் 4.4 செகண்டுகளிலேயே அது தொட்டுவிடும். அதேவேளையில், 0-100 கிமீ வேகத்தை எட்ட அது 2.8 செகண்டுகளையே எடுத்துக் கொள்ளும். இந்த காரின் விலை ரூ. 5.91 கோடி ஆகும்.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனம் சென்ற ஆண்டே அதன் அதிகாரப்பூர்வ ஷோரூமை இந்தியாவில் தொடங்கியது. அதற்கு முன்னர் அது அதிகாரப்பூர்வ விற்பனையை இந்தியாவில் தொடங்கவில்லை. பலர் தங்களின் தேவைக்கு ஏற்ப இறக்குமதி செய்தே மெக்லாரன் காரை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையிலேயே அந்நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வருகையை பதிவு செய்தது. கவுதம் சிங்கானியாவிடம் மெக்லாரன் நிறுவனத்தின் சூப்பர் கார்கள் மட்டுமல்ல, இன்னும் பல கார் அரிய வகை கார் மாடல்கள் பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில், ஃபெர்ராரி 296 ஜிடிபி, மஸராட்டி எம்சி10 உள்ளிட்ட இன்னும் பல அரிய வகை கார்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கவுதம் சிங்கானியா மற்றும் அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களினாலேயே சொகுசு கார் பிராண்டுகள் மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும், இவர்களைப் போன்றோர் இந்தியாவில் இருக்கின்ற காரணத்தினாலேயே மெக்லாரன் போன்ற பிராண்டுகளும் இந்தியாவில் கால் தடம் பதித்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









